தானாக வெடித்த குண்டுகள்!

0

 – ரியாஸ்

முக்கிய செய்தி: நவம்பர் 10,2007 அன்று பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர். நோன்பு திறக்கும் நேரத்தை எதிர்பார்த்து முஸ்லிம்கள் காத்திருந்த சமயம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.வை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘வெடிகுண்டுகளை தயாரிக்க தேவையான பல்வேறு பொருட்கள் பல்வேறு இடங்களில் இருந்து தானாகவே ஒன்று சேர்ந்து வெடிகுண்டாக உருமாறின.

இந்த வெடிகுண்டுகள் தானாக அஜ்மீர் தர்காவிற்கு வந்து அவையாகவே குறிப்பிட்ட இடங்களில் சென்று அமர்ந்து கொண்டன. பின்னர் அவை குறித்த நேரத்தில் வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் மனிதர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர். இந்த அதிசயமான குண்டுவெடிப்பை குறித்து மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

மேலே உள்ள இரண்டு பத்திகளில் நாம் கூறியிருப்பது ஒரு கற்பனை செய்திதான். ஆனால், இந்த கற்பனை வெகுவிரைவிலேயே உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்தைத்தான் அஜ்மீர் தர்கா உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளின் விசõரணையின் போக்கு நமக்கு ஏற்படுத்துகின்றன.

அஜ்மீர் தர்கா வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவருவதுதான் நமது அச்சத்திற்கு காரணம். சென்ற வருடம் ஜூன் மாதத்தில் இருந்து இவ்வருட ஜூலை மாதம் வரை இந்த வழக்கின் 19 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். அதாவது, மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்த பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 15 சாட்சிகள் சி.ஆர்.பி.சி. பிரிவு 164ன் கீழ் நீதிபதி முன் சாட்சியம் வழங்கியவர்கள். இவர்களில் மூவர் பின்னர் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த பதினைந்து நபர்களில் பதினான்கு பேர் தற்போது தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கூறியுள்ளனர், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பும் நீதிபதி முன்பும் தாங்கள் வழங்கிய சாட்சியத்தை நிதிமன்றத்தில் மாற்றிக் கூறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் முக்கிய சாட்சிகள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அஸ்வினி சர்மா தெரிவித்துள்ளார். தற்போது பிறழ் சாட்சிகளாக மாறி வரும் பெரும்பான்மையினர் ஏதேனும் ஒரு வகையில் சங்பரிவார் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள்.

வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய தீவிரவாதிகளை தாங்கள் நேரில் கண்டதையும் அவர்கள் பயிற்சி அளித்ததை கண்ணால் கண்டதையும் சõட்சியங்களாக பதிவு செய்தவர்கள். தற்போது அவற்றையெல்லாம் இல்லவே இல்லை என்று கூறிவிட்டனர். இவர்களை தவிர்த்து மற்ற சõட்சிகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தரப்பை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கு பலஹீனமான நிலைக்கு சென்றுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் கூறினார்.

பிறழ் சாட்சிகளாக மாறியவர்களில் ஒருவரான ரன்தீர் சிங் என்பவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் அங்கத்தினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் விகாஸ் மோச்சா கட்சி சார்பாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். பிப்ரவரி மாதம் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

2007ல் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை 2011ல் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் சõட்சிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் பல்வேறு வழக்குகளை தொடுத்து கால தாமதம் செய்து வந்தனர். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியே அவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கு விசாரணை சற்று வேகம் பிடித்தது. வழக்கை நீர்த்துப் போக செய்வதற்குதான் இந்த வேகம் காட்டப்பட்டது என்பது இப்போதுதான் புரிகிறது.

முக்கிய சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள நிலையில் வழக்கின் விசாரணை அடுத்து எந்த திசைக்கு நகரும் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரான ரோஹினி சாலியான் தெரிவித்த கருத்துகளை தொடர்ந்து அஜ்மீர் தர்கா வழக்கின் விசாரணை வெளியுலகிற்கு தெரிய வந்தது. மாலேகான் 2008 வழக்கின் விசாரணையில் மென்மையான போக்கை கடைபிடிக்குமாறு தன்னை என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் நிர்ப்பந்தித்ததை தொடர்ந்து சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. தொடர்ந்து என்.ஐ.ஏ. சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து ரோஹினியின் பெயர் நீக்கப்பட்டது.

ரோஹினியின் கூற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்ததுடன் அவ்வாறு அவருக்கு எத்தகைய அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தேவையற்ற புகார்களை அளிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், தன்னிடம் ஆதாரங்கள் ஆணித்தரமாக உள்ளதாக ரோஹினி தெரிவித்துள்ளார். “நான் கிரிமினல் வழக்குகளுக்காக ஆஜராகுபவர். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல. அவர்களின் எண்ணங்கள் குறித்து எனக்கு தெளிவாக தெரியும் வரை காத்திருந்தேன். தற்போதுதõன் அதற்கான காலம் வந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இதன்பின்னர் என்.ஐ.ஏ. தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் சம்பந்தப்பட்ட வெடிகுண்டு வழக்குகளின் விசாரணை போக்கிலும் மாற்றம் ஏற்பட்டதõக ரோஹினி முன்னர் தெரிவித்திருந்தார். மூன்று தசாப்தங்களாக சட்டத்துறையில் பணியாற்றி வரும் ரோஹினி, மஹாராஷ்டிரா அரசிற்காக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார். எனவே, இவர் கூற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2008ல் தனது அரசு தரப்பு வழக்கறிஞர் பணிக்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் ரோஹினி. எண்ணிலடங்கா பொய் வழக்குகள் அணிவகுத்து வந்ததுதான் அவரின் முடிவுக்கு காரணமாக இருந்தது. ஆனால், முன்னாள் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹேமந்த் கர்க்கரே சமர்ப்பித்த ஆவணங்கள் அவரின் முடிவை மாற்ற வைத்தன. 2006ல் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட மாலேகானில் மீண்டும் 2008ல் குண்டுவெடித்தது. மற்றவர்களை போன்று இது முஸ்லிம்களின் கைவரிசைதான் என்றே முதலில் ரோஹினியும் நம்பினார். ஆனால், ஹேமந்த் கர்கரேயின் நியாயமான விசாரணை உண்மை குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டியது. இந்துத்துவ தீவிரவாதம் வெளியே வந்தது.

தீவிரவாதி சுதாகர் திவேதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை கர்கரே சமர்ப்பித்த போது ரோஹினி அதிர்ந்து போனார். “இது ஒரு உண்மையான வழக்கு. ஒரு இந்து தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்கு” என்று கர்கரே அவரிடம் கூறினார். அனைத்து ஆதாரங்களையும் கவனமாக படித்த ரோஹினி உண்மைகளை அறிந்து கொண்டார். விளைவு, 2006 குண்டுவெடிப்பிற்காக தவறுதலாக கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது முஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த ஒன்பது நபர்களுக்கு எதிராக மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையும் சி.பி.ஐ.யும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தன.

வழக்கின் விசாரணை ஏப்ரல் 2011ல் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு இருந்த பங்கு குறித்து அசிமானந்தாவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார். மே 22,2013ல் இந்த வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது. சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சாங்ரா, ரமேஷ் மஹால்கர், சந்தீப் தாங்கே ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து முதலில் கைது செய்யப்பட்ட ஒன்பது முஸ்லிம்களும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களின் ஜாமீனிற்கு ரோஹினி எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மும்பை ரயில் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட இருவரை தவிர்த்து மற்ற ஏழு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் வழக்கில் இருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் 2008 வழக்கில் அரசு வழக்கறிஞராக ரோஹினி நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிதாக ஒரு நபர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார். ஆனால், புதிதாக நியமிக்கப்படும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். ஏனென்றால் வழக்கின் அனைத்து விபரங்களையும் அவர் ஆரம்பத்தில் இருந்து படித்து விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகா, இந்த வழக்கும் ஒன்றும் இல்லாமல் ஆகக் கூடிய நிலைக்கு சென்றுவிடும் என்றே தெரிகிறது.

மூடப்பட்ட மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கு

மாலேகானில் குண்டுவெடித்த மறுதினம், அதாவது, செப்டம்பர் 29,2008 அன்று குஜராத் மாநிலம் மொடாஸாவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதில் ஸைனுதீன் கோரி என்ற 15 வயது மாணவன் பலியானான். பத்து நபர்கள் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த குஜராத் மாநில சபர்கந்தா காவல் நிலையம் ஏப்ரல் 26, 2010ல் வழக்கை மூடியது.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் அப்போதைய மாநில மோடி அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டு வந்தது. ஒரு வழியாக, இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு, ஜூன் 2010ல் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது. இந்த குண்டுவெடிப்பிற்கும் மாலேகான் குண்டுவெடிப்பிற்கும் மத்தியில் பல்வேறு ஒற்றுமைகள் இருந்தன. குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நேரம், பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வெடிகுண்டுரகம் என அனைத்தும் இவற்றை நடத்தியது ஒரே குழுதான் என்பதை தெளிவாகக் காட்டின.

இந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப் தாங்கே மற்றும் ராம்ஜி கல்சாங்ரா ஆகியோர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மாலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளிலும் இவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் குறித்த தகவல்களை தருபவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் சன்மானத்தையும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை இருவரும் பிடிக்கப்படவில்லை. இருவரை குறித்து எந்த தகவலும் இல்லை.

2010ல் இருந்து இந்த வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ. எவ்வித முன்னேற்றத்தையும் விசாரணையில் காணாமல் இந்த வழக்கை தற்போது மூடியுள்ளது. போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை, முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே, வழக்கை முடித்துக் கொள்கிறோம் என்று கூறியது என்.ஐ.ஏ. இவர்களின் கூற்றை என்.ஐ.ஏ. நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் சேசிஸ் நம்பரை என்.ஐ.ஏ.வால் கண்டுபிடிக்க முடியவில்லை. சேசிஸ் நம்பரின் இரண்டு இலக்கங்கள் மட்டுமே கிடைத்தன. அதனை வைத்து குர்காவுனில் உள்ள ஹீரோ ஹோண்டா தொழிற்சாலையை அணுகி 71 வாகனங்களின் விபரங்களை சேகரித்தனர். தொடர்ந்து 70 வாகன உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தினர். ஒரே ஒருவர் மட்டும் கடைசி வரை கிடைக்கவே இல்லை. இந்த வழக்கில் மொத்தம் 117 சõட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இருந்தும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியென்றால், மொடõஸாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார்? அங்கேயும் குண்டுகள் தானாக வெடித்ததோ? இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய ஏழு வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. அதில் மூடப்பட்ட முதல் வழக்கு மொடாஸா வழக்கு.

திருப்பி அனுப்பப்பட்ட சுனில் ஜோஷி வழக்கு

மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்… என குண்டுவெடிப்பு வழக்குகளின் சூத்திரதாரி சுனில் ஜோஷி. அசிமானந்தாவின் வாக்குமூலத்திலும் இவனின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்கான ஜோஷி டிசம்பர் 29, 2007ல் மத்திய பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டார். இவனை முஸ்லிம்கள்தான் கொலை செய்தார்கள் என்று கூறிய சங்பரிவார்கள் மறுதினம் இரண்டு முஸ்லிம்களை கொலை செய்தனர்.

ஆனால், ஜோஷி அவனது சகாக்களாலேயே கொலை செய்யப்பட்டான். குண்டுவெடிப்பு வழக்குகள் குறித்து அவன் உண்மைகளை வெளியே கூறிவிடுவான், ஆர்.எஸ்.எஸ். பெரிய தலைகளின் பெயர்கள் வெளியே வந்துவிடும் என்ற அச்சத்தில் அவன் கூட்டத்தினராலேயே கொலை செய்யப்பட்டான். இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் உள்ளன.

வழக்கை விசாரித்த மத்திய பிரதேச காவல்துறை இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. சுனில் ஜோஷியின் கொலை அனைத்து இந்துத்துவ தீவிரவாத செயல்களோடும் தொடர்புடையது என்று என்.ஐ.ஏ. கூறியது. என்.ஐ.ஏ. விசாரணை பல உண்மைகளை வெளியே கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் சுனில் ஜோஷி வழக்கை மீண்டும் மத்திய பிரதேச காவல்துறைக்கே திருப்பி அனுப்பியுள்ளது என்.ஐ.ஏ.

யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை, ஜோஷியின் கொலையில் தீவிரவாத தொடர்பு ஏதுமில்லை என்று கூறி வழக்கை திரும்ப அனுப்பியுள்ளது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் ஜோஷியின் கொலை வழக்கு எப்படி விசாரிக்கப்படும் என்பதை பெரிய அளவில் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படியென்றால் சுனில் ஜோஷியை கொலை செய்தது யார்? டிசம்பர் 29, 2007 இரவில் ஜோஷி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டான் என்று காவல்துறை கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதனிடையே சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் மூன்று சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.  விஷயம் தகாத், கவிதா மற்றும் கண்பதி ஆகிய இந்த சõட்சிகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பரத் பாய் என்கிற பரத் மோகன் லாலின் மனைவி கவிதா. கொலை செய்யப்பட்ட சுனில் ஜோஷியின் நெருங்கிய நண்பன் ஷிம் தகாத். இவன் மக்கா மஸ்ஜித் வழக்கிலும் சாட்சியாக உள்ளான்.

இவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் அச்சப்பட தேவையில்லை என்றும் விசாரணை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், எந்த திசையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்திட்டங்கள் அனைத்து துறைகளிலும் நிறைவேற்றப்படுகின்றன என்பது நாம் அறிந்ததுதான். இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகளை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அத்துடன் போலி என்கௌண்டர் வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கும் போதிய உதவிகளை செய்து வருகின்றனர்.

இஸ்ரத் ஜஹான் மற்றும் சõதிக் ஜமால் போலி என்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட எவரும் தற்போது சிறையில் இல்லை. அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சில காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. சரியான திசையில் பயணித்துக் கொண்டிருந்த போலி என்கௌண்டர் வழக்குகள் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் ஆகியவை இந்த ஒரு வருடத்தில் திசை மாறி பயணிக்கின்றன.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின் போது, சி.பி.ஐ.யை ‘கூண்டுக்கிளி’ என்று பா.ஜ.க. வர்ணித்து வந்தது. தற்போது, என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. என்ற இரண்டு கூண்டுக்கிளிகள் பா.ஜ.க. அரசு வசம் உள்ளன. இந்த இரண்டு கூண்டுக்கிளிகளும் இனி என்னவெல்லாம் சொல்லப் போகின்றனவோ? எந்த குண்டுகளெல்லாம் தானாக வெடித்தனவோ?

(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.