தபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ

0

தபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ

தபோல்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து அவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பாம்பே உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

கோவிந்த் பன்சாரே மற்றும் தபோல்கரின் கொலை வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பு கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் அளித்த மனு மீதான விசாரணையில் சிபிஐ இதனை தெரிவித்துள்ளது.

சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் அணில் சிங், இந்த வழக்கு விசாரணைக்காக சிபிஐ நவம்பர் 18 ஆம் தேதியை காலக்கெடுவாக வைத்துள்ளது என்றும் அதன் பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிபதி S.C.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி B.P. கோலாபவல்லா அடங்கிய டிவிஷன் பெஞ்சிடம் தெரிவித்தார். மேலும் இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி அனைத்து முன்னெச்சரிக்கைகளை கையாண்டு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்கை சிபிஐ மற்றும் மாநில CID தனித்தனியே விசாரித்து தங்களது விசாரணை அறிக்கைகளை சீலிடப்பட்ட உரைகளில் நீதிமன்றத்தில் கடந்த புதன் கிழமை சமர்ப்பித்தது. சிறப்பு புலனாய்வுத்துறை தங்களது அறிக்கையில் 7 குற்றவாளிகளை குறிப்பிட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் சில நபர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்தால் இவ்வழக்கின் விசாரணை மேலும் முன்னேறும் என்று SIT தரப்பு வழக்கறிஞர் அசோக் முந்தர்கி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பன்சாரே மற்றும் தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிட வேண்டாம் என்று மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை தலைவர் அதுல் சந்திர குல்கர்னியிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் கர்நாடகாவில் நடைபெற்ற குற்றங்களும் தொடர்பு உள்ளதா என்று சிபிஐ விசாரித்து வரும் வேளையில் அதுல் சந்திர குல்கர்னி பத்திரிகையாளர்களிடம் விசாரணை குறித்த தகவலை தெரிவித்து வருகிறார் என்றும் இது குறித்து அவர் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி தபோல்கர் புனேவில் கொலை செய்யப்பட்டார். 2015 பிப்ரவரி 20 ஆம் தேதி கொல்ஹாபூரில் பன்சாரே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விரேந்திர தாவ்டே, சுதன்வா கொந்தலேக்கர், வைபவ் ரவுத், சச்சின் அந்துரே, சரத் கலஸ்கர், ஸ்ரீகாந்த் பங்கர்கர் மற்றும் அவினாஷ் பவார் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை நவம்பர் மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.