துருக்கி: கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்த நபர் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடுநடத்தினார்

0

கடந்த வருடம் பல தீவிரவாத சவால்களை சந்தித்த துருக்கியில் இவ்வருட தொடக்கத்திலேயே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது சாண்டா க்ளாஸ் போன்று உடையணிந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கி நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட அந்த விடுதியில் 500 இல் இருந்து 600 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியது இருவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க காவல்துறையும் அவசர ஊர்திகளும் விரைந்துள்ளன. இந்த தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பிக அருகில் உள்ள போஸ்போரஸ் நதியில் குதித்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து துருக்கியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இஸ்தான்புல்லில் மட்டும் சுமார் 17000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் துருக்கியில் உள்ள வன்முறைக் கும்பல்கள் நசுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் துருக்கியில் தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை தீவிரவாதத்திற்கு எதிரான தங்கள் போர் தொடரும் என்று கூறியுள்ளார்.

Comments are closed.