தேசிய கல்விக் கொள்கை வரைவில் மாற்றங்கள் தேவை: PFI

0

பத்திரிகை செய்தி

தேசிய கல்விக் கொள்கை வரைவில் மாற்றங்கள் தேவை: பாப்புலர் ஃப்ரண்ட்!

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் புதிய வரைவானது பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கக்கூடியதாக இருப்பதால், அவ்வரைவில் தீவிர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய கல்வி கொள்கையில் புகுத்தப்பட்டுள்ள மாற்றங்களில் சில மாணவர்களின் மீது தேவையற்ற பளுவை சுமத்துவதாகவும், மேலும் சில மாற்றங்கள் கல்வித்துறையின் மீதான அரசின் பிடியை வலுப்படுத்துவதற்கான உள்நோக்கத்தோடும் அமைந்துள்ளது.

9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் ஆண்டுத்தேர்வு முறை மாற்றப்பட்டு 8 செமஸ்டர் முறையினை அறிமுகப்படுத்துவதன் தாக்கம் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நாட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியர்களின் கடும் பற்றாக்குறை காரணமாக பாடம் நடத்துவதற்கு பள்ளிகள் திண்டாடி வருகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணாமல் செமஸ்டர் முறைக்கு மாறுவதென்பது, மாணவர்களின் மீது அதிக சுமையை சுமத்தும்.

நாட்டின் கல்வித்துறையை நிர்வகிக்கும் உட்சபச்ச அதிகார அமைப்பாக தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய சிக்க்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் செயல்படும். இவ்வாணையத்தின் சட்ட அமைப்பு கல்வி நலனை விட அரசியல் நலன் சார்ந்ததாகவே உள்ளது. இவ்வாணையத்தின் உறுப்பினர்களில் பாதி நபர்கள் மட்டுமே கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர், மீதியுள்ள உறுப்பினர்களை நாடாளுமன்ற கேபினட் தேர்வு செய்யும். நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 50% சதவீத உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசின் நலன் சார்ந்து செயல்படக் கூடியதாகவே இவ்வமைப்பு இருக்கும் என்பதனை உணர்த்துகிறது.

இந்தியை மூன்றாம் பாட மொழியாக கட்டாய திணிப்பு செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான நகர்வாகும். இந்தி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பேசப்படும் மொழியல்ல. பிற மொழி பேசக்கூடிய மக்களின் மீதான இந்தி திணிப்பு என்பது, பல்வேறு மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

கல்வித்துறையில் தன்னாட்சி மற்றும் தனியார் துறையினரின் நுழைவிற்காக தாராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, கல்வி நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக்கொள்ள முனைவதையே இது காட்டுகிறது. மேலும் கல்விக்கட்டணம், பட்டப்படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை தீர்மானித்துக் கொள்ளும் உரிமையும் அக்கல்லூரிகளுக்கு வழங்கப்படுள்ளது. ‘சர்வதேச தரத்திற்கு உயர்த்துகிறோம்’ என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் இலவச அல்லது குறைந்த கட்டண கல்வி முறையினை குழிதோண்டி புதைத்துவிட்டு, தனியார் நிறுவனங்கள் வளர்ந்து வளம் பெறுவதற்கும், அதனால் நாட்டில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக மாறுவதற்குமே வழிவகுக்கும். தரம் மற்றும் திறனை முக்கியமாக விவாதிக்கும் இவ்வரைவு, நலிவடைந்தவர்களின் நல்வாழ்விற்காக அரசியலமைப்பு வழங்கியுள்ள கட்டாய இடஒதுக்கீட்டினை வசதியாக தவிர்த்துவிட்டது.

பகுத்தறிவு சிந்தனையையும் விஞ்ஞான அணுகுமுறையையும் ஊக்குவிப்பதற்கு பதிலாக, பண்டைய அறிவின் மீதான அடிப்படையற்ற ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் ‘மிஷன் நாலந்தா’ மற்றும் ‘மிஷன் தக்க்ஷஷிலா’ அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக‘ கூறப்படும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வியினை மாற்றி அமைப்பது கல்வியை காவிமயமாக்குவதற்கான அப்பட்டமான முயற்சியாகும்.

ஆளும் வர்க்கத்தினரால் நமது கல்வி முறை அரசியலாக்கப்படுவது, வணிகமயமாக்கப்படுவது மற்றும் காவிமயமாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் மாணவர்களும் முன்வர வேண்டுமென இக்கூட்டம் அழைப்பு விடுக்கிறது.

தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் OMA சலாம், செயலாளர்கள் அப்துல் வாஹித் சேட் மற்றும் அனிஸ் அஹ்மத், E.M.அப்துல் ரஹ்மான் மற்றும் K.M.ஷெரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

Comments are closed.