தீவிரவாதி என்ற போலிச் செய்தியால் தன் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண்

0

ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் ஐஎஸ் தற்கொலைப்படை மனித வெடிகுண்டு என்று கடந்த மாத கூறப்பட்டு பல விசாரணைகளுக்குப் பின்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட பெண் தனது கல்வியின் எதிர்காலம் தன்னை தவறாக சித்தரித்த ஊடக செய்திகளால் கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இம்மாதம்  5 ஆம் தேதி ஊடகங்களுக்கு தன்னிலை குறித்து பேட்டி அளித்த 18 வயதான சாதியா அன்வர் ஷேக், தான் ஸ்ரீநகருக்கு தண் தாயுடன் அப்பகுதி செவிலியர் கல்லூரியில் சேருவதற்காக சென்றதாக கூறியுள்ளார். ஜம்மு  காஷ்மீரில் உள்ள SET Paramedical & Nursing Institute அனுமதி பெற்ற பிறகு அதற்கு தேவையான வேலைகளில் சாதியா ஈடுபட்டுள்ளார். சாதியாவின் தாய் புனே சென்றுள்ளார்.

பின்னர் ஜனவரி 25 ஆம் தேதி அப்பகுதி பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் தன்னை ஏதோ ஐஎஸ் மனித வெடிகுண்டு என்று செய்தி வெளியிட்டிருப்பது கண்டு தான் அதிர்சியுற்றதாகவும் உடனே அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று தான் ஜம்மு காஷ்மீர் வந்ததன் நோக்கத்தை விளக்கியதாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒட்டுமொத்த ஜம்மு கஷ்மீர் காவல்துறை உயர் அதிகாரிகள், உளவுத்துறை, தேசிய புலனாய்வுத்துறை உள்ளிட்ட பலர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சாதியா தெரிவிக்கையில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று ஜம்மு கஷ்மீர் காவல்துறை புனே காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் என்னை குறித்த இந்த தவறான ஊடக செய்திகளினாலும் பிரசாரங்களினாலும் ஜனவரி 27 ஆம் தேதி என் கல்லூரி எனது அனுமதியை ரத்து செய்துவிட்டது.”

என்று கூறியுள்ளார். இருப்பினும் தான் மகாராஷ்டிராவில் தனது கல்வியை தொடரப்போவதாகவும் பின்னர் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதி IAS  அல்லது IPS அதிகாரி ஆவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது கல்வி செலவை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வு இவரது கல்வி மட்டுமல்லாது அவரது வேலைவாய்ப்பு மற்றும் திருமண நிகழ்வை கூட பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் நரேந்திர மோடியிடம் இந்த பெண்ணுக்கு நீதி வழங்க முறையிடப் போவதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்தள்ளது.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஜம்மு கஷ்மீர் காவல்துறை தங்களுக்கு உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் குடியரசு தினத்தை முன்னிட்டு மனித வெடிகுண்டாக செயல்படலாம் என்று சுற்றறிக்கை விடுத்திருந்தது இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.