திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்! UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்

0

பத்திரிகை செய்தி

பிப்ரவரி 07, 2019
சென்னை

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் அறிக்கை

திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்! UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பல கட்சிகளில் பொறுப்பில் இருந்த ராமலிங்கம் தற்பொழுது இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ராமலிங்கத்திற்கு தொழில் ரீதியாகவும் கட்சி மற்றும் அமைப்புகள் ரீதியாகவும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்மீது பல்வேறு வழக்குகள் திருபுவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ராமலிங்கம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இக்கொலையை கண்டிப்பதுடன் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

ஆனால், கொலை நடந்தது முதல் அதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்றும் அதற்கு அன்றைய தினம் நடந்த ஒரு சிறிய வாய் தகராறு தான் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் போலியான தகவல்கள் மற்றும் மத துவேஷ கருத்துக்களை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது ஆகும். இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவதும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறை, கலவரங்கள் மூலம் தங்களை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வது என்பதும் இந்துத்துவ பாசிச சங்கபரிவார சக்திகளுக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் தமிழக காவல்துறை விசித்திரமான, ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வருத்தத்திற்கு உரியதாகும். சம்பவம் நடந்த இரவே அந்த பகுதியை சார்ந்த ஒரு முதியவர் உட்பட ஐந்து அப்பாவி இளைஞர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற காவல்துறையினர் தற்போது அவர்களையே குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ராமலிங்கத்தின் மகன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்த நபர்கள் தான் என தன்னுடைய தந்தை கூறியதாக கூறும் நிலையில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது யாரை திருப்தி படுத்திட வேண்டி என்ற கேள்வி எழுகின்றது. விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் மீது அவசரகதியில் UAPA என்ற கருப்பு சட்டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்துள்ளதன் மூலம் காவல்துறை யாரோ சிலருடைய அழுத்தங்களுக்கு பலியாகி வருகின்றதோ என்கின்ற சந்தேகத்தை வலுப்பெற செய்கின்றது.

மேலும், இந்த வழக்கில் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ தொடர்பு படுத்திடுவதற்கான முயற்சிகளையும் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது சுமத்தப்பட்ட இது போன்ற அவதூறுகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, முறியடித்து நீதியை நிலை நிறுத்தியது போல் தற்போது சுமத்தப்படும் இந்த அவதூறுகளை பாப்புலர் ஃப்ரண்ட் நிச்சயம் முறியடிக்கும். நீதிக்காக தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் .

எனவே, தமிழக அரசும் காவல்துறையும் இதுபோன்ற நிர்பந்தங்களை புறந்தள்ளி நீதியான விசாரணையின் மூலம் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். மேலும், தற்போது UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு முதியவர் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று திட்டமிட்டு கலவர பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
எம். முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Popular Front Of India
State Head Quarters,
no33/2, 3rd Floor,
mookkaathaal street, purasawalkam
Chennai – 600 007.Tamilnadu,
Ph:044-64611961,

Email : popularfrontprdtn@gmail.com
Web : www.popularfrontindia.org
www.popularfronttn.org

Comments are closed.