தேர்தல் அறிக்கைகள்! நிறைவேறுமா? காற்றோடு கலந்திடுமா?

0

தேர்தல் அறிக்கைகள்! நிறைவேறுமா? காற்றோடு கலந்திடுமா?

2019 மக்களவைக்கான தேர்தல் திருவிழா துவங்கிவிட்டது. தேர்தல் களம் என்றாலே கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை என தேர்தல் களம் களை கட்டிவிடும். தேர்தல் அறிக்கை என்பது ஒரு கட்சியின் தரத்தை நிர்ணயிக்க கூடியதாகவும், கட்சிகள் மக்களிடம் தங்களை அடையாளப்படுத்துவதற்கான கருவியாகவும் பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையின் ஊடே தான் கட்சிகள் கவனம் செலுத்தும் மக்கள் பிரச்சனைகள், நாட்டு நலன், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன், கொள்கை முடிவு, திட்டங்கள் ஆகியவற்றை பொது சமூகம் பார்க்கிறது.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் நிறைவேற்றினார்களா- என்பதை பொது சமூகம் ஆராயும். தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் கண்ணாடி போன்றது எனலாம். ஆகையால் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் முக்கிய கட்சிகள் அதீத கவனத்தை எடுத்துக் கொள்ளும். பல தரப்பினரின் கருத்துக்களை அலசி ஆராய்ந்து அவற்றை தனது அறிக்கையில் உட்படுத்தும். துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கும். தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு கட்சியின் உயர்மட்ட, அனுபவமிக்க தலைவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மூன்று பிரதான கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஒன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இரண்டு, அஇஅதிமு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் & எஸ்.டி.பி.ஐ கூட்டணி.

மக்களவை தேர்தல் என்பதால் கூட்டணிகளுக்கு மாநில கட்சிகள் தலைமை வகித்தாலும், எதையெல்லாம் நிறைவேற்றுவோம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க இயலாது. தங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியிடம் வலியுறுத்தி பெற்றுத்தரப்படும் என்பதே தேர்தல் அறிக்கையின் தொனியாக இருக்கும். சில கட்சிகள் தனித்துப்போட்டியிட்டாலும் அதன் செல்வாக்கைப் பொறுத்து தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் ஆட்சியில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளிக்கும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று கட்சிகளும் சில அடிப்படை பிரச்சனைகளை, வாக்கிய அமைப்புகளில் மாறுபாடுகள் இருந்தாலும், பொதுவாகவே பேசியிருக்கின்றன.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுதல், நதி நீர் இணைப்பு திட்டம், நீட் தேர்வை ரத்து செய்தல், கல்விக்கடன் மற்றும் விவசாய கடனை ரத்து செய்தல், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுதல், மத்திய அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவித்தல்  ஆகியன இவர்களின் அறிக்கையில் பொதுவாக உள்ளன. இவற்றில் அதிமுகவின் அறிக்கை குறித்து தனியாக குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கு காரணமான, மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்கி வரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்த வாக்குறுதிகளையெல்லாம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு வலுவான குரலை எழுப்பி அவற்றை பாதுகாப்பதில் அரணாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக ஆட்சியாளர்களின் பலவீனத்தை பா.ஜ.க. அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்களை மிரட்டி பணியவைத்து, ஆதாயங்களை அடைந்து வருவதும், தமிழகத்தின் உரிமைகளை நசுக்குவதும் நாடறிந்த அப்பட்டமான உண்மைகள். ஆகவே இந்த உரிமைகளையெல்லாம் அதிமுக வருங்காலத்தில் எவ்வாறு வலியுறுத்திப் பெறப்போகிறது என்பது கேள்விக்குரியது.

திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகளில் அந்த கட்சிக்கும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முதலானவை தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போதும், மத்திய ஆட்சியில் பங்கேற்றபோதும் கொண்டு வரப்பட்டவை. ஆகவே இவ்விஷயங்களில் திமுக எந்த அளவுக்கு கவனம் செலுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்று 2009ல் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது தி.மு.க. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முக்கிய கூட்டணி கட்சியாக இடம் பெற்ற பிறகும் திமுக இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை.

அமமுக கட்சி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக-&வில் மத்திய அரசின் பின்னணியில் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக உருவானது. மத்திய அரசின் அடக்குமுறைகளையும் தாண்டி இன்று தமிழக அரசியல் களத்தில் தைரியமாக பயணிக்கிறது. தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகளில் அக்கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு தேர்தலில் அக்கட்சி பெறும் வெற்றி மற்றும் அடுத்து அமையப்போகும் அரசில் கட்சியின் தாக்கம் ஆகியவற்றை சார்ந்தே இருக்கிறது.

பொதுவான பிரச்சனைகள்

  1. வறுமை ஒழிப்பு

வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ்  ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அதிமுகவும், தனது பழைய திட்டமான முதியோர் ஓய்வூதியத்தை ரூ. 2000ஆக அதிகரித்து வழங்கப்படும் என்று திமுகவும் அறிவித்துள்ளன. அமமுக&வும் முதியோர் உதவித்தொகை ரூ. இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறுகிறது. ஆனால், வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்கள் குறித்த துல்லியமான புள்ளிவிபரங்கள், பயனாளிகளுக்கு பலன் முறையாக போய் சேருகிறதா என்பதற்கான சமூக தணிக்கை முறை ஆகியன இல்லாத சூழலில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் ஏழைகளுக்கு வழங்கும் உதவித் தொகையில் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் அதற்கான திட்டங்களை அதிமுக தெளிவு படுத்தவில்லை.

வேலை வாய்ப்பு

ஒரு கோடி சாலைப்பணியாளர்கள், 50 இலட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்புதல், கார்ப்பரேட் சமுதாயப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் அவை அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி 20 கிலோ மீட்டரில் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் தக்க பணி நியமனம் வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 50 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கட்டாயம் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறது திமுக. இது நம்பிக்கை தரக்கூடிய வாக்குறுதிதான். இருப்பினும் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நியமனம் குறித்து இவர்களின் அறிக்கையில் எதுவுமில்லை.

அதிமுகவோ  நாட்டிலுள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி வழங்கப்படும் என்று சொல்கிறது. அதேவேளையில் அமமுக தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுப்பணிகளில் 85 சதவீத தமிழர்களையே நியமிக்க சட்டம் இயற்றப்படும் என்றும், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறைந்தது 80 சதவீத இடங்கள் தமிழர்களை கொண்டே நிரப்பவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்களின் நியமனம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இந்த கூற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் தமிழகத்தை ஆறு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் அர்த்தமுள்ள வேலை வாய்ப்புடன் கூடிய தகவல் பூங்காக்கள் குறித்த வாக்குறுதியும் பாராட்டிற்குரியது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  மீண்டும் கொண்டு வருவதாக தி.மு.க, அமமுக தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.அதிமுகவின் தேர்தல் அறிக்கை இதுகுறித்து மௌனம் சாதிக்கிறது.

சிறுபான்மையினர் நலன்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் தலைப்பின் கீழ் பேராசிரியர் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் படுகொலைகள் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை அளித்திட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படவேண்டும் என்ற செய்தியை தவறாக இணைத்துள்ளனர். இவர்கள் யாரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது.

ஏற்கனவே முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப்பட்டவர் (ஒ.பி.சி) பட்டியலில்தான் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் அவர்களை ஓ.பி.சி. பட்டியலில் இணைக்கவேண்டும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தி.மு.க, அமமுக இரண்டு கட்சிகளின் அறிக்கையிலும் கூறப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். மேலும் தலித் கிறிஸ்தவர்கள் தாங்கள் அனுபவித்த சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்கு ஆதரவான கருத்துக்களும் இரண்டு கட்சிகளின் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்காக அரசமைப்புச் சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் கொண்டு வரவேண்டாம் என்று கூறியுள்ளது.மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து திமுக, அதிமுக கட்சிகள் பேச மறந்த நிலையில் அமமுக தனது தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது பாராட்டிற்குரியது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க அமமுக இந்த கருத்தை தேர்தல் அறிக்கையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமமுக தேர்தல் அறிக்கையில் கூடுதலாக, ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்பு, வக்ஃப் வாரியம் மூலமாக மருத்துவக்கல்லூரி, முத்தலாக் சட்டத்தில் திருத்தம், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சதவீதம் அதிகரித்தல், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், துணை இமாம்கள், முஅத்தின்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் ஆகிய சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கூடங்குளம் விரிவாக்கத்திட்டத்தை கைவிடுதல், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி முழுமையாக வாபஸ் பெறுவது, வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களைக் கொண்ட இளைஞர் சுய உதவிக் குழுக்கள், இயற்கை சீற்றங்கள், நீர்வளம், மீன்வளம், விவசாயம் போன்றவை தொடர்பான தரவுகளை பெறுவதற்கு தமிழகத்துக்கென தனி செயற்கை கோளை ஏவுதல், வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான தனி வாரியம் ஆகியன அமமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறப்பு அம்சங்களாகும்.

தேர்தல் அறிக்கைகள் சட்டப்பூர்வமானதா?

சட்டமியற்றும் அவைதான் மக்களவை. அதில் ஆள் பலத்திற்கு ஏற்ப ஆட்சிக்கு வரும் அரசு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை பெற்றுள்ளது. அவர்களை மக்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், தேர்தல் நேரங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தும், பொறுப்பும் இல்லாதது ஜனநாயக கட்டமைப்பையே கேலிக்கூத்தாக்குகிறது. கட்சிகளும் வேட்பாளர்களும் வழங்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பதோடு வாக்காளர்களின் கடமை முடிந்துவிடுவதே இன்றைய தேர்தல் அரசியல். வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை திரும்ப அழைக்கவும் முடியாது. அளித்த வாக்கை மீட்கவும் முடியாது.

சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியின் ஆணிவேரான பொறுப்புடைமை, ஜனநாயகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறையான தேர்தலின் அடிப்படையாக விளங்கும் தேர்தல் அறிக்கைகளுக்கு கிடையாது. இன்னொரு தேர்தலுக்கு நாம் காலடியை எடுத்து வைக்கும்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்கிறோம். அவற்றில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாத, நடைமுறைப்படுத்தும் நோக்கமே இல்லாதவை ஏராளம் உண்டு. அவற்றை நம்பிய மக்கள் முட்டாள்களாக்கப்பட்டனர்.

வருடந்தோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அறிவித்த மோடியின் ஆட்சியில் வேலை வாய்ப்பின்மை 7.2 சதவீதத்தை எட்டியது இதற்கோர் உதாரணம். விவசாயிகளுக்கு கனவுகளை அள்ளி வழங்கிய மோடியின் ஆட்சியில் விவசாய வளர்ச்சி விகிதம் கடந்த 14 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. சுற்றுச்சூழல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், சமூக சமத்துவம், பாதுகாப்பு முதலான அனைத்து துறைகளிலும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகின. சாதாரண மக்கள் வாக்குறுதி மீறினால், அது சிறிதாக இருந்தால் கூட குற்றமாக கருதப்படுகிறது. ஆனால், ஒரு நாட்டையை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்சி போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய குற்றம். நூறு நாட்களுக்குள் ரூ. 15 லட்சம் வீதம் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கில் போடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், அத்தகையதொரு முட்டாள்தனமான வாக்குறுதியை அளிக்கும் குற்றகரமான தைரியத்தை தங்களது திறமையாக கருதுகிறது அதிகாரப் பசி மிகுந்த பாசிச பா.ஜ.க.

ஆனால், இத்தகைய போலியான வாக்குறுதிகளை தடுப்பதற்கு சட்டரீதியான வழிமுறைகள் கிடையாது. தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வாக்குறுதிகள் கட்சிகளின் பொறுப்புகளாக கருதப்படும் என்றும், அது தொடர்பான வழிகாட்டும் தத்துவங்கள் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் 2013ல் பாலாஜி வழக்கில் தெரிவித்திருந்தது. அத்தகைய வழிகாட்டுதல்களை தயாராக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குரியது. ஏனோ தேர்தல் ஆணையம் அதில் போதுமான அக்கறை காட்டவில்லை. தேர்தலின் அதிகாரப்பூர்வ தன்மையும், நம்பகத்தன்மையும், செல்லத்தகு நிலையும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இடையேயான நம்பிக்கையின் பலத்தில் இருந்தாலும் அந்த பகுதி இதுவரை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் எடுக்காமல் செயலற்ற நிலையில் உள்ளது. உச்ச நீதிமன்றமும் தனது நிராதரவை வெளிப்படுத்தியது.

2015ல் வழக்கறிஞர் மிதிலேஷ் குமார் பாண்டே சமர்ப்பித்த பொது நல வழக்கில், தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அவற்றை அளிப்பவர்களின் சட்டரீதியான கடமையாக ஆக்கவேண்டும் என்று கோரியிருந்தார். சட்ட ரீதியாக அவற்றை நடைமுறைப்படுத்த இயலாது என்று கைவிரித்த உச்ச நீதிமன்றம், அதனை மக்கள் நீதிமன்றம் தீர்மானிக்கட்டும் என்று கூறி நழுவியது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கைகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தை வழங்க கிடைத்த வாய்ப்பு இவ்வாறு இழக்கப்பட்டது. தேர்தல் அறிக்கைகளை பதிவு செய்து, அவற்றில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் கால ஒழுங்கிற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவோ, நடைமுறைப்படுத்தா விட்டால் உரிய தண்டனையை வழங்கவோ, திருத்தம் செய்வதற்கோ சாத்தியமான வழிகள் இல்லாத நிலைதான் தற்போது நிலவுகிறது.

இன்றைய சூழலில், ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்று அழைக்கப்படும் வாக்காளர்களின் அதிகாரம் ஒரு வாக்கை அளிப்பதோடு முடிந்து விடுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கட்சிகளும் வேட்பாளர்களும் அளிக்கின்றனர். மக்களிடம் பதிலளிக்கவேண்டிய பொறுப்பு தங்களுக்கு இல்லை என்றே கட்சிகள் கருதுகின்றனர். நடைமுறைப்படுத்தக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து, அவற்றை நடைமுறைப்படுத்த உழைக்கும் நேர்மையானவர்களுக்கும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் சட்டத்தின் முன்னால் என்ன வித்தியாசம் உள்ளது? வருங்காலத்திலாவது தேர்தல் ஆணையம் இது தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வேட்பாளர்களும் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். வாக்குறுதிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான திட்டங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிடம் வழங்கவேண்டும். ஒவ்வொருவரும் எத்தனை வாக்குறுதிகளை அது வரை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறித்த உண்மையான அறிக்கையை ஒவ்வொரு வருடமும் தேர்தல் ஆணையம் பிரசுரிக்கவேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மரியாதை இருக்கும்.-

-செய்யது அலி

Comments are closed.