துருக்கி: அரசியல் இஸ்லாத்தின் முன்மாதிரி

0

துருக்கி: அரசியல் இஸ்லாத்தின் முன்மாதிரி

-ரியாஸ்

பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த துனீசியாவின் & சமூகவியல் அறிஞரான இப்னு கல்தூன் (கி.பி. 1332 -& 1406), இக்கட்டான சூழலில் இஸ்லாமிய உலகம் இருந்த நிலையில் துருக்கியர்கள் இஸ்லாமிய தீபத்தை தங்கள் கைகளில் ஏந்திச் சென்றதை பெருமையுடன் குறிப்பிடுகிறார். சிலுவை யுத்தங்கள், மங்கோலிய தார்த்தாரியர்களின் படையெடுப்புகள் என இஸ்லாமிய உலகம் இராணுவ தாக்குதல்களையும் சிந்தனை தாக்குதல்களையும் பலமுனைகளில் இருந்து எதிர்கொண்ட போது, வீரத்தையும் கண்ணியமான வாழ்வையும் இழந்துவிட்ட அரபிகள் இஸ்லாமிய தலைமையை துறக்கும் நிலையை அடைந்தனர். அச்சூழலில்தான் துருக்கியர்கள் இஸ்லாத்தின் தலைமையை ஏற்றனர். பொதுவாக உதுமானிய சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து துருக்கியரின் வரலாறு தொடங்கியதாக கூறுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கி.பி. 1055ல் செல்ஜூக் சுல்தான் பாக்தாதில் மன்னராக பதவியேற்றதில் இருந்து கடைசி கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீது கி.பி. 1909ல் இஸ்தான்புலில் பதவியில் இருந்து இறக்கப்பட்டது வரை துருக்கியர் உலகின் கணிசமான பகுதியை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். சிலுவை யுத்தங்களின் போது இஸ்லாத்தை காப்பதில் முன்னணியில் நின்ற பெருந்தலைவர்கள் அனைவரும் துருக்கிய இனத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர் என்பதையும் வரலாறு சொல்லிக் காட்டுகிறது.

‘‘இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அரபிகள் அதன் வாள்களாக இருந்தனர். இஸ்லாத்தின் பாதுகாப்பு காலப்பிரிவில் துருக்கியர் அதன் கேடயமாக இருந்தனர்’’ என்று சமகால அறிஞர் முக்தார் ஷன்கீதி, ‘அஹ்லுஸ் சுன்னா ஷிஆ தொடர்புகளில் சிலுவைப் போர்கள் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். துருக்கி இராணுவ தலைமையின் ஓர் அங்கமான சுல்தான் சலாகுதீன் அய்யூபி சிலுவைப் போர்களை தடுத்தி நிறுத்தினார் என்றால், மன்னர் பீபர்ஸ் தலைமையில் போராடிய துருக்கிய மம்லூக்கியரே ஃபலஸ்தீனின் அய்ன் ஜாலூத்தில் மங்கோலிய தார்த்தாரியர்களை தடுத்து நிறுத்தினர். இஸ்லாத்தின் எல்லைகளை காப்பதில் துருக்கியர்கள் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டனர். இஸ்லாமிய அறிவு மற்றும் ஆன்மீகத்தின் அடித்தளமான அரபிகளையும் போர் திறன் கொண்ட குர்துகளையும் துருக்கியர் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

இப்னு கல்தூனின் வார்த்தைகள் தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் நிலையில்தான் சமகால நிகழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களின் தலைமை அரபிகளிடமிருந்து மீண்டும் துருக்கியின் வசம் செல்வதை சமீப ஆண்டுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அத்துடன் அரசியல் இஸ்லாத்தின் முன்மாதிரியாகவும் சமகால துருக்கி திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. ஜனநாயகம் ஒரு கோட்பாடாக உலகில் தோன்றிய நாளில் இருந்தே, அதனை இஸ்லாத்துடன் முரண்பட்டு நிற்கும் கருத்தாகவே சிலர் முன்வைத்தனர். முஸ்லிம்கள் சிலரின் வாதங்களும் இதற்கு வலுசேர்த்தன. தங்கள் கையில் உள்ள ஆட்சியதிகாரம் பொதுமக்களிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக எதேச்சதிகார முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்கு புதிய விளக்கங்களை கொடுத்து அதனை ஜனநாயகத்திற்கு எதிராக நிறுத்தினர். குறுகிய சிந்தனை கொண்ட சில மார்க்க அறிஞர்களும் இவர்களுக்கு துணை நின்றனர். பொம்மைகள் ஆட்சியில் இருப்பதுதான் தங்களுக்கு நல்லது என்பதால் மேற்கத்திய சக்திகளும் இந்த சர்வாதிகாரிகளுக்கு துணை நின்றன, இன்றும் நிற்கின்றன. இதனை உணராத சில முஸ்லிம்களும் ஜனநாயகத்திற்கு எதிரான கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

ஆனால், ரிஃபா தஹ்தாவி, ராஷித் ரிழா, ஜமாலுதீன் ஆப்கானி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்ல என்பதை மக்களிடம் எடுத்துரைத்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே இச்சிந்தனையை அவர்கள் மக்கள் மன்றத்தில் முன்வைத்துள்ளனர். சென்ற நூற்றாண்டிலும் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் இக்கருத்தை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் துளிர் விடுவதை அவற்றின் சர்வாதிகார ஆட்சியாளர்களும் அவர்களின் மேற்கத்திய காவலாளிகளும் தடுத்து வந்தனர். இதற்கு இஸ்லாத்தை இவர்கள் கேடயமாக பயன்படுத்தியது கொடுமையின் உச்சகட்டம். இதன் தாக்கம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் உள்ள சில முஸ்லிம்களையும் தாக்க அவர்களும் ஜனநாயகம் இஸ்லாத்திற்கு விரோதமானது என்ற பல்லவியை பாட ஆரம்பித்தனர். இஸ்லாம் குறித்தும் ஜனநாயகம் குறித்தும் முழுமையாக அறியாதவர்கள் கொடுத்த அரைகுறை விளக்கம் ஜனநாயகத்தை இஸ்லாத்திற்கு எதிராக நிறுத்தியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.