நவம்பர் 27 ஆம் தேதி ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

லவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கணவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ள ஹாதியாவை வருகிற நவம்பர் மாதம் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று அவரது வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் அப்பெண்ணின் ஒப்புதல் மிக முக்கியமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஹேபியஸ் கார்பஸ் வழக்கில், அந்த பெண்ணின் ஒப்புதல் மிக முக்கியமான அம்சம்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஹாதியா மற்றும் ஷஃபின் ஜகான் திருமணத்தை லவ் ஜிஹாத் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக NIA விசாரணை தேவையில்லை என்று ஷஃபின் ஜஹான் தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ஹாதியாவின் ஒப்புதலை பெறுவதற்கு ஹிப்னாடிசம் தெரிந்த வல்லுனர்கள் பயன்படுத்தப்பட்டு அவர்கள் மூலம் தீவிரவாத சிந்தனைகள் போதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் இவ்விஷயத்தில் அவரது பெற்றோரின் கருத்துகளை கேட்டால் மட்டும் போதுமானது என்று வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் சட்டத்தின்படி ஒருவர் குற்றவாளி என்று இருந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று தடுக்க எந்த சட்டமும் இல்லை என்று கூறியுள்ளது.

இவ்வழக்கின் மறு விசாரணை நடக்க உள்ள வருகிற நவம்பர் மாதம் 27 ஆம் தேதி மாலை மூன்று மணிக்குள் ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று ஹாதியாவின் தந்தை மற்றும் கேரள கால்துறையிடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஹாதியாவை நேரில் ஆஜர் படுத்துவதற்குப் பதில் வீடியோ மூலம் விசாரிக்கலாம் என்று கூறிய ஹாதியாவின் தந்தை அசோகனின் கருத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தான் நடைபெறும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து தனது மகளை தான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக அசோகன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.