தனியுரிமை அடிப்படை உரிமை என்பது ஹாதியா வழக்கிலும் பொருந்தும் – நீதிபதி ஹரிபரந்தாபன்

0

ஹாதியா வழக்கில் கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்ந்தாமன், தனியுரிமை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பை சுட்டிக்காட்டி இது ஹாதியா வழக்கிலும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஒருவரின் வழிபாட்டு தேர்வு மற்றும் கணவனை தேர்ந்தெடுப்பது தனியுரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹாதியா வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்ணுரிமை மீது விழுந்த பேரடி என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “இந்தியாவில் இதுவரை ஹேப்பியஸ் கார்பஸ் மனுவின் மூலமாக ஒருவரது திருமணம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவது இதுவே முதன் முறை. ஒருவருக்கு வேலை இருக்கிறதா அல்லது அவர்கள் திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு கூற இயலாது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனைகள்.” என்று அவர் கூறியுள்ளார்.

தனியுரிமை குறித்து தீர்ப்பளித்த ஒன்பது பேர் கொண்ட பென்ச் இதனை குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை என்றாலும் கூட இது தொடர்பாக அளிக்கப்பட தீர்ப்பில் இருந்து இதனை தெளிவாகவே புரிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியான முடிவை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு இந்தியாவின் அனைத்து பெண்களுக்குமான தனியுரிமைக்கு மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹாதியா வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பிரபல பெண்ணியவாதி V.கீதா, ஹாதியாவின் வழக்கு மூலம் வலதுசாரி இந்து அமைப்புகள் தங்களின் சில குறிப்பிட்ட கலாச்சார கொள்கைகளை முன்னிறுத்தி இவ்வழக்கில் முன்னர் வெளியான தீர்ப்பிற்கு மதச்சாயம் பூச முயல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பு பிரச்சனைக்குரியது என்றும் அது ஒரு இளம் பெண்ணுடைய தேர்வு உரிமைகளை மறுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய அவர், “அவர் (ஹாதியா) எளிதில் பாதிப்படைய கூடிய வயதுடையவர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் எப்படி அத்தகைய வயதுடையவராக இருக்க முடியும்? அவருக்கு 24 வயது மற்றும் அவருக்கு தேவையான முடிவுகளை தனியே எடுக்கும் திறன் உள்ளவர்.” என்று கீதா தெரிவித்துள்ளார். ஹாதியா வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற நவம்பர் மாதம் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

Comments are closed.