தான் வளர்த்த பசுவை காவல்நிலையத்தில் கட்டி வைத்த முஸ்லிம் மாநகராட்சி தலைவர்

0

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் அப்துல் கஃபார். பஹுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவர் அப்பகுதி 73 ஆம் வார்டு தலைவராக உள்ளார். இவர் தான் வளர்த்து வந்த பசுவை நவ்சந்தி காவல்நிளையத்தில் கட்டி வைத்து விட்டு அறிவிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். மேலும் தனது பசுவை நன்றாக பார்த்துக்கொள்ளக் கூடிய ஒருவரிடம் ஒப்படைத்துவிடுமாறு காவல்நிலைய அதிகாரி சஞ்சய் குமாரிடம் அவர் கூறியுள்ளார்.

“இந்த பசு கன்றாக இருந்ததில் இருந்து நான் இதனை கவனித்து வருகின்றேன். ஆனால் தற்போது அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களினால் இதனை என் வீட்டில் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது. “ என்று கஃபார் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்தவர்கள் தன்னிடம் வந்து, முஸ்லிம்கள் பசுக்களை வளர்க்க முடியாது என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “அவர்கள் முஸ்லிம்கள் பசுக்களை வளர்ப்பது பாதுகாப்பானது அல்ல என்று மக்கள் மனதில் அச்சத்தை விதைத்து விட்டனர்.” என்று தெரிவித்த அவர் தனது இந்த முடிவிற்கும் தனது கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர் மான் சிங் சவ்ஹான், கஃபாரின் பசு அவரிடமே ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் கஃபார் தனது முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதாக தெரிகிறது. கஃபாரின் இந்த முடிவு மீரட்டில், முஸ்லிம் ஒருவருக்கு பசுவை விற்றதால் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சில நாட்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.