துருக்கிக்கான ரஷ்ஷிய தூதர் புகைப்பட அருங்காட்சியகத்தில் சுட்டுக்கொலை

0

அலேப்போவை மறக்காதே, சிரியாவை மறக்காதே என்று கத்திக்கொண்டு துருக்கிக்கான ரஷ்ஷிய தூதரை துருக்கியின் முன்னாள் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

62 வயதான ரஷ்ஷிய தூதர் ஆண்ட்ரேய் கர்லோவ் துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற புகைப்பட அருங்காட்சியகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தான் அவர் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ரேய் கர்லோவ் 8 முறை சுடப்பட்டு
உயிரிழந்தார்.

இந்த துப்பாகிச்சூடை நிகழ்த்தியவர் மேவ்ளுத் மெர்ட் அல்டிண்டாஸ் என்பவர் என்று துருக்கிய உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார். இவர் 1994 இல் பிறந்தவர் என்றும் அங்காரா கலவர தடுப்பு காவல்துறை அதிகாரியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொலையாளியின் நோக்கம் குறித்து அவர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தரையில் வீழ்ந்த தூதரை அருகே சென்று கொலையாளி மீண்டும் ஒருமுறை சுட்டதாகவும் அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை அடித்து நொறுக்கியதாகவும் அங்கிருந்த புகைப்படக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் துருக்கி, ரஷ்ஷியா மற்றும் ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்கள் சிரியா பிரச்சனை தொடர்பாக மாஸ்கோவில் சந்திப்பு நடத்திய மறுநாள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்சிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா சகரோவா, இது ரஷ்ஷியாவிற்கு மோசமான ஒரு நாள்” என்று தெரிவித்துள்ளார். “தூதர் கர்லோவ் துருக்கி உடனான நட்புறவிற்கு தனிப்பட்ட முறையில் பல பங்களிப்பை செய்துள்ளார். இரு நாட்டு விரிசல்களை சரி செய்ய பல முயற்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “தனது பணியில் முழுமனதோடு தன்னை ஈடுபடுத்திகொண்டவர் அவர். அவருடைய மறைவு எங்களுக்கும் இவ்வுலகத்திற்கும் பெரும் இழப்பு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் வன்மையாக கண்டித்துள்ளது.

Comments are closed.