உள மாற்றம்: திருமணத்தின் அளவுகோல்

0

திருமணத்தின் அளவுகோல்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

  1. அவளுடைய செல்வத்திற்காக
  2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளுடைய அழகிற்காக
  4. அவளுடைய மார்க்கத்திற்காக. எனவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (நூல்:புகாரி)

திருமணத்தில் மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும். இங்கு நான்கு அளவுகோல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் மார்க்கத்திற்கு (தீனிற்கு) முன்னுரிமை வழங்குவதன் மூலமே  வெற்றி அடைய முடியும் என்பதை நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் அழுத்தம் திருத்தமாக கற்றுத் தந்துள்ளார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் முன்னுரிமை அளிக்க கூறியதை சமூகத்தில் பெரும்பாலோர் புறக்கணித்துவிட்டு இதர காரியங்களுக்கு அதிகமானோர் முன்னுரிமை அளிக்கின்றனர். அதுமட்டுமல்ல, வரதட்சணை என்ற மாபெரும் சாபக்கேடு இப்போதும் சமூகத்தில் நீடிக்கிறது. பெண் மக்களை பெற்றவர்கள் எல்லாவற்றையும் இழக்கும் நிலை இன்றும் ஒரு விபத்தாக சமூகத்தில் நிலவுகிறது.

ஏராளமான பெண்கள் இன்றும் பொருளாதாரம் இல்லாத காரணத்தால், திருமணம் முடிக்காமல் வாழ்கின்றனர். ஏன் நாம் அவர்களின் மார்க்கத்திற்கு முன்னுரிமை அளித்து திருமணம் முடிக்க முன்வருவதில்லை? நபி(ஸல்) அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெற்றி நமக்கு வேண்டாமா?

ஒரு குடும்பத்தில் அருள் வளம் பெருக வேண்டுமானால் தம்பதியினர் மார்க்க பற்றுடையவர்களாக இருத்தல் அவசியம். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள்  மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! என்று கூறினார்கள். இதர விஷயங்கள் எதுவும் வீட்டில் அருள் வளம் செழிக்க உதவாது. மாறாக, நபி(ஸல்) அவர்கள் கூறியதுபோல மார்க்கப் பற்றுடையவருக்கு முன்னுரிமை வழங்கும்போது மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும். உலக வளங்கள் மீதான பேராசையை கைவிட்டு மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்குங்கள். அத்தகையவர்களுடைய கூட்டத்தில் அல்லாஹ் நம்மை உட்படுத்துவனாக! ஆமீன்!

Comments are closed.