நரோடா பாட்டியா வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்ட நீதிபதி

0

குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அகில் குரேஷி நரோடா பாட்டியா வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட நீதிபதிகளில் இவர் 7 வது நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னர், நீதிபதி எம்.ஆர்.ஷா, நீதிபதி ஆனந்த் தேவ், நீதிபதி ஆர்.ஹச்.சுக்லா, நீதிபதி சோனியா கோகானி, நீதிபதி ஜி.பி. ஷா, மற்றும் நீதிபதி கே.எஸ்.ஜாவேரி ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் ஆவர்.

தான் இவ்வழக்கில் இருந்து விடுபடுவது குறித்து காரணம் ஏதும் தெரிவித்துக்கொள்ளாத அவர், “இது மிகவும் வேதனைக்குரியது” என்றும் “இது நீதி அமைப்பின் பெயரை கெடுத்துவிடும்” என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் வேதனைக்குரியது, இது குறித்து நான் எதுவும் கூறப்போவதில்லை. ஆனால் நீதி அமைப்பின் பெயரையும் மக்கள் அதன் மேல் வைத்திருக்கும் நன்மதிப்பையும் இது கெடுத்துவிடும். எனக்கு இவ்வழக்கில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர், நீதிபதி அகில் குரேஷி இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கு காரணம் மூத்த வழக்கறிஞர் பிபி.நாயக் இவ்வழக்கில் சமீபத்தில் இணைந்தது தான் என்று கூறியுள்ளனர். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்ளாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 29 நபர்கள் தற்போது மனுதாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2012  ஆகஸ்ட் மாதம் விசாரணை நீதிமன்றம், 2002 குஜராத் கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் 97 பேர் கொல்லப்பட்டதற்கு  மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 29 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்திருந்தது. இந்த கலவரங்களின் சூத்திரதாரி என்று மாயா கோட்னானியை குறிப்பிட்ட நீதிமன்றம் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்திருந்தது. குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என தீர்பளித்த வெகு சில வழக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.