துருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு: 29 பேர் பலி, 166 படுகாயம்

0

துருக்கயின் இஸ்தான்புல் நகரில் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர். 166 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் துருக்கிய காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்று துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்த 27பேர் காவல்துறையினர் ஆவர். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் முதல் குண்டு வெடிப்பு இரவு 10:30 மணியளவில் புதிதாக கட்டப்பட்ட வோடஃபோன் அரங்கில் இருந்து காவல்துறை அதிகாரிகள் வெளியேறும் போது நடத்தப்பட்டுள்ளது. இது கார் குண்டு என்றும் ரிமோட் வாயிலாக இந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்று சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் முதல் குண்டுவெடிப்பு நடந்து ஒரு நிமிட இடைவெளியில்  இரண்டாவதும் நடந்தது என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த துருக்கிய ஜனாதிபதி எர்துகான், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் கோர முகத்தை நாம் காண நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

காயமடைந்த 166 பேர்களில் ஆறுபேர் தீவிர சிகிச்சை மையத்தில் உள்ளனர். அதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று துருக்கிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேர்க்கவில்லை. இவ்வருடம் துருக்கியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்து பயங்கரவாதிகளால் பல குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.