துருக்கி தேர்தல்:ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றி

0

 

– அ.செய்யது அலீ

ரஜப் தய்யிப் எர்துகான் – மேற்கத்திய நாடுகள் சந்தேகக் கண்களோடு பார்க்கும்போது, துருக்கி மக்கள் அவரை நெஞ்சில் சுமக்கின்றார்கள். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான மறு வாக்கெடுப்பில்550 இடங்களில் 316 இடங்களை வென்று வரலாறு படைத்த ஆளுங்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி(ஏ.கே கட்சி) நாட்டின் பெரும்பான்மை பலமிக்க தனி கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பத்து ஆண்டுகளில் முதன் முதலாக ஏ.கே கட்சி தனது அறுதிப்பெரும்பான்மை பலத்தை இழந்து ஒரு தேசிய கூட்டணி அரசாங்கம் அமைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கூட்டணி அரசுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இழுபறி நீடித்து தோல்வியில் முடிவடைந்தது. வேறு வழி இல்லாததால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தலை துருக்கி சந்தித்தது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி முடிவுகள் வெளியானபோது கருத்துக் கணிப்புகளையெல்லாம் காற்றில் பறத்தி முக்கிய எதிர்கட்சியான ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டியை வெகு தூரம் பின்னுக்கு தள்ளி 49.5 சதவீத வாக்குகளை எர்துகானின் ஏ.கே கட்சி பெற்றது. அதாவது கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட 10 சதவீதம் கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்டி 134 இடங்களையும், பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டி 59 இடங்களையும், நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் பார்டி 41 இடங்களையும் வென்றன. 2002-ஆம் ஆண்டு முதல் ஏ.கே கட்சியின் வரலாற்று வெற்றிகளை முறியடிக்கும் விதமாக தற்போதைய வெற்றி அமைந்துள்ளது. ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றிக்கு எர்துகானே முக்கிய சூத்திரதாரி. ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வெற்றி என்று ஏ.கே கட்சியின் வெற்றி குறித்து எர்துகான் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் திரண்ட மக்களிடையே எர்துகான் உரையாற்றும்போது,’ஜனநாயக நாட்டில் அடக்குமுறைகளுக்கும், மோதல்களுக்கும் நீடித்த வாழ்வு கிடையாது என்ற செய்தி இந்த வெற்றி மூலம் தெளிவாகியுள்ளது. ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் துருக்கி மண்ணில் நேசத்தின் விதைகளை விதைக்கிறோம். எதிரிகளோ, பகைவர்களோ இம்மண்ணில் இங்கே இல்லை. நேசம் மட்டுமே இம்மண்ணில் விளையும். இறைவனுக்கு நன்றி! துருக்கி மக்களுக்கும் நன்றி” என்றார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் சதி புரட்சிகள், அராஜகங்களுக்கு முடிவு கட்டி ரஜப் தய்யிப் எர்துகான் என்ற இஸ்தான்புல்லின் முன்னாள் மேயர் தலைமையில் நீதி மற்றும் அபிவிருத்திக்கான ஏ.கே கட்சி ஆட்சிக்கு வந்தது. சீர்குலைந்துபோன துருக்கியின் பொருளாதாரத்தை எர்துகான் தூக்கி நிறுத்தினார். 2002-ஆம் ஆண்டு முதல் ஏ.கே கட்சி வெற்றி பயணத்தை தொடர்கிறது. ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி துருக்கி என்பதை அடையாளம் கண்ட வல்லரசுகளை அங்காரா ஈர்க்கிறது.

அதேநேரம் சிலருக்கு அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியது. இஸ்ரேலின் கொடூரங்களை தொடர்ந்து கண்டித்து வரும் எர்துகான் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். முஸ்தஃபா கமால் பாஷாவின் தீவிர மதச்சார்பற்ற துருக்கியின் அடையாளங்களை மாற்றிவிட்டு இஸ்லாமிய கிலாஃபத்தின் அடையாளங்களை மீட்டெடுத்து வருகிறார். இந்த யதார்த்தத்தை துருக்கி மக்களும் அங்கீகரிக்கின்றார்கள் என்பதையே தற்போதைய ஏ.கே கட்சியின் மாபெரும் வெற்றி பறைசாட்டுகிறது. ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள்தாம் மீண்டும் பிரதிபலிக்கும் என்று கனவு கண்டவர்களின் ஆசையில் மண் விழுந்துள்ளது. ஏ.கே கட்சியின் தோல்வியை எதிர்பார்த்து இருந்த இஸ்ரேல், பஷ்ஷார் அல் அஸத்-ஈரான் – ரஷ்ய கூட்டணி மற்றும் சில அரபு நாடுகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

Comments are closed.