தரகு முதலாளிகளின் தரகர், மிஸ்டர் ரிலையன்ஸ் மோடி

0

இந்தியாவை தொழில் வளர்ச்சியில் முன்னேற்றமடையச் செய்த முன்னோடி பிரதமர் யார்?

நான்தான் என மார்தட்டிக் கொள்கிறார் நரேந்திர மோடி. பாதுகாப்பு துறையில் கூட நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்ததை, தொழில் வளர்ச்சியின் அடையாளமாக அவர் பெருமிதம் பொங்கச் சொல்கிறார்.

அந்நிய முதலீட்டுக்கும், பகாசுர முதலாளிகளுக்கும் காங்கிரஸ் அரசு திறந்து விட்ட பாதையில், விரைவாக முக்கிய மைல்கற்களை எட்டியிருக்கிறார் மோடி. அதன் பிரதிபலிப்புதான் ரிலையன்ஸ் விளம்பர தூதர் அவதாரம்.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், ஜியோ விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்தியதை, பிரதமர் அலுவலகம் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, இந்திய பெரு முதலாளிகள் அந்நிய ஆக்கிரமிப்பை பெரிய அளவில் எதிர்க்கவில்லை. இந்திய முதலாளிகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் பல்வேறு உத்திகளை கடைபிடித்தனர். பிரிட்டிஷ் மூலதனத்தை, இந்திய முதலாளிகளுக்கு காட்டி, தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இவ்விதம் காலனி நாட்டில், ஆதிக்கவாதிகளின் நலன்களுக்கு ஆதரவளித்து ஊழியம் புரியும் முதலாளிகள் தரகு முதலாளிகள் என அழைக்கப்படுகின்றனர்.

1890-ம் ஆண்டு ஆங்கிலேயர்களே வலிந்து கேட்டுக் கொண்டதன் பேரிலேயே டாடா குழுமம், இரும்பு உருக்குத் தொழிற்சாலையை (TISCO) தொடங்கியது. டாடா தரப்பில் தயக்கம் காட்டிய போதிலும், அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக ஆங்கிலேய அரசு வாக்குறுதி அளித்தது.

இதே போல, இந்திய பெருமுதலாளிகளின் நிறுவனத்தில், ஆங்கிலேயர்கள் பெருமளவு பங்குகளை வைத்திருந்தனர்.

இதே உத்தியைத்தான் சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் கட்சியைப் போல, அதனை விடவும் முனைப்பாக செய்து வருகிறது பாஜக.

அந்நிய முதலீடுகளைக் காட்டி இந்திய தரகு முதலாளிகளை ஆங்கிலேயர்கள் வளைத்ததைப் போல, கட்சிக்கு நிதி ஆதாரத்தை வலுவாக்க இந்திய வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கின்றன காங்கிரசும் பாஜக-வும்!

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தால், தரமற்ற நிறுவனம் என வரையறை செய்யப்பட்ட, வெறுமனே இரண்டரை கோடி ரூபாய் மட்டும் சொத்து மதிப்பு கொண்ட Infotel என்ற நிறுவனம், 2010-ம் ஆண்டு 4G அலைக்கற்றை உரிமத்தை, 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய் செலுத்தி பெறுகிறது.

Infotel நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை எதனையும் வழங்காத நிலையில்,
2013-ம் ஆண்டு, அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் கையகப்படுத்துகிறது.

Infotel நிறுவனத்திடமிருந்து பெற்ற 4G அலைக்கற்றை உரித்தை பயன்படுத்தி JIO என்ற பெயரில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தொலைத்தொடர்பு துறையில் பிரம்மாண்டமாக கால்பதித்தது ரிலையன்ஸ்.

வளர்ச்சி நாயகன் என மார்தட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி பிரதமரான பின், சமயம் பார்த்து JIO  களமிறக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் நிதியுதவியைப் பெற்று வருகின்றன. அதற்கேற்ப பிரதியுபகாரத்தை ஆளும் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு செய்து தரும்.

இது தொடர்பாக, Association for Democratic Reforms என்ற அமைப்பு வெளியிட்ட தகவல் படி, கார்ப்பரேட்டுகளிடமிருந்து 2014-ம் ஆண்டு பாஜக 588 கோடி ரூபாயை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 350 கோடி ரூபாயை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது, பாஜக-வை விட அதிக தொகையைப் பெற்றுள்ளது.

நாட்டை இதுவரை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியும், கார்ப்பரேட்களிடம் வாங்கிய கட்சி வளர்ச்சி நிதிக்காக நன்றிக் கடன் செலுத்தியுள்ளது.

ஆனால் மோடி எதிலுமே கொஞ்சம் வித்தியாசமானவர் அல்லவா?! அதனால் கார்ப்பரேட்டுகளின் கால்களைக் கழுவி, பட்ட கடனைத் தீர்ப்பதற்காக திட்டங்களை அறிவித்து, அதனை ஓர் அதிகாரப்பூர்வ அரசு நடைமுறை ஆக்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றிற்கு பெயர்தான் DIGITAL INDIA. இதே போல அவர் அறிவித்திருக்கும் ஸ்வச் பாரத், ஸ்டாண்ட் அப், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களும் மறைமுகமாக கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லுக்கு 4G அலைக்கற்றை வழங்கப்படவில்லை. 20 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வழங்காமல், அதனை விட குறைவான அலைவரிசையைக் கொடுத்ததால், எதிர்பார்க்கப்பட்ட இணைய வேகம் கிடைக்கவில்லை. இதனால் 2013-ம் ஆண்டு 4G சேவையை அரசிடமே பிஎஸ்என்எல் திரும்ப ஒப்படைத்து விட்டதாக அந்நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அரசு நிறுவனத்தை ஏமாற்றி விட்டு, ரிலையன்சுக்கு, புற வாசல் வழியாக 4G வசதி கிடைக்கப் பெற்றதில் உள்ள உள்ளர்த்தம் என்ன? கார்ப்பரேட் விசுவாசம்தானே…!

தற்போது ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் சலுகைகளை விட, சிறப்பான சலுகைகளை பிஎஸ்என்எல் அளித்து வருவதை சற்று ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாமல், தனியார் உதவியோடு பேருந்து, ரயில் நிறுத்தங்களில் வைஃபை வசதி செய்து கொடுப்பதுதான் வளர்ச்சி என விளம்பரம் செய்கிறது மோடி அரசு. மக்களும் சிரங்கு வந்தவர்கள் போல மொபைலை நோண்டிக் கொண்டு, வேகமான இணைய சேவைக்கு அடிமையாகி மோடி வளர்ச்சியின் நாயகன்தான் என நம்புகிறார்கள்.

ஆனால் –
கிருஷ்ணா-கோதாவரி படுகையில் விதிமுறைகளை மீறி, இயற்கை எரிவாயுவை எடுத்ததற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்ட ஒரு நிறுவனம்,

பொதுத்துறை வங்கிகளில் 45 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, இன்னும் திருப்பிச் செலுத்தாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிற ஒரு நிறுவனம்தான் ரிலையன்ஸ் நிறுவனம் என்பதையும், அதன் விளம்பரப் பொருளாகியிருக்கிறார் பாரதப் பிரதமர் என்பதையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

கார்ப்பரேடுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படுகிற ஆட்சிதான் இது என்பதை இன்னும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது மோடி தோன்றிய ஜியோ விளம்பரம்.

– ரிழா

Comments are closed.