தோஹாவில் தடுக்கப்பட்ட ராணாஅய்யூபின் நிகழ்ச்சி

0

பிரபல பத்திரிகையாளரான ராணா அய்யயூபின் புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்று கத்தார் தலைநகர் தோஹாவின் இந்திய கலாச்சார மையத்தில் 22 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி தகுந்த காரணங்களோ அல்லது விளக்கமோ ஏதும் இல்லாமல் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தனது நிகழ்ச்சி தடுக்கப்பட்டது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் ராணா அய்யூப் பேசும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் எனது பேச்சை கேட்க வந்த நூற்றுக்கணக்கான மக்கள் அனைவரும் திரும்பிச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டனர்” என்று கூறியுள்ளார். மேலும் “தற்போது கருத்துச் சுதந்திரம் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா திரு.மோடி?” என்றும் அவர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து தோஹாவில் உள்ள தூதரக அதிகாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை.

மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்தநாளை ஒட்டி கத்தாரில் உள்ள பீகார் மற்றும் ஜார்கந்த் இந்திய சங்கத்தின் (IBAJ) சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இந்திய தூதரகத்தின் ஆதரவு பெற்ற இந்திய கலாச்சார மையத்தின் இணைப்பாகும். இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு காரணமும் கூறப்படாமல் வெறுமனே “சில காரணங்களால்” நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் IBAJ தலைவர் அஃப்ரோஸ் அஹமத் தாவார் அவர்களால் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ராணா அய்யூபின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்டுள்ள குஜராத் கோப்புகள் (GUJARATH FILES) என்ற புத்தகம் தான் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகத்தில் 2002 குஜராத் கலவரங்களில் தங்களது ஈடுபாடு குறித்து பல உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.

ராணா அய்யூப் 2004 ஆண்டு நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் பங்கு குறித்து வெளிப்படுத்தியதற்காக பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளை  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.