தேசப்பற்றை வளர்க்க பல்கலைகழகங்களில் விவேகானந்தர் சிலைகளை நிறுவும்படி ராஜஸ்தான் அரசு உத்தரவு

0

மத்தியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த நாள் முதல் தேசப்பற்று, தேச உணர்வு மற்றும் தேசியம் என்பதை மிக முக்கியமான ஒன்றாக நாட்டு மக்களிடையே நிலைநிறுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அனைத்து பல்கலைகழக வளாகங்களிலும் இராணுவ பிரங்கியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியதற்கு பிறகு தற்போது மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் முன்மாதிரி தேசத்தலைவர்களின் சிலைகளை நிறுவ அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒருபகுதியாக இராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்களிடையே தேச உணர்வு மற்றும் நாட்டு பற்று உண்டாக்கும் வகையில் தேச தலைவர்களின் உருவ சிலைகளை கட்டாயம் நிறுவ இராஜஸ்தான் அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து இராஜஸ்தான் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி வளாகங்களிலும் நாட்டின் முன்மாதிரி ஆளுமைகளின் உருவ சிலைகளை கட்டாயம் நிறுவ வேண்டும், இதற்கு முன்பு அங்கு அதுபோன்று சிலை இருந்தால் புதியதாக சிலை நிறுவ தேவையில்லை என்று கூறப்படுள்ளது.

முன்மாதிரி ஆளுமைகளின் சிலைகளை புதிதாக நிறுவவுள்ள கல்லூரிகளுக்கு சுவாமி விவேகானந்தர் சிலையை நிறுவ வேண்டிய கட்டாயத்தை அந்த அறிக்கை முன்னிறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய இராஜஸ்தான் மாநில உயர்கல்வி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் “மாணவர்களிடையே தேசப்பற்று மற்றும் உன்னதமான பண்புகளை அதிகம் கற்றுகொடுக்க போராடியவர் சுவாமி விவேகானந்தர், இளைஞர் சக்தியின் அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தர் சிலையை கல்லூரி வளாகங்களில் நிறுவது தான் சிறந்ததாக இருக்கும். இதன் காரணமாக தான் அனைத்து கல்லூரிகளிலும் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவ வேண்டி அதிகளவில் கட்டாயம் ஏற்படுத்தப்படுள்ளது. மாணவர்களுக்கு தேசபற்றை ஊட்டுவதே எங்களுடைய முக்கிய இலக்கு” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தர் சிலை கல்வி வளாகங்களில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் இராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் தான். கடந்த ஆண்டு இந்த கோரிக்கையை இராஜஸ்தான் பல்கலைகழக துணை வேந்தரிடம் ஆளுநர் முன்வைத்தார்.

இராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இராஜஸ்தான் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜீவ் குப்தா கூறுகையில், “ கல்வி வளாகங்களில் தனிநபர் வழிபாடு அல்லது புகழ்பாடுவது மற்றும் ஓர் குறிபிட்ட சிந்தனை சார்ந்த வழிபாடுகளுக்கு இடம் கிடையாது, ஆனால் பாஜக அரசு இதனை தொடர்ந்து செய்து வருகிறது. குறிபிட்ட ஒரு தனி நபரை மட்டும் புகழ்பாடுவது, ஓர் குறிபிட்ட தனி நபர் அடையாளமாக அது உருவாக்கப்படும். பின் அதற்கு எதிராக கருத்து மோதல், சண்டை சச்சரவுகளை அது உண்டாக்கும். கல்வி நிலையங்களை ஆக்கிரமிக்க முயலும் வலதுசாரி சக்திகளுக்கு இது ஆதரவாக அமையும் என்றார்.

மேலும் இதுபோன்ற முயற்சிகளை பாஜக அரசு செய்வது முதலல்ல. பல்வேறு வழிகளில் அவர்கள் தங்களுக்கு வசதியானவற்றை மாணவர்களிடையே திணிக்க முயன்று வருகின்றனர். பாடத்திட்டங்களை தங்களுக்கு ஏற்றவ்வாறு மாற்றியமைப்பதில் தொடங்கி தற்போது விவேகானந்தர் சிலையில் வந்து நிற்கிறனர்” என்றார்.

இராஜஸ்தானில் விவேகானந்தரை இந்துதுவாவின் அடையாளத்திற்குள் அடக்க பாஜக முயன்று வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மோகன்லால் குப்தா இராஜஸ்தான் பல்கலைகழக பாடத்திட்டத்தில் விவேகானந்தரின் கலாச்சார தேசியவாதம் என்ற தொகுப்பை சேர்க்க குரல் எழுப்பினார். அதேபோல் ஹல்டிகாட் போரில் அக்பரை மகாராணா பிரதாப் வீழ்த்தி மாபெரும்வெற்றியை பெற்றார் என்றும் மாற்றி எழுத சொன்னார்.

அதேபோல் இராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு உயர்கல்வி பாடத்திட்டத்தில் பிரதமர் மோடி அரசினை புகழ்பாடுவது போன்ற பாடமும் இந்த்துவா சித்தாந்தம் குறித்த பிரச்சார பாடமும் சேர்க்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.