தெலுங்கானா என்கௌண்டர்: காரணமா ?காரியமா?

0

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற சந்திர சேகர் ராவ், நிஜாம் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு இருந்தார்களோ அதேப்போன்று அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் என்று வாக்குறுதி அளித்தார். சிறுபான்மை மையங்கள் அமைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும், வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை வழங்கினார்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஏழு முஸ்லிம்கள் என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டது முஸ்லிம்களின் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற என்கௌண்டரில் முகம்மது இஜாசுதீன் மற்றும் முகம்மது அஸ்லம் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் ஏப்ரல் 7 அன்று விகாருதீன், அம்ஜத் அலீ, ஜாஹிர், ஹனீஃப் மற்றும் இஸார் கான் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் இஸார் கான் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். மற்றவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே நாளில் ஐந்து நபர்கள் கொல்லப்பட்ட பரபரப்பு ஆந்திராவில் இருபது நபர்கள் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அடங்கிப் போனது. இருந்தபோதும் இந்த என்கௌண்டர் குறித்தும் நியாயமான சந்தேகங்கள் சில பத்திரிகையாளர்களாலும் பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்டன. நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை அறிவதற்காக நேரடியாக ஹைதராபாத் சென்றோம். ஏப்ரல் 13,14 ஆகிய இரு தினங்கள் அங்கு தகவல்களை சேகரித்தோம்.

நடத்தப்பட்பட என்கௌண்டர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதையும் நீதி மன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையும் நமக்கு உணர்த்தின.

என்கௌண்டர் செய்யப்பட்டவர்களில் முக்கியமானவராக கருதப்படும் விகாருதீன் பி.காம் பட்டதாரி. 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை துப்பாக்கி சூட்டில் முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் தேதி காவல்துறையினர் மீது விகார் தாக்குதல் நடத்தி கொலை செய்தான் என்பது காவல்துறை வைக்கும் குற்றச்சாட்டு. இதனையே காரணமாக வைத்து 2010ல் விகார் மற்றும் நான்கு நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இது தொடர்பாக அவர் தந்தை செய்யது அஹமதுவை சந்தித்தோம். இவர் சவூதி அரேபியாவில்  சிவில்  இன்ஜினியராக  பணிபுரிந்தவர். அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். “2007ம் ஆண்டு முதலே விகாரை காவல்துறை தனது ஹிட்லிஸ்டில் வைத்து தேட ஆரம்பித்தது. அப்பொழுது, வீட்டை விட்டு வெளியேறியவன் 2010ல் காவல்துறையால் கைது செய்யப்படுகிறான். ஒவ்வொரு வருடமும் மே மாதம் காவல்துறையினரை கொலை செய்தான் என்று காவல்துறை கூறுகிறது.

ஆனால், எத்தனை பேரை கொலை செய்தான் என்பதையும் அதற்கான ஆதாரத்தையும் இதுவரை காவல்துறை காட்டவில்லை. ஆதாரம் இல்லாமல் அநியாயமாக விகாருடன் மற்றவர்களும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். இன்னும் சில மாதங்களில் அவன் விடுதலை ஆகிவிடுவான் என்பதை தெரிந்து கொண்ட காவல்துறை அவனை தினம் தினம் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

ஏப்ரல் ஒன்று முதல் தொடர்ந்து வாய்தாவிற்கு வாரங்கல்லிலிருந்து ஹைதராபாத் வந்து கொண்டிருந்தார்கள். என்கௌண்டர் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், 06.04.2015 அன்று விகாருதீன் ‘எனது உயிருக்கு காவல்துறையால் ஆபத்து இருக்கிறது. எனவே, என்னை வாரங்கல்லிலிருந்து ஹைதராபாத்திற்கு மாற்றி விடுங்கள்’ என எழுதிக் கொடுத்தான். மறுதினம் மாற்றித் தருவதாக நீதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்குள்ளாக இந்த என்கௌண்டரை நடத்தியுள்ளார்கள்.

மாநில அரசு தற்பொழுது எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த விசாரணை கமிஷனில் உள்ள அனைவருமே மாநில காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள். அவர்கள் தங்கள் துறையை சேர்ந்தவர்களை எப்படி காட்டிக் கொடுப்பார்கள்? எஸ்.ஐ.டி. விசாரணை என்பது மிகப்பெரிய கண்துடைப்பு. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஏமாற்றுவதாகவே இதனை நாங்கள் காண்கிறோம்.

எனவே, உண்மையான நீதிமன்ற விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டால்தான் உண்மை வெளிவரும். இதற்காக, நாங்கள் உயர்      நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்’ என்றார்.

இந்த என்கௌண்டரில் கொலை செய்யப்பட்ட மற்றொரு நபர் டாக்டர் ஹனீஃப். ஹைதராபாத்தில் இந்துக்கள் நிறைந்து வாழக்கூடிய முர்ஸிதாபாத் பகுதியில் யுனானி மருத்துவராக ஐந்து வருடங்களாக கிளினிக் நடத்தி வந்தவர். இரக்க குணம் கொண்டவர், வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பவர் என அப்பகுதி இந்து மக்களால் புகழப்படுபவர். அவரின் மனைவி இஸ்ரத் பானுவை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

2010ல் டாக்டர் ஹனீஃப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. சிறிய வீட்டில் எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தனது அண்ணன் குடும்பத்துடன் மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.

“என் கணவரை ஏன் கைது செய்தார்கள்? எதற்கு கைது செய்தார்கள்? என்று கூட எங்களுக்கு தெரியாது. மருத்துவ மனையில் வேலை செய்யும் பெண்மணி சொன்ன பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டதை தெரிந்து கொண்டோம். 2010 ஜூலை 14 அன்று காலை 11.50 மணியளவில் சீருடை அணியாத காவலர்கள் அவரை அழைத்து சென்றனர். பின்னர் ஐந்து நாட்கள் கழித்து நம்பள்ளி சிறையில்தான் நாங்கள் அவரைப் பார்த்தோம். அவர் விகாருதீனுக்கு உதவி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாளிதழ் செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம்.

ஆனால், உண்மையில் விகாருதீனை என் கணவர் பார்த்தது கூட கிடையாது. பின்னர் எப்படி உதவி செய்திருக்க முடியும்? ஒரு வழியாக நான்கு வருடங்கள் கழித்து, இன்னும் சில மாதங்களில் வழக்கு முடிந்து என் கணவர் நிரபராதி என்ற தீர்ப்பு வர இருந்த சூழலில் அவரை அநியாயமாக சுட்டுக் கொன்றுவிட்டனர்.

ஏற்கெனவே நான்கு வருடமாக கணவரை பிரிந்து நானும், தந்தையை பிரிந்து பிள்ளைகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம். இப்பொழுது  என்கௌண்டரில் என்னுடைய கணவர் பலியாகியிருப்பது மேலும் எங்களை துயரத்தில் ஆழ்த்துகிறது’ என்று கண்களில் கண்ணீர் மல்க நம்மிடம் கூறினார்.

’உண்மையில் என் கணவர் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும். அதை விட்டுவிட்டு காவல்துறையினர் எப்படி சுட்டுக் கொல்ல முடியும்? சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் அவர்களின் உடம்புகளில் உள்ளன. கூர்மையான கத்தியை வைத்து மாம்பழத்தை வெட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல ஹனீஃபுடைய உடம்பில் பல்வேறு காயங்கள் இருந்தன. இது எப்படி நடந்தது என்பதை காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கு முன்பே என் கணவரை சுட்டுக் கொல்ல காவல்துறை முடிவு செய்ததை அவர் என்னிடம் தெரிவித்தார். வாய்தாவிற்கு அழைத்து வரும்பொழுது காவலர்கள் அவரை இறங்கி ஓட சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர் ஓட மறுக்கவே அவரை என்கௌண்டர் செய்துள்ளார்கள்’ என்று மேலும் கூறினார்.

எஸ்.ஐ.டி. விசாரணை என்பது கேலிக்குரியது

தெலுங்கானா பாப்புலர் ஃப்ரண்ட் பொறுப்புக்குழு பொதுச் செயலாளர் மொய்னுதீன், “ஹைதராபாத் முஸ்லிம்களை தொடர்ந்து அச்ச  த்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பயத்துடன் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் சிந்தனை போக்காக இருந்து வந்துள்ளது. இதற்கு சந்திர சேகர் ராவும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரே வாரத்தில் ஏழு நபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. எனவே எல்லா ஆட்சியாளரையும் மிஞ்சிவிட்டார் சந்திர சேகர் ராவ்.

 எஸ்.ஐ.டி. என்பது கேலிக்குரியது. உண்மை வெளிவரக்கூடாது என்பதற்காகவே இது அமைக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.

இதன் முதல் கட்டமாக அவாமி இன்ஸாப் மூவ்மெண்ட் என்ற கூட்டமைப்பில் உள்ள நாங்கள் மாநில முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில சிறுபான்மையினர் கமிஷன் தலைவரிடம் உண்மையான நீதி விசாரணை வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மனு கொடுத்திருக்கிறோம்.

எங்களுடைய தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உரிய சட்ட உதவிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

தெலுங்கானாவின் சில கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து அவாமி இன்சாஃப் மூவ்மெண்ட் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இவ்வமைப்பின் தலைவர் காலிதா பர்வீனை சந்தித்தோம். “போலி என்கௌண்டர் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டி மாநில முதல்வரை சந்திக்க முயற்சித்து வருகிறோம். இதற்கிடையில் மாநில சிறுபான்மை கமிஷனின் தலைவர் ஆபித் ரசூல் கானை சந்தித்து நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம்.

இதில் அப்பாவி இளைஞர்கள் அநீதமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

மக்களிடையே உள்ள பிளவுகளை அறுவடை செய்யும் அரசியல் கட்சிகள்

ஜெயா விந்தியாலயா (பி.யு.சி.எல், மாநில பொதுச் செயலாளர், ஆந்திரா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்) நம்மிடம் கூறும்போது, “தெலுங்கானா அரசு என்கௌண்டர் வழக்கை எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதை வரவேற்கிறேன். 50 ஆண்டுகால ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச வரலாற்றில் தீவிரவாதிகள் என குற்றம்சாட்டப்பட்டவர்களை என்கௌண்டர் செய்த வழக்கில் இப்பொழுது எஸ்.ஐ.டி. விசõரணைக்கு உத்தரவிட்டதே வரவேற்க வேண்டிய விஷயம்.

அதேசமயம் இவ்வழக்கில் மாநில அரசிற்கும் எம்.ஐ.எம். கட்சிக்கும் தொடர்புள்ளது என்று நான் கருதுகிறேன்.

உவைசி கட்சி இது வரை இந்த விஷயத்தில் மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரில்கூட சந்திக்கவில்லை. மாறாக, முதல்வரை சந்தித்ததாக பொய்யாக செய்திகளை வெளியிட்டார். அவர் முதல்வரை சந்தித்ததற்கான இதுவரை புகைப்படம் அவர் பத்திரிகையில் கூட வெளிவரவில்லை. தெலுங்கானாவில் ஐந்து பேரின் படுகொலையை மறைப்பதற்கே ஆந்திராவில் 20 பேர் கொல்லப்பட்டனர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறிக்கும், அரசியல் இலாபத்திற்கு அப்பாவிகள் பலியாகி உள்ளனர். இது மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காத உவைசி மறுபக்கம் என்கௌண்டர் வழக்கை நடத்த திட்டமிட்டு வருகிறார். அவர்களின் அரசியல் நாடகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இருபது ஆண்டுகாலமாக உவைசி கட்சியினர்தான் பழைய ஹைதராபாத்தில் எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்கள். இது வரை முஸ்லிம்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? மாறாக, முஸ்லிம்களின் சொத்துக்களை மிரட்டி, தங்கள் பெயரில் எழுதிக் கொண்டதுதான் மிச்சம்.

தெலுங்கானா மக்கள் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், தலித்கள் என பிரிந்து கிடக்கின்றனர். அரசியலில் லாபம் அடைய விரும்புபவர்கள் இதனை சரியாக பயன்படுத்தி வருகின்றனர்” என்பதை சுட்டிக் காட்டினார்.

உவைசி மற்றும் அவர் கட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிவதற்கு அவரை தொடர்பு கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.

 சுதந்திரமான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும்: அம்னெஸ்டி இந்தியா வேண்டுகோள்

தெலுங்கானாவில் ஐந்து விசாரணை கைதிகள் என்கௌண்டரில் கொல்லப்பட்ட வழக்கில், சுதந்திரமான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு அம்னெஸ்டி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐந்து விசாரணை கைதிகள் விஷயத்தில் காவல்துறையினர் தங்களுடைய அதிகாரத்திற்கு மீறி, சட்டத்தை தங்களுடைய கையில் எடுத்து செயல்பட்டுள்ளனர்.

‘நீதிக்கு புறம்பாக படுகொலைகள் நடப்பது இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த என்கௌண்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சுதந்திரமான குற்றவியல் விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்’ என்று அம்னெஸ்டி இந்தியாவின் மூத்த பிரச்சாரகர் வி.பி. அபிஹிர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கு ஒன்றும் புதியது அல்ல. ஒன்றிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போதே முஸ்லிம்களுக்கு எதிரான தங்கள் போக்கை பலமுறை வெளிப்படையாகவே காட்டியுள்ளனர். ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த வாழ்க்கையை இன்னும் தேடி வருகின்றனர்.காவல்துறையின் சிந்தனை போக்கில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைதான் சமீபத்திய என்கௌண்டர்கள் காட்டுகின்றன. காவல்துறையின் சிந்தனை போக்கில் மாற்றம் வருமா? என்கௌண்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய விசாரணை உத்தரவிடப்படுமா?கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படுமா? ஏராளமான கேள்விகளுடன் ஹைதராபாத்திலிருந்து திரும்பினோம்.

என்கௌண்டரில் உள்ள சந்தேகங்கள்

* விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு காலை பத்து மணிக்கு மேல்தான் அழைத்து

செல்வார்கள். ஆனால், என்கௌண்டர் நடைபெற்ற அன்று அதிகாலையிலேயே அழைத்து வந்துள்ளனர்.

* கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில் துப்பாக்கியை எப்படி பிடுங்க முடியும்?

* என்கௌண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்களில் ஏற்கெனவே சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள, கை, கால்கள் முறிவு பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. இந்த காயங்கள் எப்போது ஏற்பட்டவை?

* வாராங்கல் முதல் நல்கொண்டா இடையே இரண்டு மணிநேரத்திற்கு திட்டமிட்டே போக்குவரத்தை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?

* சாதாரண ரிசர்வ் போலீஸ் எஸ்.ஐ. உதய் பாஸ்கருக்கு என்கௌண்டர் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

* மாநில உள்துறை அமைச்சரே என்கௌண்டர் சம்பந்தமாக எனக்கு தெரியாது என்கிறார். அப்படி இருந்தால் யாருடைய உத்தரவில் உதய் பாஸ்கர் என்கௌண்டர் செய்தார்?

“திட்டமிட்ட படுகொலை” – லத்தீஃப் முஹம்மது கான்

தலைவர், சிவில் லிபர்டிஸ் மானிடரிங் கமிட்டி

 “இது திட்டமிட்ட படுகொலை என்றுதான் நான் சொல்லுவேன். இதை விட மோசமான நிகழ்வை நீங்கள் பார்க்க முடியாது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திரசேகர் ராவின் ஆட்சியை மதிப்பிட முடியும். முஸ்லிம்கள், ஆட்சியில் இருப்பவர்களுக்கு அஞ்சியே வாழ வேண்டும் என்ற செய்தியை சந்திரசேகர் ராவ் இதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

 தெலுங்கானா போராட்டத்தின் போது சந்திரசேகர் ராவுக்கு 90 சதவீதமான முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்தனர். அனைத்து போராட்டங்களிலும் அவருடன் பங்கெடுத்து பிறகு தேர்தலில் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதிலும் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.

இதையெல்லாம் மறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தில் இப்பொழுது சுகம் காண்கிறார்.

சந்திர சேகர ராவுக்கு தெரிந்தே இப்படுகொலை நடந்திருக்கிறது. தெலுங்கானாவுக்கு இணையாக ஆந்திராவிலும் அப்பாவி தமிழர்களின் படுகொலை நடைபெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு இவருக்கு சளைத்தவரல்ல. இரண்டு என்கௌண்டர்களையும் மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.”

மாநில சிறுபான்மையின ஆணையர் ஆபித் ரசூல் கானின் பேட்டி

“நடந்த இந்த என்கௌண்டர் போலியானது என்று கூறி பல தரப்பட்ட மக்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எங்களிடம் மனுக்களை அளித்துள்ளனர்.

இதனை அறிய  ஒரு கமிட்டியை நியமித்துள்ளோம். அக்கமிட்டி பத்து நாட்களில் என்கௌண்டர் தொடர்பாக பதில் அளிக்கும். பின்னர் அது தொடர்பான முடிவு மேற்கொள்ளப்படும்.

எஸ்.ஐ.டி.யில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். இருந்தபோதிலும் அவர்கள் காவல்துறையினருக்கே சார்பாக இயங்குவார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்ற நாங்கள் வலியுறுத்துவோம்.”

காவல்துறையின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை

   – வழக்கறிஞர் எம்.ஏ. அஸிம்

என்கௌண்டர் செய்யப்பட்ட விகாருதீன், ஜாஹிர், அம்ஜத் அலி மற்றும் டாக்டர் ஹனீஃப் ஆகியோருக்கு வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான வழக்கறிஞர் எம்.ஏ. அஸிம் கூறும்பொழுது, ‘இந்த வழக்கில் மொத்தமாக 13க்கும் அதிகமானோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், எட்டு நபர்களை தவிர மற்றவர்கள் ஹைதராபாத் செராபள்ளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு விட்டனர். என்கௌண்டர் என்பது ஹைதராபாத்திற்கு புதிதல்ல. ஆனால், ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் என்கௌண்டர் செய்யப்பட்டது இதுதான் முதல் முறை.

காவல்துறையின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் குற்றவாளிகள் எப்படி, காவல்துறையினரிடம் இருக்கும்  துப்பாக்கியை பறித்து தாக்குதல் நடத்த முடியும்? ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள் அதற்கு சாட்சி.

பதினேழு காவல்துறையினர் இருக்கும் இடத்தில் கை விலங்குகள் மாட்டப்பட்ட ஐந்து கைதிகள் அத்துமீறினார்கள் என்பது கடைந்தெடுத்த புனைவு. மாநிலத்தின் டி.ஜி.பி.க்கே ஒருவரை சுட்டுக் கொலை செய்வதற்கு அதிகாரம் கிடையாது என்கிற பட்சத்தில், ஒரு சாதாரண ரிசர்வ் சப்இன்ஸ்பெக்டர் உதய் பாஸ்கர் எப்படி சுட்டுக் கொல்ல முடியும்? இதில் உயர் அதிகாரிகளின் பங்கு கண்டிப்பாக இருக்கிறது.

என்கௌண்டர் நடந்த பகுதிக்குட்பட்ட அலேர் காவல்நிலையத்தில் விகாருதீன் தங்களை தாக்க வந்ததாக பிரிவு 307 (கொலை முயற்சி) வழக்கு காவல்துறையினரால் பதியப்பட்டது. அதே சமயம் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட விகாருதீன் தகப்பனார் செய்யது அஹமது தன் மகனை அநியாயமாக கொலை செய்துவிட்டனர் என்று பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தபோது காவல்துறை ஏற்றுக் கொள்ளாமல் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

இரண்டு தரப்பினரின் மனுக்களையும் ஏற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்.இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இதற்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி இருக்கின்றோம். இந்திய நீதித்துறை என்பது சக்தி வாய்ந்தது. அதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இந்த என்கௌண்டர் வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்’ என்று உறுதியுடன் கூறினார்.

(மே 2015 இதழில் வெளியான நேரடி ரிப்போர்ட்)

Comments are closed.