தடா வழக்கில் இருந்து 73 வயது அப்துல் கரீம் துண்டா விடுதலை

0

ஜனவரி 17, 1994 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு 150 கிலோ வெடிபொருட்களை ஐந்து நபர்களிடமிருந்து கைப்பற்றியதாக கூறியது.கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் அப்துல் கரீம் துண்டா இல்லாவிட்டாலும் இந்த வழக்கில் அவரின் பெயர் இணைக்கப்பட்டது.தடா சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
1999ல் அப்துல் ஹக்,அஃப்தாப்,அப்துல் வாகித், ஆஃபாக் மற்றும் அஃப்ரான் அகமது ஆகிய ஐந்து நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய பின்னரும் அவர்கள் மீதான தடா வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் சக குற்றவாளி ஒருவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் துண்டா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு கூறியது.துண்டாவின் சகோதரர் வீட்டில் இருந்துதான் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அங்குதான் துண்டாவும் தங்கியிருந்ததாகவும் அரசு தரப்பு கூறியது.
வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் துண்டாவை தொடர்பு படுத்த முடியாது என்று அவரின் வழக்கிறஞர் எம்.எஸ்.கான் வாதிட்டார்.மேலும் மற்ற ஐவர் மீதான தடா வழக்குகள் விலக்கப்பட்டுள்ளதால் துண்டாவை அந்த சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, சக குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும் துண்டாவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாகவும் மார்ச் 10 அன்று வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளார். ஆகஸ்ட் 2013ல் அப்துல் கரீம் துண்டாவை கைது செய்த காவல்துறை அவருக்கு முப்பதிற்கும் அதிகமான வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து துண்டா விடுவிக்கப்பட்ட போதும் மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தொடர்ந்து சிறையில்தான் இருப்பார்.

Comments are closed.