துருக்கி அரசியல்சாசன வாக்கெடுப்பு: அர்துகான் கட்சி வெற்றி

0

துருக்கியின் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் மாற்றம் செய்வது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. இதில் துருக்கி ஜனாதிபதி எர்துகானின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை விட ஜனாதிபதி அலுவலகத்திற்கு உள்ள அதிகாரம் அதிகமாகும். முன்னதாக துருக்கிய ஜனாதிபதி பதவி என்பது ஒரு கவுரப்பதவி போன்றது. ஆனால் 2014 இல் ஏற்துகான் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து அதனை அவர் வெகுவாக மாற்றியுள்ளார்.

துருக்கியின் அரசியல் அமைப்பு பல குறுகியகால அரசுகளுக்கு வழிவகை செய்துள்ளது என்றும் இதனால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஏற்துகான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக துருக்கியில் மோசமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளும் குர்து வன்முறைக் குழுக்களும் காரணம் என்று கூறப்பட்டது. இதுவல்லாமல் துருக்கிய அரசை கவிழ்க்கும் முயற்ச்சியும் இராணுவத்தில் இருந்த சிலரால் நடத்தப்பட்டது.

தற்போதைய இந்த வெற்றி குறித்து ரிசெப் தையிப் எர்துகான், “இந்த முடிவு நம் நாட்டிற்கு நல்லதை கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “ஜனாதிபதி இந்த நாட்டிற்கு, ஒரு தேசம், ஒரு கொடி, ஒரு நாடு என்ற அடிப்படையில் சேவை புரிவார். பொது வாக்கெடுப்போடு அதற்கு முந்தைய விவாதங்களும் முடிவடைந்தன’ என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த பொது வாக்கெடுப்பின் முடிவில் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதற்கு ஆதரவாக 51.3% பேரும் அதற்கு எதிராக 48.7% பேரும் வாக்களித்தனர். இந்த பொது வாக்கெடுப்பில் மொத்தம் 99% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இது குறித்து துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம் கூறுகையில், “துரோகிகளுக்கு எதிராக நிர்ப்பதில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒருவரே. நன்றி துருக்கி, நன்றி எனது புனித தேசமே, இந்த தேசம் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது அது “ஆம்’ என்ற முடிவு” என்று இந்த வாக்கெடுப்பு குறித்து கூறியுள்ளார்.

அதே சமயத்தில் துருக்கி எதிர்கட்சிகள் துருக்கிய அரசியல் சாசனத்தின் இந்த மாற்றங்களுக்கு, அவை ஒரு தனிமனிதருக்கு அதிகப்படியான அதிகாரத்தை கொடுக்கின்றது என்று கூறி எதிர்த்துள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை சரிவர நடைபெரவில்லை என்றும் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அரசியல் சாசன மாற்றங்களானது வருகிற 2019 ல் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலின் பின்னரே அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களுடன் அதிகாரத்தை பெற எர்துகான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட வேண்டும். இந்த அரசியல் சாசன மாற்றங்களின் படி, ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, உயர்மட்ட அதிகாரிகளை நியமிப்பது, துணை ஜனாதிபதியை நியமிப்பது, மேலும் நாட்டின் நீதித்துறையில் பாதிக்கும் அதிகமான உறுப்பினர்களை நியமிப்பது என்ற பல அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்கவும் நாட்டில் அவசர நிலையை பிரகடனப் படுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் துருக்கி அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த வேலையில் ஆட்சிக்கு வந்த எர்துகானின் AK கட்சி 15 வருடங்களாக துருக்கியை ஆண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.