நியூசிலாந்து மீதான எங்கள் நேசத்தை சிதைத்துவிட முடியாது: தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் இமாம்

0
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள அல்-நூர் என்னும் மசூதி மற்றும் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு லின்வுட் மசூதி என்று இருவேறு மசூதிகளில் வெள்ளியன்று வலதுசாரி பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 49 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும் 45க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரென்டன் டர்ரன்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்ததுடன் இதுகுறித்து உரிய விசாரணையை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்றதற்கு பிறகு நியூசிலாந்து முழுவதும் உயிரிழந்த முஸ்லிம்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நியூசிலாந்து நாட்டினர் பல இடங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குற்றவாளியை கடுமையான தண்டனைகளை கொண்டு தண்டிக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பாதிக்கபட்டவர்களில் ஒருவரான லின்வுட் பள்ளிவாசல் இமாம் இப்ராஹிம் அப்துல் ஹலீம் கூறுகையில் ” ஜும்ஆ தினமன்று முஸ்லிம்கள் பள்ளியில் கூடும் வேளையில் திடிரென்று மர்ம நபர் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். இதனால் பதற்றமடைந்த முஸ்லிம்கள் தங்களை அதில் இருந்து காத்துக்கொள்ள தரையில் படுக்க தொடங்கினர். சிலர் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகினர். அமைதியும், அன்பும், நிம்மதியும் நிறைந்த பள்ளியில் அன்று இறந்த உடல்களும், துப்பாக்கி குண்டுகளும், இரத்தமும் சிதறிக்கிடந்தது. அதிர்ஷ்டவசமாக நான் துப்பாக்கி சூட்டியில் இறக்கவில்லை.

இந்த துப்பாக்கி சூட்டினால் நியூசிலாந்து முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். இன்னமும் அதிகமானோர் அச்சத்தில் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருந்தபோதிலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த நியூசிலாந்து குடிமக்களும் எங்களுடன் ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். எங்களுக்காக பிரார்த்திக்கின்றனர், பயங்கரவாதத்திற்கு எதிராக எங்களுடன் சேர்ந்து குரலும் எழுப்பி வருகின்றனர். இது தான் எங்களுக்கும் இந்த நாட்டிற்கும் தேவை. இந்த அன்பிற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

மேலும் இந்த தாக்குதல் காரணமாக நியூசிலாந்து முஸ்லிம்கள் இந்த நாட்டை வெறுப்பார்கள் என்று பலர் எதிர்ப்பர்கிரர்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. இந்த நாட்டை மிகவும் விரும்புகிறோம். இந்த நாடு எங்களோடு நிற்கிறது. நாட்டு மக்கள் எங்களை சகோதரர்களாக கருதுகின்றனர். எங்களுடைய இந்த துயரத்தில் அவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.” என்றார்.

Comments are closed.