தேவாலயத்தில் கிட்டார் வாசித்த மணமகன்: இந்து திருமணத்தை நிறுத்திய வி.ஹெச்.பி.

0

போபாலில் நடைபெற்ற இந்து தம்பதியினரின் திருமணம் ஒன்றை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறியது இந்த திருமணத்தின் மணமகன் விசால் மித்ரா ஒரு கிறிஸ்தவர் என்றும் மணமகளான ரித்து துபே மனதளவில் கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்பதுமேயாகும்.

இந்து தம்பதிகளுக்கிடையே நடைபெறும் திருமணத்தை இப்படியான ஒரு காரணம் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நிறுத்துவதற்கு காரணம், போபாலின் தேவாலயம் ஒன்றில் கடந்த 2013 ஆம் வருடம் விஷால் மித்ரா கிட்டார் இசைத்தது தான். இதனால் வி.ஹெச்.பி. யினரின் கருத்துப்படி விஷால் மித்ரா ஒரு கிறிஸ்தவர். மேலும் விஷாலை சந்தித்ததில் இருந்து ரித்து நெத்தியில் பொட்டு வைக்கவில்லை என்றும் இந்துக் கடவுளர்களை வணங்குவதை நிறுத்திவிட்டார் என்றும் அதனால் அவர் மனதளவில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

விஷால் மித்ரா மற்றும் ரித்து துபே கடந்த செவ்வாய் கிழமையன்று சிறப்பு திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்ய இருந்தனர். அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தவதற்காக அந்த அலுவலகம் முன் கூடியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி வி.ஹெச்.பி தலைவரும் முன்னாள் பஜ்ரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தேவேந்திர ராவத் செய்தியாளர்களிடம், விஷால் ஒரு கிறிஸ்தவர் என்று ரிதுவின் தாயார் கூறியதாகவும் இது குறித்து விசாரணை நடத்தபட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் இந்துக்கள் என்று உறுதியானதும் தாங்கள் வெற்றிபெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் தன்னை அவர் (விஷால்) இந்து என்று கூறியுள்ளார். இது ஒருவகையில் எங்களுக்கு வெற்றி தான். இது தான் எங்களுக்கு வேண்டியதும் கூட” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.