துளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய சதிகாரர்கள்: நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி

0

துளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய சதிகாரர்கள்: நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி

துளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான தினேஷ்.M.N., ராஜ்குமார் பாண்டியன், மற்றும் D.G.வன்சாரா ஆகியோருக்கு முக்கிய பங்குள்ளது என்று சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை விசாரணை அதிகாரி புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

2012 ஏப்ரல் மாதத்தில் இருந்து இவ்வழக்கை விசார்த்து வந்த அதிகாரியான சந்தீப் தம்கட்கே, இந்த வழக்கில் அரசியல் மற்றும் கிரிமினல்களின் கூட்டு சதி உள்ளது என்றும் இதில் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோர் சொஹ்ராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி அஸம் கான் ஆகிய கிரிமினல்களை, 2004 ஆம் ஆண்டு பிரபலமான கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு தீயிட்டு கொளுத்த பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

துளசிராம் பிரஜபாதி போலி என்கெளவுண்டர் வழக்கில் அமித் ஷா, கட்டாரியா, ஐ.பி.எஸ். அதிகாரிகள் தினேஷ், பாண்டியா மற்றும் வன்சாரா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் 2014 இல் இருந்து 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இவ்வழக்கில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்பு தகவல்கள் இவர்கள் இந்த குற்றத்தை செய்தததை நிறுவுகிறது என்று சந்தீப் தம்கட்கே தெரிவித்துள்ளார்.

இதன் மீதான குறுக்கு விசாரணையில் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் எங்கு இருந்தார் என்பதை தீர்மானிக்க அலைபேசி அலைப்பு தகவல்கள் சிறந்த ஒரு ஆதாரம் என்று தம்கட்கே தெரிவித்துள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுகளை அலைபேசி அழைப்பு தகவல்கள் உறுதி செய்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று தம்கட்கே பதிலளித்துள்ளார்.

இந்த சத்திட்டம் தீட்டியவர்களாக அலைபேசி அழைப்பு தகவல்கள் உறுதி செய்யும் நபர்களின் பெயர்களை அறிவிக்குமாறு அவரிடம் கேட்கப்பட, அமித் ஷா, தினேஷ், வன்சாரா, பாண்டியன், விபுல் அகர்வால், ஆஷிஷ் பாண்டியா, N.H.தாபி, G.S.ராவ் ஆகியோரின் பெயர்களை தம்கட்கே குறிப்பிட்டுள்ளார்.

இதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாண்டியா, தாபி மற்றும் ராவ் தற்போதும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குறிப்பிட்ட குற்றம் நடைபெறுவதற்கு முன்னதாகவும் அதன் பின்னரும் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் தகவல்களை இணைத்துள்ளது. ஆனால் இவர்களை இவ்வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுவித்தது.

இவ்வழக்கில் அமித்ஷா, கட்டாரியா மற்றும் பாட்னி ஆகியோரின் வாக்குமூலங்களை அவர்கள் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக இருந்த போது தான் பதிவு செய்ததாகவும் ஆனால் அவை நீதிமன்ற பதிவில் சேர்க்கப்படவில்லை என்று தம்கட்கே தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி துளசிராம் பிரஜபாதி அகமதாபாத் நீதிமன்றத்தில் இருந்து உதய்பூர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயன்றதாக கூறி குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். தங்களது விசாரணையில் துளசிராம் மற்றும் சொஹ்ராபுதீன் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் பணம்பரிக்கும் வேலையை செய்து வந்தனர் என்றும் இதில் இதில் சொஹ்ராபுதீன் அவரது மனைவி மற்றும் துளசிராம் ஆகியோரை கடத்த 2005 நவம்பர் 23 ஆம் தேதி சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. பின்னர் நவம்பர் 26 ஆம் தேதி சொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பின்னர் கற்பழித்து கொல்லப்பட்டதாக துளசிராம் பிரஜபாதி தெரிவித்தார்.

Comments are closed.