நியுயார்க் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட கஷ்மீர் முன்னாள் முதல்வர்  உமர் அப்துல்லா

0

அமெரிக்காவின் நியுயார்க் விமான நிலையத்தில் கஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா இரண்டு மணிநேரம் சிறைவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கின்றது என்று காரணம் கூறி இஸ்லாமிய பெயர் உடையவர்களை அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பல கெடுபிடிகளுக்கு உட்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வகையில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமும் இது போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இது போன்று பல முறை தான் தனது பெயரினால் தனிமைப்படுத்தப்படுவதை தனது ட்விட்டர் பக்கத்தில் முறையிட்டார். அவரது பதிவை தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் அவரிடம் வருத்தமும் தெரிவித்தனர்.

தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் கஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. 21 ஆம் தேதி அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்க உமர் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க சென்ற உமர் அப்துல்லாவை இரண்டு மணி நேரம் விசாரணைக்காக அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சிறை வைத்துள்ளனர்.

நியுயார்க் ஜான் எஃப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை குடிமைப்பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை தனியறை ஒன்றில் சிறை வைத்துள்ளனர். பின்னர் சோதனை என்ற பெயரில் 2 மணி காக்கவைக்கப்பட்டுள்ளார் உமர் அப்துல்லா. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், “நியுயார்க் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ளேன். இங்கு தரையிறங்கியவுடன் மற்றுமொரு சீரற்ற இரண்டாம் நிலை சோதனைக்கு உள்ளானேன். நான் இத்தகையை சோதனைக்கு உள்ளாவது மூன்றாவது முறை. என்னுடைய மூன்று  அமெரிக்க பயணங்களிலும் ஒவ்வொரு முறையும் இது நடந்து வருகிறது. இரண்டு  மணி நேரம் குறிப்பிட்ட பகுதியில் தடுத்து வைக்கப்பட்டேன். இந்த சீரற்ற சோதனை எனக்கு அலுப்பை ஏற்படுத்தி விட்டது. உண்மையிலேயே இரண்டு மணி நேரம் வீணாகிப்போனது. இதற்கு பதில் நான் என் வீட்டிலேயே இருந்திருப்பேன்.” என்று கூறியுள்ளார்.

இந்திய தலைவர்கள் பலர் இது போன்று தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments are closed.