நரோடா பாட்டியா படுகொலை வழக்கு: மீண்டும் அமித் ஷாவை சாட்சிக்கு அழைக்கும் மாயா கோட்னானி

0

2002 குஜராத் கலவர வழக்கில் 2012 ஆம் வருடம் மேலும் 30 பேருடன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட மாயா கோட்னானி தனது தரப்பு சாட்சியாக அமித்ஷா உட்பட 14 பேரை விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

கடந்த வியாழக் கிழமை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கோட்னானியின் இந்த மனுவிற்கான பதிலை நீதிமன்றம் கேட்டுள்ளது. கடந்த வாரம் தான் குற்றம் சாட்டப்பட்டிருந்த 2002 நரோடா காம் படுகொலை வழக்கில் தனது தரப்பு சாட்சியாக இதே போன்று அமித் ஷா உட்பட 14 பேரை விசாரிக்க வேண்டும் என்று அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். (பார்க்க செய்தி). 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மாயா கோட்னானிக்கு 28 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2002 குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் மிகப்பெரிய படுகொலையாக இது கருதப்படுகிறது.

கோட்னானி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் நிரும்பம் நானாவதி, வாதத்தரப்பு பல முக்கிய சாட்சிகளை எந்த காரணமும் இன்றி நீக்கிவிட்டதால் நீதி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கோட்னானி சார்பில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கோட்னானியின் இந்த மனுவை சிறப்பு புலனாய்வுத் துறை தரப்பு எதிர்க்கும என்று கூறப்படுகிறது. நரோடா காம் வழக்கில் இது போன்று கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில், சாட்சியங்களுக்கான சம்மன் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு வழக்கின் சரியான நேரத்திலும் பொருத்தமான சமயத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும் அவ்வழக்கில் கோட்னானியின் இந்த மனுவை SIT தரப்பில் இருந்து எதிர்க்கவோ அல்லது அது தொடர்பாக பதிலளிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நரோடா பாட்டியா வழக்கில் கோட்னானி பஜ்ரங்தள் அமைப்பு தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 30 பேருடன் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் உள்ள கோட்னானி தன் மீதான தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரின் இந்த வழக்கை நீதிபதிகள், ஹர்ஷா தேவானி மற்றும் A.S.சுபீயா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தினசரி அடிப்படையில் பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

செவ்வாய் கிழமை, இந்த டிவிஷன் பெஞ்சிடம், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.அமித் அணில்சந்த்ரா ஷா, அம்ரிஷ் கோவிந்த் படேல், டாக்டர் தாவல் ஷா, திரஜ்பாய் லகாபாய் ரதோட், MD லக்கியா, சாந்திலால் சோனி, கந்திபாய் சோலங்கி மற்றும் ஜகதீஷ் இஷ்வர் படேல் ஆகிய எட்டு பேரை எதிர்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி கோரியுள்ளார்.

Comments are closed.