தொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக்

0

2009 மங்களூரு பப் தாக்குதல் புகழ் ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் நிறுவனர் பிரமோத் முதாலிக், ஆர்எஸ்எஸ் அமைப்பினால் தனது உயிருக்கு ஆபத்து  என்று தெரிவித்துள்ளார்.

நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர், “எனது எதிரிகைளை நான் நன்றாக அறிவேன். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள். இவர்கள் எனக்கு எதிராக இயங்குபவர்கள். ஆனால் தற்போது எனக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் எனது சொந்த மக்களை நினைத்து நான் கவலை கொள்கிறேன். இவர்கள் முதுகில் குத்துவதில் தேர்ந்தவர்கள். பிரவின் தொகாடியாவிற்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக குறை கூறிய முதாலிக், “கர்நாடக மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பெந்தேவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செத்தார் மற்றும் எம்.பி.ப்ராஹ்லத் ஜோஷியின் ஆதரவு உள்ளது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் நான் இருப்பதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், “என்னுடைய மக்களே என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னுடைய புகழ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் கவலையடைந்துள்ளேன். அவர்களுக்கு யாரும் பேரும் புகழும் அடைவது பிடிக்காது. அவர்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் பலவற்றை சாதித்துள்ளேன். அவர்கள் இல்லாமலும் நான் பலவற்றை சாதித்துள்ளேன். இதனாலேயே நான் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற கட்டாயப் படுத்தப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.

இன்னும், தனது 40 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வீனாக்கிவிட்டதாகவும், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் இல் உள்ளதாகவும் ஆனால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்து ஒற்றுமையை எவ்வாறு அடைவார்கள், என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தும் இந்துத்வாவில் தனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராம் சேனா அமைப்பை தொடங்குவதற்கு முன் கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் கர்நாடக மாநில சிவ சேனா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதோடு வர இருக்கும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்டு பாஜகவிற்கு தகுந்த பாடம் கற்பிக்க போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் முதாலிக் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது குறித்து கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.

Comments are closed.