துருக்கியில் நடப்பது என்ன? – விடியல் ஜூலை 2013

0

நவீன துருக்கியை சீர்திருத்தங்களின் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஆளுமைக்கு சொந்தக்காரர் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான். ராணுவத்தின் திமிரான தலையீட்டில் இருந்து நாட்டை விடுவித்த எர்துகானை விட சாதித்த வேறு ஆட்சியாளரை துருக்கியின் வரலாற்றில் காணமுடியாது. துருக்கியின் கடந்த கால ஜனநாயகம் என்பது மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ராணுவத்தின் தலையீட்டை மூடிமறைப்பதற்கான திரையாக இருந்து வந்தது.

துருக்கி மற்றும் அந்நாட்டின் குடிமக்களின் பாதுகாவலர்கள் என்று சுயமாக தம்பட்டம் அடித்த ராணுவ அதிகாரிகள் பல காலக் கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்து தங்களது கடமையை நிறைவேற்றியதே துருக்கியின் வரலாறாகும். அந்த வரலாற்றை திருத்தி எழுதினார் எர்துகான்.

ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி என்ற ஆளுங்கட்சியின் தலைவர்களான பிரதமர் எர்துகானும், அதிபர் அப்துல்லாஹ் குல்லும் நவீன துருக்கியின் இமேஜை மாற்றியமைத்தார்கள். நாட்டு நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தீரமிக்க நடவடிக்கைகளை எர்துகான் மேற்கொள்ள காரணம், ராணுவத்துடனான அணுகுமுறையாகும்.

ராணுவ ஜெனரல்களுக்கு முன்பாக அஞ்சி தலைகுனியாத எர்துகானை துருக்கி மக்கள் தங்களது மீட்பராக கண்டனர். உஸ்மானியா புராதன காலத்திற்கும், ஐரோப்பிய நவீன காலத்திற்கும் இடையே சிக்கி அடையாளத்தை இழந்த துருக்கி, சமீப காலங்களில் முன்னேற வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர். இஸ்லாத்தின் பாரம்பரியத்தில் இருந்து அகன்று புராதன கலாச்சாரங்களில் இருந்து விடுபட்டு, ஐரோப்பிய நட்புறவுக்காக கொள்கைகளிலும், நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திய பிறகும் துருக்கியால் எதுவும் சாதிக்க முடியவில்லை.

1996ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த வெல்ஃபெயர் பார்டியின் நஜ்முத்தீன் அர்பகான் துருக்கியை சொந்த காலில் நிற்க கற்றுக்கொடுத்தார். உண்மையான வளர்ச்சியை நோக்கி துருக்கியை வழி நடத்திய அர்பகான், அந்த நாட்டின் பழங்கால வேர்களை கண்டறிந்து எதிர்கால கனவுகளுக்கு வர்ணம் பூசினார். ஆனால், தக்க நேரம் பார்த்து காத்திருந்த ராணுவம், திரைமறைவில் சூழ்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவாக அர்பகானுக்கு பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழல் உருவானது. வெல்ஃபெயர் கட்சியை தடைசெய்த ராணுவம் அர்பகானை நீதிமன்ற கூண்டில் நிறுத்தியது.

ஆனால், ராணுவத்தை உரிய இடத்தில் நிறுத்திய எர்துகான், நஜ்முத்தீன் அர்பகான் நிறுத்திய இடத்தில் இருந்து தனது பொருளாதார அரசியல் கலாச்சார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு துவக்கம் குறித்தார். பாரம்பரிய வரலாற்றிற்கு திரும்பிய துருக்கியால் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்ற பாதையில் பயணிக்க முடிந்தது. அரபு முதலீட்டின் பெருக்கம், வலுவான வர்த்தக உறவுகள், அரபு சுற்றுலா பயணிகளின் அதிகரித்த வருகை துருக்கியின் பொருளாதார கட்டமைப்பை மறு சீரமைத்தது. துருக்கி பொருளாதார துறையில் வலிமையடைந்தது.

‘ஐரோப்பாவின் நோயாளி’ போன்ற அவமதிக்கும் பட்டப்பெயர்களை மட்டுமே கேட்டுப் பழகிய துருக்கியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எர்துகான் தலைமை தாங்கினார். இதனால் துருக்கியின் பழைய பெயர் மாறியது. பொருளாதார வல்லுநர்கள் தற்போது துருக்கியை ‘ஐரோப்பாவின் சீனா’ என்று அழைக்கின்றனர். 2011ஆம் ஆண்டு 8.5 சதவீத வளர்ச்சியை சந்தித்த துருக்கி, ஐரோப்பாவின் அரசியல் கோபுரத்தில் மிகவும் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள நாடாக மாறியுள்ளது.

சீனாவை அடுத்து வளர்ச்சியில் 2வது நாடாக மாறியது. விலைவாசி சற்று குறைந்தது. வாழ்க்கை தரம் உயர்ந்தது. 2004ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடு இரண்டு பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால், 2011ஆம் ஆண்டு 16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காகவும், ஏற்றுமதி 30 பில்லியனில் இருந்து 114 பில்லியனாக அதிகரித்துள்ளது.

ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கோடிக்கணக்கில் துருக்கி கடன் வாங்கியிருந்தது. இந்த கடன் நெருக்கடியில் இருந்தும் துருக்கியை மீட்டெடுத்தார் எர்துகான். அதுமட்டுமல்ல ஐ.எம்.எஃபிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக வழங்க தயாராக இருப்பதாகவும் எர்துகான் அரசு அறிவித்தது. ஐரோப்பிய நாடுகள் வேகமாக பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில் துருக்கியின் பொருளாதார வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஒருவர் கூறியதை  ஒரு செய்தி நிறுவனம் மேற்கொள் காட்டியிருந்தது. ஐரோப்பா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்போது துருக்கியை அதன் சாயல் கூட பாதிக்கவில்லை என்பது பொருளாதார வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எர்துகானின் அரசியல் எதிரிகள் கூட இதனை வேறு வழியின்றி பாராட்டுகின்றனர்.

இந்த உண்மைகளின் பின்னணியில் தான் முக்கிய எதிர்கட்சியான ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டியின் தலைமையில் தற்போது நடக்கும் போராட்டங்களை ஆராயவேண்டும் .தக்ஸிம் கெஸி பூங்காவில் சில மரங்களை வெட்டிவிட்டு, வர்த்தக மையம் கட்டுவதை எதிர்த்து துவங்கப்பட்ட ’சுற்றுச்சூழல் பாதுகாப்பு(?) போராட்டம்’ எர்துகானை ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழே இறக்க நடக்கும் வீதிப் போராட்டமாக மாறியுள்ளது.

மரங்களை வெட்டுவதும், பூங்காக்களை அழிப்பதும் எர்துகானின் நோக்கம் அல்ல. 2002ஆம் ஆண்டு முதல் 160 பூங்காக்களை அவர் துருக்கியில் உருவாக்கியுள்ளார். அவரா பூங்காக்களை அழிப்பார்? 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழலை பாதுகாக்க ஏ.கே கட்சியின் நடவடிக்கைக்கு முன்னால் நிற்க கூட தகுதியில்லாதவர்கள்தாம் எதிர்கட்சியினர் என்று எர்துகான் வெளிப்படையாகவே குற்றம் சவட்டி அவர்களது ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான’ போலி வேடத்தை தோலுரித்துக் காட்டினார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சியினர் அம்மரங்களின் நிழல்களில் இருந்துதான் ஓய்வெடுக்கின்றனர். இவர்களுக்கு கிலிப்பிடிக்க காரணங்கள் வேறு உள்ளன. மதுபானம் பாதியளவில் தடைச் செய்யப்பட்டுள்ளது. சிகரெட் பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. லெஸ்பியன், ஹோமோ உள்பட தங்களது விருப்பப்படி நடந்துகொள்ளும் இயற்கை விரோத் செயல்களுக்கு எதிராக அரசு கொள்கை முடிவை எடுத்துள்ளது. இவையெல்லாம் எர்துகானின் எதிரிகளுக்கு போதாதா என்ன?

துருக்கியின் பொருளாதார தலைநகரான இஸ்தான்புல் நகரத்தின் நடுவே அமைந்துள்ள கெஸி பூங்காவில்தான் இஸ்தான் புல் மெட்ரோவின் தலைமையகம் அமைந்துள்ளது.நகரத்தின் குடிநீர் விநியோக மையமும் இங்குதான் இருந்தது. பின்னர் அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. விநியோகம் என்ற பொருள் கொண்ட தக்ஸிம் என்ற அரபுச்சொல்  இந்த பூங்காவிற்கு சூட்டப்பட்டது. இங்கு ஏற்கனவே பூங்கா என்று ஒன்றும் இல்லை.உஸ்மானியா கிலாஃபத்தின் ஆயுதமையம் இங்கு தான் அமைந்து இருந்தது.

1740ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் பின்னர் ஸ்டேடியமாக மாற்றப்பட்டது. 1940ஆம் ஆண்டு அப்போது ஆட்சி புரிந்த ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டி தலைமையிலான அரசு ஸ்டேடியத்தை இடித்து விட்டு தற்போதைய பூங்காவை நிர்மானித்தது. வரலாற்று சின்னம் ஒன்றை தகர்த்துவிட்டு பூங்காவை கட்டியவர்கள்தாம், இன்று அந்த பூங்காவில் நடக்கும் சட்டவிரோத செயல்களால் இளைஞர் சமூகம் சீரழிவதை தடுக்க அதில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க புராதன காலத்தை நினைவுகூறும் சின்னத்தை எழுப்பி அதில் வர்த்தக மையம், தக்ஸிம் சதுர ஹோட்டல், ரெஸ்ட்ராரண்ட் ஷாப்பிங் மால் என நாட்டிற்கு வருமானத்தை உருவாக்கி தரும் நோக்கத்துடன் அதனை இடிக்க முயன்றால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒழுக்கக்கேடான செயல்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களால் இதனை தாங்கமுடியாதல்லவா?

துருக்கியின் நகரங்களான அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் போராட்டங்கள் என்பது வழக்கமான ஒன்று. மாநகராட்சியின் ஏதேனும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள்

சில வேளைகளில் தொழிலாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆகவே தக்ஸிம் சதுக்கத்தில் நடக்கும் போராட்டம் துருக்கியைப் பொறுத்தவரை பெரிதுப்படுத்தவேண்டிய விவகாரம் அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை எதிர்கொண்ட போலீசின் நடவடிக்கைதான் உண்மையில் பிரச்சனைக்கு காரணமானது.

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதுடன், பீதிவயப்படுத்தும் சம்பவங்கள் நடந்துவிட்டதாக பரப்புரைச் செய்தன.

இந்நிலையில் எர்துகானுடன் எப்பொழுதும் பகைமை பாராட்டி வந்த ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டியும், சில இடதுசாரி கட்சிகளும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டவுடன், துருக்கி முழுவதும் போராட்டங்கள் நடந்துவருவதாக ஒரு மாயை உருவானது.போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை பெரிதாக காட்டி சர்வதேச அளவில் எர்துகான் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தவேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் திட்டமாகும்.

போராட்டங்களையும், கருத்து சுதந்திரங்களையும் அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரியாக எர்துகான் சித்தரிக்கப்பட்டார். தமிழில் புரட்சிக் கருத்துக்களை கூறுவதாக மக்களை முட்டாளாக்கும் ஒரு இணையதளம் எர்துகானை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை மோடியுடன் ஒப்பிட்டு இஸ்லாம்,முஸ்லிம்கள் மீதான வஞ்சத்தை தீர்த்தது.

தக்ஸிம் சதுக்கத்தில் ரிஸார்டுகளின் விரிவாக்கத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சில மரங்களை வெட்டியதை தொடர்ந்து போராட்டம் துவங்கியது.போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை, வாட்டர் புல்லட் பிரயோகித்த  நடவடிக்கையை கண்டித்து துருக்கியின் பல்வேறு நகரங்களில் ஆதரவை தெரிவித்து மக்கள் திரள துவங்கினர். ஆனால், எர்துகான் தலைமையிலான அரசை ஆட்டம் காண வைத்து கவிழ்ப்பதுதான் முக்கிய எதிர்கட்சியான ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டியின் மறைமுக அஜண்டா என்பதை அவர்கள் அறியவில்லை. போராட்டம் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தவும், வன்முறையாகவும் மாறியதை தொடர்ந்து முதல் நாள் திரண்ட பொது மக்கள் பிறகு பின்வாங்கிவிட்டனர். ’சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம்’ என்ற போர்வையில் எர்துகானுக்கு எதிரான போராட்டத்தை ‘துருக்கியின் வசந்தமாக’ சித்தரிக்கும் எதிர்கட்சிகள் தாம் கடந்த ஆண்டுகளில் துனீசியா, எகிப்து, யெமன் உள்ளிட்ட நாடுகளில் உருவான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களை ‘அமெரிக்க இஸ்ரேலிய’ வசந்தமாக சித்தரித்தன. ஆனால், சிரியாவில் சாதாரண மக்களை கொன்றுகுவிக்கும் சர்வாதிகாரி பஷர் அல் அஸதை ஆதரிப்பதில் துருக்கியின் ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டி முன்னணியில் உள்ளது. இக்கட்சி சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாதை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவிக்க ஒரு குழுவை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது.

போலீஸ் தரப்பில் இருந்து உருவான அத்துமீறல்களுக்கும், தவறுகளுக்கும் வருத்தம் தெரிவித்த எர்துகான், இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார் எர்துகான். இது எதிர்கட்சியினரை கடுப்பேற்றியுள்ளது.

துருக்கி மீண்டும் பழைய துயரமான காலக்கட்டத்திற்கு திரும்புவதை விட தான் மன்னிப்பு கேட்பதே சிறந்தது என்பதை புரிந்துகொண்ட எர்துகானின் ஆட்சித் திறன் எதிர்கட்சியினரின் காய்நகர்த்தல்களை தவிடுபொடியாக்கியது. ஏ.கே பார்டிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவும் எதிர்கட்சிகளை அங்கலாய்ப்பில் ஆழ்த்துவது இயல்பே.

கடந்த காலங்களில் துருக்கியில் நடந்த ராணுவ புரட்சிகளைக் குறித்தும், தலையீடுகளை குறித்தும் முழுமையான விசாரணை செய்ய உத்தரவிட்டதும், இதற்கு காரணமான ராணுவ அதிகாரிகளிடம் விசாரணையை துவக்கியதும் பலத்த எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது உறுதி. எதிர்கட்சியினரின் சூழ்ச்சிகளை, 327 ஏ.கே பார்டி உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பொதுமக்கள் அடையாளம் கண்டனர்.

துருக்கியின் தக்ஸிம் சதுக்கத்தை எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்துடன் ஒப்பீடு செய்தவர்களை எர்துகானின் சமயோஜிதமான தலையீடு நிராசையில் ஆழ்த்தியுள்ளது.துருக்கி தோல்வியை தழுவி விடக்கூடாது என்பதால் மிக கவனமாக அடிகளை எடுத்து வைக்கிறார் எர்துகான். இறுதியில் சமரசத்திற்காக வளர்ச்சி திட்டங்களை நிறுத்தி வைக்கவும் எர்துகான் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரிப்பேன் என்று எர்துகான் அறிவித்துள்ளதை எதிர்கட்சிகளும் அங்கீகரித்துள்ளன.

மே 28ஆம் தேதி துவங்கிய போராட்டம் இதுவரை (இக்கட்டுரையை எழுதும் வரை) முற்றிலும் அடங்கவில்லை. எதிர்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி பின்விளைவுகளை தரக்கூடிய முடிவுகளை எடுக்காமல் தேவையான நடவடிக்கைகளை எர்தூகான் உரிய நேரத்தில் எடுப்பார் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

Comments are closed.