நரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை

0
நரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள்  கடுங்காவல் தண்டனை
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமேஷ் பர்வாத், பத்மேந்திரசிங் ராஜ்பூத் மற்றும் ராஜ்குமார் சவ்மல் ஆகியோர் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள்.
முன்னதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குஜராத் அமைச்சர் மாயா கோட்னானியை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் மாயா கோட்னானி.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அகமதாபாத்தின் நரோடாபாட்டியா பகுதியில் நடைபெற்ற இந்த கலவரத்தில் மொத்தம் 97 பேர் கொலை செய்யப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது நடத்தப்பட்ட படுகொலைகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

Leave A Reply