கூகுள் தேடலில் மோடியை மோசமாக சித்தரிக்கும் செய்தி: கூகிள் மீது வி.ஹச்.பி. வழக்கு

0

பிரபல இணையதள தேடுபொறி நிறுவனமான கூகிள் நிறுவனம் மீது மோடியை மோசமான வகையில் சித்தரிக்கும் தேடுதல் முடிவை வெளியிட்டதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர் கமால் கிஷோர், வழக்கறிஞர் நந்த் கிஷோர் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரயுகள் பலவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மே 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட தனது புகாரில், தான் தேசிய செய்திகளை கூகிள் தளத்தில் தேடி வந்ததாகவும் அப்போது மோடி குறித்த தவறான கருத்துக்களை அடங்கிய செய்திகளை கூகிள் தளம் தனக்கு காட்டியதாகவும் அது தனக்கும் தன்னைப் போன்ற பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான காரணம் கூறி கூகிள் மீது வழக்கு தொடரப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 இல் இந்தியாவின் டாப் 10 கிரிமினல்கள் குறித்த தேடுதல் முடிவில் மோடியின் பெயர் இடம் பெற்றது தொடர்பாக கூகிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. அது குறித்து அப்போது விளக்கமளித்த கூகிள் நிறுவனம், அந்த தேடுதல் முடிவு தங்கள் நிறுவனத்தின் கருத்து அல்ல என்று தெரிவித்திருந்தது.

தற்போதைய இந்த வழக்கு தொடர்பாக கூகிள் நிறுவன செய்தித் தொடர்பாளரிடம் கருத்து கேட்கையில், தங்களுக்கு இப்படியான எந்த ஒரு வழக்கு குறித்தும் தகவல் கிடைக்கவில்லை என்றும் அதனால் இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகிள் நிறுவனத்திற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கூகிள் என்று எழுதப்பட்ட காதிதத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தீயிட்டு கொளுத்தினர்.

Comments are closed.