தலைகுனிந்த நீதி

0

தலைகுனிந்த நீதி

பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்த முஸ்லிம்களை நிராசைப்படுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 1992 டிசம்பர் 6ல் சங்பரிவாரின் தசை பலத்தால் மஸ்ஜிதின் கட்டிடத்தை முஸ்லிம்கள் இழந்தனர். 2019 நவம்பர் 9ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் வக்ஃப் நிலத்தையும் இழந்துள்ளனர். பாபரி மஸ்ஜித் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நிலத்தின் உரிமை மத்திய அரசு நியமிக்கும் அறக்கட்டளைக்கு சொந்தமாகும். முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலை கட்ட அயோத்தியில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பள்ளிவாசல் என்பது புனிதமானது, இறைவனின் இல்லம் என்பதே அவர்களது நம்பிக்கை. பள்ளிவாசலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்தை மாற்றவோ, வேறு தேவைகளுக்கு வழங்கவோ கூடாது என்பது இஸ்லாமிய சட்டம். பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அயோத்தியாவில் பள்ளிவாசல் கட்டப்பட்டதையும், அது நான்கு நூற்றாண்டுகள் நிலைப்பெற்றிருந்ததையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

அனைத்து மதங்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கடமை என்றும் பக்தர்களின் உணர்வை மதிப்பதாகவும் கூறி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கத் துவங்கியது. ஆனால், ராமர் கோயில் பக்தர்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு மஸ்ஜிதின் நிலத்தை இந்துத்துவாவினருக்கு விட்டுக்கொடுத்த நீதிமன்றத்திற்கு வக்ஃப் நிலம் தொடர்பான முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியவில்லை. அயோத்தியில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி பள்ளிவாசலை கட்டுவது முஸ்லிம்களுக்கு கடினமான காரியமல்ல. அவர்கள் நிலத்தை கோரி நீதிமன்றத்தை அணுகவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மஸ்ஜிதின் நிலமாக அங்கீகரிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுத்தரவே அவர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள்.

அரசியல் சாசனம் உறுதியளிக்கும் நம்பிக்கை சுதந்திரம், மத சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு முதலானவற்றை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பலவீனப்படுத்துகிறது. ஜனநாயக கட்டமைப்பில் நீதிமன்றங்களுக்கான கண்ணியத்தை எப்போதும் முஸ்லிம்கள் அளித்தே வந்துள்ளனர். பாபரி மஸ்ஜித் வழக்கில் அவர்கள் எந்தவொரு சலுகையையும் கோரவில்லை. மாறாக, ஆவணங்கள், உண்மைகள் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும். ஆனால், துவக்கத்திலிருந்தே நீதிமன்றத்தை மதிக்காமல் பள்ளிவாசலை பட்டப்பகலில் இடித்து தள்ளிவிட்டு நீதிமன்றத்திற்கே சவால் விட்டவர்கள் இந்துத்துவாவினர். நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அமைதி காத்து வந்த முஸ்லிம்களுக்கு உச்சநீதிமன்றம் பெரும் அநீதியை இழைத்துள்ளது. சீராய்வு மனுவில் இந்த தவறை உச்சநீதிமன்றம் திருத்த வேண்டும். இல்லையெனில் இந்திய நீதித்துறை மீது படிந்துள்ள கறை ஒருபோதும் நீங்காது.

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது எனில் அந்த முடிவை பற்றி மூச்சு விடக்கூடாது என்ற பொதுக்கருத்து இங்கு நிலவுகிறது. ஜனநாயகம் என்பது விமர்சனப் பாங்கு என்பதின் மறு உருவம். பூமிக்கு மேலே வானத்துக்கு கீழே உயிர்ப்பு அசைவுள்ள எக்கருத்தினையும் விமர்சிக்கும், ஆய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறையும், நெறிமுறையும்தான் ஜனநாயகம். எனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பதில் தவறேதும் கிடையாது.

Comments are closed.