திருமண வீட்டில் துப்பாக்கிச்சூடு: மணமகனின் அத்தையை கொன்ற சாத்வி

0

ஹரியானாவின் கர்னால் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த திருமண விழாவில் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரும் ஹிந்து மகாசபை தலைவருமான சாத்வி தேவா தாகூர் கலந்துகொண்டார். மணமகன் விக்ராந்த் சிங் சாத்வி தேவா தாகூரின் பக்தர் ஆவார். இதனையடுத்து திருமண விழாவிற்கு அழைக்கப்பட்ட தேவா தாகூர் அந்த திருமண கொண்டாட்டத்தின்  போது துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் மூன்று உறவினர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். அதில் சாத்வி தேவா தாகூர் தனது ஆட்களுடன் சிரித்தவாறு அவர் வைத்திருந்த ரிவால்வரை சுடுவது பதிவாகியுள்ளது. தேவா தாகூர் விழாவின் DJ விடம் அவருக்கு பிடித்தமான பாட்டை போடச் சொல்லி, அதற்கு தான் சுட்டுக் கொண்டே நடனமாட வேண்டும் என்று கூறியதாக இந்நிகழ்வை பார்த்தவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“அவர் அவரது ரிவால்வரை எடுத்து பலமுறை சுட்டார். அவரது உதவியார்கள் அதனை மீண்டும் குண்டுகளால் நிரப்பிக் கொடுக்க அவர் மீண்டும் சுட்டார்” என்று இந்த விழாவில் கலந்துகொண்ட ஒருவர் கூறியுள்ளார்.

திருமண வீட்டார் தடுத்தும் இவர்கள் மக்களால் நடனமாடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி சுட்டுள்ளனர். மணமகனின் அத்தை சுனிதா ராணி துப்பாக்கிக் குண்டு தாக்கி சரிந்து விழவே சாத்வியும் அவரது உதவியாட்களும் அங்கிருந்து ஓடிவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த அமர்ஜித் சிங், வினோத் மற்றும் 11 வயது மானஸ்வி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனையடுத்து அவர்கள் மீது  ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை அவர்களை தேடி வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற கர்னால் பகுதி அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சொந்த தொகுதியாகும்.

கடந்த வருடம், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்யவேண்டும் என்றும் இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்று இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்க வேண்டும் என்று கூறியவர் இந்த சாத்வி தேவா தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.