நவீன நில மாஃபியாக்கள்?

0

 

 – ரியாஸ்

மார்ச் 22 அன்று ஆல் இந்தியா ரேடியோ மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் விவசாயிகளிடம் பிரதமர் உரையாற்றுவார் என்று விளம்பரம் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏற்படுத்திய அச்சமும் பரபரப்பும் ஆட்கொண்டிருந்த நிலையில் மோடி இந்த உரையை ஆற்றினார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து எதிர்கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாக கூறினார். தனது ஆட்சி வெறும் கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி அல்ல என்று மீண்டும் மீண்டும் கூறினார். எதிர்கட்சிகள் பொய் கூறுவதாக கூறினார். நாம்தான் தவறாக விளங்கிக் கொண்டோமோ என்று தொடர்ந்து உரையை கேட்டவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மக்களை ஏமாற்றி வருவது மோடியும் அவரின் பரிவாரங்களும்தான் என்பதை உரை முடியும் போது மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர். உரையை கேட்காதவர்கள் மறுதினம் நாளிதழ்களை படித்து இதை உணர்ந்து கொண்டனர்.

மோடியின் பரிவாரங்களும் அமைச்சர்களும் இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று பல நிலைகளிலும் பிரச்சாரம் செய்வதற்கு தயார் ஆகிவிட்டார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்து வரும் விவசாயிகளும் அதனை எதிர்க்கும் எதிர் கட்சிகளும்தான் தற்போதைய ஒரே ஆறுதல். இதிலும் நமது மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. இந்த மசோதாவை எப்படி ஆதரிக்கிறது என்று தெரியவில்லை. மக்களின் நலனைவிட சுயநலம்தான் முக்கியம் என்று நினைப்பார்களானால் அதற்கான விலையை சட்டமன்ற தேர்தல் என்ற வடிவத்தில் மக்கள் கொடுப்பார்கள் என்பது நிதர்சனம்.

ஆகஸ்ட் 15,2014 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய மோடி தனது சுதந்திரதின உரையில் ‘மேக் இன் இந்தியா’ என்றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். ‘வாருங்கள், இந்தியாவில் உங்கள் பொருட்களை தயார் செய்யுங்கள்’ என்று நிறுவனங்களை கூவி அழைத்தார்.

செப்டம்பர் 25 அன்று மேக் இன் இந்தியாவின் துவக்க விழா நடைபெற்றது. அம்பானி குழுமத்தின் முகேஷ் அம்பானி, ஐ.டி.சி.யின் யோகேஷ் சந்தர், டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்டிரி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லா என ஏறத்தாழ ஐநூறு கார்ப்பரேட்டுகள் இதில் கலந்து கொண்டனர். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் தாராள தன்மையால் பலனடைந்தவர்கள் இவர்கள். இனி நாடு முழுவதும் தங்களுக்கு சொந்தமாகும் என்ற சந்தோஷத்தில் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சரி இந்த திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமல் இல்லை. மோடியின் ரசிகர்களான இந்த கார்ப்பரேட்களும் அந்நிய நிறுவனங்களும் தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு ஏராளமான நிலம் தேவை. அதை நியாயமாக கேட்டால் யாரும் தர மாட்டார்கள். இயற்கை சூழல் கெடுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது என பல எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள். அதற்காகத்தான் இந்த மசோதா.

ஏற்கெனவே பட்ஜெட்டில் உருப்படியாக ஏதும் சொல்லப்படவில்லை என்று நொந்து போயுள்ள விவசாயிகளுக்கு அடுத்த இடியாக இறங்கியது இந்த நிலம் கையகப்படுத்தல் மசோதா. பொதுவாக, வளர்ச்சி என்ற பெயரில் நிலங்களை கையகப்படுத்துவது வழக்கம். இதற்காக 1894ல் ஒரு சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். இந்த விஷயத்தில் ஆங்கிலேயர்களுக்கும் சமகால ஆட்சியாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

உங்கள் கிராமத்திற்கு தொழிற்சாலைகள் வரும், பள்ளிக்கூடங்கள் வரும், சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என்றுதான் மோடியும் கூறுகிறார். அடிப்படை வசதிகளை பெற வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் நிலத்தை இழக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார் மோடி.

ஆங்கிலேயர்களின் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்டு அமைதியாக செல்ல வேண்டும். இழப்பீடு போதவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். இழப்பீட்டை அதிகப்படுத்தி தாருங்கள் என்று கேட்கலாமே தவிர, நிலத்தை திரும்ப கேட்க முடியாது. சுதந்திரத்திற்கு பிறகும் இதே சட்டம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார் இப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அத்துடன் ஒரு மணி நேரம் விவசாயிகள் மத்தியில் பேசவும் செய்தார்.

விவசாயிகளின் போராட்டம் வலுக்கவே, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ‘நிலம் கையகப்படுத்துதல் மறுகுடி அமர்வு மறுவாழ்வு சட்டம் 2013’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஒன்றும் இல்லாததற்கு இது ஏதோ பரவாயில்லை என்ற அளவில் விவசாயிகள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அந்த சட்டத்தை அப்போது கடுமையாக எதிர்த்தது பா.ஜ.க. ‘விவசாயிகள் நலனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அக்கறையே இல்லை’ என்று பாராளுமன்றத்தில் முழங்கினார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் (ராஜ்ய சபா) தற்போதைய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி.

முந்தைய ஆட்சி கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. தற்போது அந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இவர்களின் சட்டம் எப்படி உள்ளது? சுருக்கமாக சொல்வதென்றால், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டத்தை விட மோசமான சட்டம் இது. கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு சத்தம் இல்லாமல் இடத்தை காலி செய்ய வேண்டும். எதிர்த்தால் அதிகாரப்பூர்வ அத்துமீறல் தொடங்கும். நிலத்தை இழக்கும் விவசாயிகளும் பழங்குடியினரும் தங்கள் நிலங்களை இழந்துவிட்டு இடம் பெயர்ந்து செல்ல வேண்டும்.

தனியார் தொழில் தொடங்க வேண்டுமென்றால் அப்பகுதி மக்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெற வேண்டும். தனியார்  அரசு கூட்டுத் தொழில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதென்றால் 70 சதவிகிதத்தினரின் ஒப்புதலை பெற வேண்டும். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட பிரிவு. ஆனால், பா.ஜ.க. கொண்டு வரும் சட்டம் என்ன சொல்கிறது? எந்த திட்டத்திற்கும் யாரின் ஒப்புதலையும் பெற வேண்டாம். நிலத்தை கையகப்படுத்தி விட்டு தொழிலை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

முந்தைய சட்டத்தில், நிலம் கையகப்படுத்தப்பட்டால் நில உரிமையாளருக்கும் அதனை நம்பி வாழும் கூலி தொழிலாளிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ.க.வின் சட்டத்தின்படி உரிமையாளருக்கு மட்டும் இழப்பீடு கொடுத்தால் போதுமானது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஐந்து வருடங்களில் உபயோகப்படுத்தவில்லையென்றால் அந்த நிலத்தை திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்று முந்தைய சட்டம் கூறியது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நிலத்தை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டாம் என்று புதிய சட்டம் கூறுகிறது.

இதனால், என்ன நடக்கும்? பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதில் கைதேர்ந்தவர் மோடி. பெரிய அளவில் நிலங்களை வாங்கும் கார்ப்பரேட்டுகள் அதில் சிறிதளவை பயன்படுத்தி விட்டு மீதத்தை கொள்ளை இலாபத்தில் விற்பனை செய்வார்கள், அவ்வாறு செய்தும் உள்ளார்கள்.

‘நான் ஒன்றும் ஏழைகளுக்கு எதிரி கிடையாது, என்று தற்போது அடிக்கடி கூறுகிறார். மக்கள் கூறுவதெல்லாம் ஒன்றுதான். ‘பேசியது போதும். செயலில் காட்டுங்கள்’.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு வலுப்பதை தொடர்ந்து, விருப்பப்படும் மாநிலங்கள் பழைய சட்டத்தையே அமல்படுத்தலாம் என்று கூறியுள்ளார் மோடி. இதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு முறைதான். பா.ஜ.க. ஆட்சி செய்யாத ஒவ்வொரு மாநிலத்தையும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டி வருகிறார் மோடி. அதனால், மாநில அரசுகளை முழுமையாக நம்ப முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நியாயமான சட்டம் வேண்டும். மோடி கொண்டுவரும் இந்த மோசடி சட்டம் வேண்டாம் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.

நிலத்தை பெறும் கார்பரேட்டுகள் தேர்தல் காலத்தில் தங்களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் மோடி இவ்வாறு செய்கிறார். கொள்ளை லாபத்தில் நிலங்களை பெறும் பெருநிறுவனங்கள் கட்சி நிதியாக கோடிகளை கொடுப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை இவர்களுக்கு. சில நூறுகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குகளை விற்கும் நபர்கள் இருக்கும் வரை அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதையும் பாமரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறினால் என்ன நடக்கும். சமூக வலைதளம் ஒன்றில் கண்ட ஒரு பதிவுதான் நினைவிற்கு வருகிறது. ‘நிலம் கையகப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பு இல்லேன்னும் சொல்லியாச்சு. விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம்தானே!

(ஏப்ரல் 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)

Comments are closed.