தலைநகரை அதிரவைத்த குரல்கள்

0

தலைநகரை அதிரவைத்த குரல்கள்

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்த உடனேயே அதன் ஆபத்தை புரிந்துகொண்டு அலிகர் பல்கலைக்கழக மாணவர்களே முதலாவதாக எதிர்ப்பை பதிவு செய்தனர். அங்குள்ள மாணவர்கள் குழு ஒன்று சிற்றுண்டி விடுதியில் உணவை சாப்பிடாமல் புறக்கணித்து தங்களது எதிர்ப்பை துவக்கியது. இந்திய சுதந்திர போராட்டம் நடந்த காலக்கட்டத்தில் பிரிட்டீஷாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கல்வி நிறுவனம் அலிகர் பல்கலைக்கழகம். அதற்கு மாற்றாகத்தான் டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

பிரிட்டீஷ் காலனியாதிக்க ஆட்சியை ஆதரித்த மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான எதிர்த்து நிற்றலாகவே டெல்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா உருவானது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ஏற்படுத்திய உணர்ச்சி தாக்கத்தின் விளைவாக முஹம்மது அலி ஜவஹர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஜாமிஆ மில்லியாவை நிறுவினர். அன்று இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர்களும், அங்குள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் தேசிய இயக்கத்துடன் இணைந்து சுதந்திரத்திற்காக போராடியது ஒரு வரலாறாகும். இப்போது அதே கல்வி வளாகம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறப்போகும் ஒரு மாபெரும் புரட்சிக்கும் வித்திட்டுள்ளது.

அரசியல் சாசனம் சவாலை சந்திக்கும் இவ்வேளையில் அதனை பாதுகாப்பதற்காக அந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் வீதிகளில் இறங்கி உரக்க முழக்கமிட்டனர். நாட்டில் உள்ள இதர கல்வி வளாகங்களும், வீதிகளும் அந்த முழக்கத்தை ஒலிக்கத் துவங்கியுள்ளன. இப்போது அந்த முழக்கம்  மத்திய அரசுக்கு எதிரான கோப அலைகளாக நாடு முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டவுடனேயே அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் துவக்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் குதித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது.

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பின்னர் மதச்சார்பின்மை நம்பிக்கையாளர்களின் கடைசி நம்பிக்கையான மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவிற்கு ஒப்புதலை அளித்தவுடன் சட்டமானதை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இவ்வேளையில் ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி கண்டன பேரணியை அறிவித்தனர். நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட பேரணியை காவல்துறை தடுக்கவில்லை. அதற்கு மாறாக அரசின் உத்தரவின் பேரில் அதனை எதிர்கொண்டது.

கண்டன பேரணியை லத்தியும், கண்ணீர் புகையும் பயன்படுத்தி கலவரமாக மாற்றியது. காவல்துறையினரே அரசு பேருந்துகளுக்கு தீவைத்தனர். இதிலும் ஆத்திரம் அடங்காத காவல்துறை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கண்ணில் கண்ட மாணவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியது. ஜாமிஆ மில்லியாவில் உள்ள நூலகம் மற்றும் அதனையொட்டிய வாசக சாலை ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த பள்ளிவாசலை சேதப்படுத்தியது. நூலகத்தில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதோடு கையில் கிடைத்த மாணவர்கள் அனைவரையும் கைது செய்தது. ஜாமிஆ மில்லியாவின் முஸ்லிம் பெயரை பயன்படுத்தி காவல்துறையின் அட்டூழியத்தை அரசு நியாயப்படுத்தியது.

ஆனால், நாட்டின் இதர பல்கலைக் கழக வளாகங்கள் அந்த இரவில் (டிசம்பர் 15) தூங்கவில்லை. மாணவர்கள் யூனியனின் தலைமையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் வீதிகளில் போராட களமிறங்கினர். அவர்கள் டெல்லி காவல்துறை தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். காவல்துறையின் அட்டூழியத்திற்கு எதிராக உரக்க கோஷமிட்டனர். காவலில் எடுத்த அனைத்து மாணவர்களையும் விடுவிக்கும் வரை அவர்கள் காவல்துறை தலைமையகத்தின் முன்பாக அமர்ந்து முழக்கமிட்டனர். இரவு 3 மணிக்கு காவல்துறை அனைத்து மாணவர்களையும் விடுவித்தது.

மறுநாள் காலை விடிந்தவுடன் நாடு பெரும் போராட்டங்களுக்கு சாட்சியம் வகித்தது. நாட்டின் அனைத்து கல்வி வளாகங்களும் மாணவர்களின் போராட்டத்தால் திணறின. ஜாமிஆ மில்லியா மாணவர்களுக்கு தோழமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்வி வளாகங்களும், வீதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. ஜெ.என்.யூ. டெல்லி, அம்பேத்கர், பல்வேறு ஐ.ஐ.டி.க்கள், எய்ம்ஸ்கள், ஹைதராபாத் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், உ.பி.யில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து வீதிகளும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கத்தால் அதிர்ந்தது. இப்போது அந்த முழக்கங்கள் அரசுகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.

வீதிகளில் மாணவர்களின் போராட்டத்தை தடுப்பதற்கு டெல்லியில் அரசு போக்குவரத்தை தடை செய்தது; இணையத்தை முடக்கியது. இடதுசாரி அமைப்புகளின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் ஜந்தர் மந்தரில் நடந்தது. மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால், மாணவர்கள் பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்து வந்து ஜந்தர்மந்தர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஜாமிஆ மாணவர்களின் செங்கோட்டையை நோக்கிய பேரணியையும் காவல்துறை தடுத்தது. எனினும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் செங்கோட்டையின் அருகே அணி திரண்டனர். மாணவர் போராட்டங்களை எதிர்கொள்ள இந்த தந்திரங்கள் போதாது என்பதை அரசு தற்போது உணர்ந்துள்ளதாக நம்புகிறோம். உலகில் எந்த அரசும் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி விட்டு கடந்து செல்ல முடியாது என்ற வரலாறு மீண்டும் ஒருமுறை இந்தியாவில் நிரூபணமாகும்.

தமிழில்: செய்யது அலி

Comments are closed.