தெற்கு காஸாவில் ஹமாஸ் மீது ஐஸ்ஐஎஸ் தற்கொலைப் படை தாக்குதல்

0

ஃபலஸ்தீனின் தெற்கு காஸாவில் எகிப்பதை ஒட்டியுள்ள எல்லையோரப் பகுதியில் ஹமாஸின் பாதுகாப்பு படையினர் மீது ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து ஹமாஸின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லையை நெருங்கும் இருவரை பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர். அதில் ஒருவன் தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதில் உயிரிழந்துள்ளான். மற்றொருவன் காயமடைந்துள்ளான்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸின் பல பாதுகாப்புப் படை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்றும் ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர் 28  வயதான நிடால் அல்-ஜாஃபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாமாஸ் இயக்கத்தினர் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். சினாய் தீபகற்பத்தில் இருந்து தங்கள் எல்லைக்குள் ஜிஹாத் சலஃபிகள் என்ற இயக்கத்தவர்கள்  ஊடுருவதை தவிர்க்க ஹமாஸ் எல்லையோர ரோந்துகளை நடத்தி வருகின்றது. இந்த ரோந்துப் பணியின் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

சமீப காலமாக எகிப்துடன் தங்களது உறவுகளை மேம்படுத்த ஹமாஸ் முயற்சித்து வருகின்றது. முன்னதாக எகிப்த்தின் சினாய் பகுதியில் நடக்கும் போராட்டத்தில் அரசிற்கெதிரான போராட்டக் காரர்களுக்கு ஹமாஸ் உதவுவதாக எகிப்து குற்றம் சாட்டியிருந்தது, இந்த குற்றச்சாட்டினை ஹமாஸ் மறுத்துள்ளது.

Comments are closed.