தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி: பாஜக தலைவருக்கு ஆயுள் தண்டனை

0

அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் தீவிரவாதியும் தற்போதைய பாஜக தலைவருமான நிரஞ்சன் ஹோஜாய் என்பவருக்கு NIA சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இவரின் இந்த தண்டனையை குறைப்பதற்கு அஸ்ஸாம் பாஜக முயன்று வருவதாக பாஜக வின் அஸ்ஸாம் மாநில செய்தித் தொடர்பாளர் பிஜன் மகாஜன் தெரிவித்துள்ளார்.

நிரஞ்சன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் அரசு பணத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதும் ஒன்று. கடந்த திங்களன்று இரு வழக்குகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 15 பேர் குற்றவாளிகள் என்று NIA சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு NIA நிறுவப்பட்ட பின் NIA விசாரணை செய்த முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 15 பேர்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆண்டு கால் சிறை தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆயுள் தண்டனை கிடைக்கப்பட்டவர்கள் DHD(J) என்ற தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாஜக தலைவருமான நிரஞ்சன் ஹோஜாய், ஜுவல் கர்லோசா மற்றும் மொஹெத் ஹோஜாய் ஆகியோர் ஆவர். இத்துடன் RH.கான், போஜெந்திரா ஹோஜாய், அஸ்ரிங்க்டோ வாரிஸ்ஸா மற்றும் ஜயந்த குமார் கோஷ் ஆகிய ஐந்து பேருக்கு 10 முதல் 12  வருடங்கள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஏழு நபர்களுக்கு தனித்தனியே எட்டு ஆண்டு கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிரஞ்சன் ஹோஜாயை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க அஸ்ஸாம் பாஜக உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.