தேசதுரோக வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுதலை

0

தேசதுரோக வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுதலை

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) நடத்தி வந்த பத்திரிகையான சிம் செய்திமடல் பத்திரிகையில் ‘காஷ்மீர் இந்தியாவின் கொசோவா’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை 1999-ம் ஆண்டு  மே, ஜூன் மாத இதழ்களில்  வெளிவந்தது. எஸ்.ஹெச்.முஹ்யித்தீன் என்பவர் அக்கட்டுரையை  எழுதியிருந்தார். கோவையில் ஷாஜஹான் என்பவரால்  பொதுமக்களிடம் அப்பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அப்போதிருந்த கோவை காட்டூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுந்தரராஜன் அவரைக் கைது செய்தார்.

பத்திரிகை ஆசிரியரான ஷமீமுல் இஸ்லாம், துணை ஆசிரியரான செய்யத் அப்துர்ரஹ்மான், நிர்வாகியான செய்யது முஹம்மத், இதழ் வடிவமைப்பாளரான காதர்பாபா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 124-கி, 153கி, 153ஙி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை இரண்டாவது நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வரை நடத்தப்பட்டது. இதற்கிடையே  எஸ்.ஹெச். முஹ்யித்தீன் ஜாமீனில் வெளியே இருந்தபோது சில மாதத்திலேயே உடல்நலக்குறைவால்  இறந்துபோனார். அதனால் அவர்மீதான வழக்குவிசாரணை கைவிடப்பட்டது.

வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி பிரேம்குமார் இவ்வழக்கில் மூன்று பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஐந்து பேருக்கும் மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதித்து 2004ல் தீர்ப்பு கூறினார். சிறையில் ஏற்கனவே மூன்றாண்டுகள் கழித்துவிட்டதால் தீர்ப்பு வெளியாகிய சில நாட்களில் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆயினும் தாங்கள் குற்றவாளிகள் இல்லையென்பதை நிரூபிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

2010-ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து முன்னிலையில் இவ்வழக்கு மேல்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இவ்வழக்கின் பதிவுகளில் சிலமாற்றங்களை செய்யவேண்டும் எனக்கூறி மறுபடியும் கோவை 2-வது விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நீதிபதி அலமேலு நடராஜன் சென்ற 2012-ல் இரண்டாவது முறையாக இவ்வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில் பிரிவு 153-கி -ன் கீழ் ஐந்துபேரும் குற்றமற்றவர்கள் என்று கூறி மீதி இரண்டு பிரிவுகளின் கீழும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டையுடன் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை இதில் கழித்துவிடுமாறும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மீண்டும் 2012-ல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவம்பர் மாதம் நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (தேசதுரோக பிரிவு) 124-கி ன் கீழ் தண்டனை வழங்கியது செல்லாது எனக்கூறி அப்பிரிவின் கீழ் ஐந்துபேரையும் விடுதலைசெய்து 19.12.2019 அன்று தீர்ப்பளித்தார். மற்ற பிரிவான 153-ஙி ன் கீழ் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஷமீமுல் இஸ்லாம் மற்றும் துணை ஆசிரியராக பொறுப்புவகித்த அப்துர்ரஹ்மான் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தது செல்லும் எனக்கூறி மீதியுள்ள அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Comments are closed.