தாஜ்மஹாலில் தொழுகை நடத்தத் தடை: இந்திய தொல்லியல் துறை

0

தாஜ்மஹாலில் தொழுகை நடத்தத் தடை: இந்திய தொல்லியல் துறை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் வெள்ளிக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் தொழுகை நடத்த இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் பொதுமக்கள் பார்வைக்கு அடைக்கப்படும் தாஜ்மஹாலில் மதியம் 12 முதல் 2 மணியளவில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தொல்லியல் துறையின் இந்த முடிவு பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்த முடிவு கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி செயல் படுத்தப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, பாதுகாப்பு காரணங்களுக்காக என்று கூறி தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனைத்து மக்களுக்கும் அனுமதி மறுத்து அப்பகுதி நிர்வாகம் அளித்த உத்தரவை உறுதி செய்தது.

தற்போது வரை தாஜ்மஹாலை கட்டணம் செழுத்தி பார்வையிட வரும் பார்வையாளர்கள் அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியும். ஆனால் தற்போதைய இந்த உத்தரவின் படி பள்ளிவாசலில் தொழுகைக்காக வைக்கப்பட்டிருக்கும் உழு தொட்டியை அதிகாரிகள் மூடியுள்ளனர். தொழுகைக்கு செல்பவர்கள் இங்கு தான் தங்களை தொழுகைக்காக சுத்தப்படுத்தி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்துள்ள தாஜ்மஹால் இந்தெஜாமியா கமிட்டி, பல்லாண்டு கால வழக்கத்தை ஏன் திடீரென்று நிறுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளவர்களின்முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவத்தின் வெளிப்பாடு தான் இது என்று TMIC இன் தலைவர் இப்ராஹீம் ஹுசைன் சைதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளை தான் சந்திக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறிப்பிட்ட பள்ளிவாசலின் இமாம் மற்றும் பிற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மட்டுமே பள்ளிவாசலுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசலில் தொழுகை நடத்த முயன்ற சில மாணவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களின் இந்த முடிவு குறித்து விளக்கமளிக்க தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்த் சவ்ர்ங்கர் மறுத்துள்ளார்.

2018 ஜனவரி மாதம் இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்த வரும் அப்பகுதி மக்கள் தங்களது அடையாள அட்டையை கொண்டு வருமாறு ஆக்ரா நிர்வாகம் உத்தரவிட்டது.

நிர்வாகத்தின் இந்த முடிவு, இந்தியர் அல்லாத பங்களாதேஷை சேர்ந்தவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த வருவதாக கூறி நுழைந்துவிடுகின்றனர் என்றும் அதனை தடுக்கவே இது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாஜ்மஹாலின் பாதுகாப்பு மட்டுமே தாலயாயமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

Comments are closed.