தூக்கு கயிற்றில் தஞ்சமடையும் விவசாயிகள்!

0

 

நிலம் கையகப்படுத்தும் சட்டம் முதல் ரப்பர் விலை வீழ்ச்சி வரையிலான பிரச்சனைகளின் பெயரால் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் வாக்கு வங்கி அரசியல் நாடகங்களை அரங்கேற்றும்போது வாழ்வõதாரத்தை இழந்த விவசாயி தூக்கு கயிற்றை நோக்கி செல்கிறான்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த விவசாயி கஜேந்திர சிங் மரத்தில் ஏறி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சந்திக்கும் துயரங்களின் நடுங்கச் செய்யும் நினைவுகளை இச்சம்பவம் எடுத்தியம்புகிறது. தலைநகரில் தற்கொலை செய்ததால் கஜேந்திர சிங் தலைப்பு செய்தியானார். நாடு முழுவதும், வெளியுலகிற்கு தெரியாமல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தினமும் தற்கொலை செய்கின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற செல்வாக்கில் சிக்கிக்கொண்ட மோடி அரசின் முன் மிகப்பெரியதொரு நெருக்கடியாக விவசாயிகளின் பிரச்சனை உருவெடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுவதற்கு முன்னரே விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சி, கடன் போன்ற காரணங்களால் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடியை சந்திக்கிறது என்பதை இந்த தற்கொலைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

 பருவம் தவறிய மழையால் வேளாண் விளை பொருட்கள் நாசமடைந்து, போட்ட முதல் கூட கிடைக்காததால் விவசாயிகள் திக்கு தெரியாமல் திணறுகின்றனர். மத்திய அரசின் சில்லறை உதவிகளால் விவசாயிகளின் துயரம் மாறப்போவதில்லை.

நாற்றுகளை நட்டு அறுவடைக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் விவசாயிக்கு, திரும்ப செலுத்த முடியாத கடன் சுமைகளும், இதர பிரச்சனைகளும் மனதை கடுமையாக அழுத்துகின்றன. இந்நிலையில் வேளாண் கடன்களுக்கான வட்டி மானியம் ரத்து, குறுகியகால பயிர் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு, நகைக்கடன்களுக்கு பதிலாக விவசாய சாகுபடி நிலங்களுக்கான சிட்டா அடங்கலை தாக்கல் செய்தல் போன்ற மத்திய அரசின் முடிவுகள் ஏற்கெனவே வெந்துபோன

விவசாயிகளின் உள்ளங்களில் ஈட்டியை பாய்ச்சியுள்ளன. மோடி அரசின் இத்தகைய துரோகங்கள் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அலையால் மூடி மறைக்க முடியாத அளவுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் வெடித்துக் கிளம்புகிறது. எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுக்கும் போராட்டங்களில் விவசாயிகள் திரள்வது மோடி அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர்.

விவசாயிகளின் வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சி என்பது கிராமங்களில் வாழும் 72 சதவீத இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியதாகும். ஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சனைகள், விவசாயத்துறை குறித்து அலட்சியம் காட்டும் மோடி அரசு, பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் உள்ளங்களை குளிர வைப்பதில் அதீத ஆர்வத்தை காட்டி வருகிறது. அதன் விளைவே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்ற பிடிவாதம்.

விவசாயிகளின் வாழ்வு தேசத்தின் வாழ்வாகும். விவசாயிகள் அழிவு தேசத்தின் அழிவாகும். விவசாயிகளுக்கு துரோகமிழைத்து நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்க துடிக்கும் எதேச்சதிகார ஆட்சியாளர்களை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்காவிட்டால் ஒட்டுமொத்தமாக இந்நாடு பெரும் அழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.

Comments are closed.