தபோல்கர் கொலை வழக்கு: கைதாகும் இந்துத்வ தீவிரவாதிகள்

0

பிரபல பகுத்தறிவுவாதியான தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக பல கைதுகள் இதுவரை நடத்தப்பட்டாலும் அவ்வழக்கு பெரும் முன்னேற்றம் எதையும் எட்டாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மும்பை தீவிரவாத தடுப்புப் படை, பல இடங்களில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டியிருந்த மூன்று நபர்களை செய்த நிலையில் இவ்வழக்குகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதலில் ஈடுபட இருந்த வைபவ் ரவுத் என்ற பசு பாதுகாவல் கும்பலின் தலைவன், சரத் கலஸ்கர் மற்றும் சுதன்வா கொந்தலேகர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தபோல்கரின் கொலை வழக்கில் தனக்கு நேரடி பங்கு உள்ளதை கலஸ்கர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் சச்சின் அந்துரே என்ற அவுரங்காபாத்தை சேர்ந்த மற்றொருவருக்கு பங்கு இருப்பதை அவர் தீவிரவாத தடுப்புப் படையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தீவிரவாத தடுப்புப் படை அவரிடம் மேலும் விசாரிக்க, தாங்கள் இருவரும்  தான் தபோல்கரை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து சென்று கொலை செய்ததாக கலஸ்கர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்துரேவை தீவிரவாத தடுப்புப் படையினர் அவுரங்காபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கலஸ்கர் கூறிய தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின் இது குறித்து சிபிஐ க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தீவிரவாத தடுப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சச்சின் அந்துரேவிடம் தபோல்கர் கொலை வழக்கு குறித்து நடத்தப்பட்ட கூடுதல் விசாரணையில் ஜல்னா முனிசிபாலிட்டி கார்பரேஷனின் முன்னாள் உறுப்பினரான ஸ்ரீகாந்த் பங்கர்க்கரின் பெயர் குறிப்பிடப் பட்டதாக தெரியவந்துள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்ட போது அந்துரே சென்ற இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பங்கர்க்கர் இருந்ததாக அந்துரே விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் தான் வெடிபொருட்களை தயார் செய்து சேமித்து வைக்க பங்கர்க்கர் தனக்கு உதவியதாகவும் அவர் விசாராணியில் தெரிவித்துள்ளார். சிவ சேனா அமைப்பின் முன்னாள் உறுபினரான ஸ்ரீகாந்த்  பங்கர்க்கர் மீது வெடிபொருட்கள் சட்டத்தின் கீழும் UAPA சட்டத்தின் கீழும் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்கர்க்கருக்கும் சிவ சேனா கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தற்போது தங்களது கட்சியில் இல்லை என்றும் சிவ சேனா தெரிவித்துள்ளது. ஆனால் சிவ சேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் அர்ஜூன் கோத்தார், பங்கர்க்கர் சிவ சேனா கட்சியை சேர்ந்த பலருடன் தொடர்பில் தான் இருந்தார் என்றும் சனாதன் சன்ஸ்தா உடனான தனது ஈடுபாட்டையும் அவரது வெடிகுண்டு திட்டங்கள் குறித்தும் பங்கர்க்கர் பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களில் பங்கர்க்கரை அர்ஜூன் கோத்தார் சில முறை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் கோத்தார் மேலும் கூறுகையில், “அவருடனான எனது உரையாடலில் அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று நான் கேட்டேன். அப்போது அவர், தான் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் இணைந்து அஸ்ஸாம், கோவா மற்றும் மேலும் சில மாநிலங்ளில் பணியாற்றி வருவதாகவும் அங்கு பெரும் கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.” என்று கூறியுள்ளார். மேலும் சில தினகளுக்கு முன்னர் சிவ சேனாவின் மும்பை தலைவரான பாஸ்கர் அம்பேக்கரை பங்கர்கர் சந்தித்தார் என்றும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், வரும் காலங்களில் சிலவற்றை எதிர்பாருங்கள் என்று கூறி குண்டு வெடிப்புகள் பற்றி அவர்கள் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இவை எங்கு எங்கு எப்படி என்ற விபரங்களை பங்கர்க்கர் வெளியிடவில்லை என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார். இன்னும் அப்போது பங்கர்க்கர் கூறியது உண்மைதானா என்பது கூட தங்களுக்கு தெரியாது என்றும் அதனை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 இல் பங்கர்க்கருக்கு சிவ சேனா கட்சி சார்பில் போட்டியிட இடமளிக்கப்படவில்லை என்றும் அதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.