நியூட்ரினோ: மற்றொரு அழிவு திட்டம்?

0

நியூட்ரினோ தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக இவ்வாறு பதிலளித்தார் ‘இந்தியாவிலேயே முதன் முறையாக தேனி அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றும் அதில் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சரின் இந்த பதிலால் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்தான விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. நியூட்ரினோ என்றால் சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகள் ஆகும். அணுத்துகளிலேயே நியூட்ரினோதான் மிகக்குறைந்த நிறை கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த நியூட்ரினோவை குறித்துதான் ஆய்வு செய்வதற்காக மலையின் உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்திலும், 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும், 20 மீட்டர் உயரத்திலும் குகை ஒன்று அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின்தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளி விட்டு வைக்கப்படும்.

இதற்குள் செல்ல 2.1 கி.மீ. நீளத்திற்கும், 7.5 கி.மீ. அகலத்திற்கு குகை அமைக்க இருக்கிறார்கள். காந்தத்தின் செயல்பாட்டினையும், மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டி அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இந்த திட்டம் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பெறுகிறது.

இதற்காக இந்தியா முழுவதும் 15 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 50 அறிவியலாளர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பெற்றிருக்கிறது. இந்த திட்டம் கடந்த 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பினால் தள்ளிக்கொண்டே போன இந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்த நினைக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தேனி மாவட்ட பொதுமக்கள் என பல தரப்பிலும் இந்த ஆய்வகத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆய்வகம் அமையவுள்ள இடத்தைச் சுற்றி முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட அணைகள் உள்ளன.

ஆய்வகத்திற்காக சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடி மருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டி வரும். அதனால் அணைகளுக்கும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளுக்கும், வன விலங்குகளுக்கும், மனித உயிர்களுக்கும், விவசாயம், தண்ணீர் என அனைத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அதுவரை திட்டப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல் பூலவுலகின் நண்பர்கள் அமைப்பும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ‘எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்னக அமர்வு 2017 மார்ச் 20 ல் ரத்து செய்தது. தேனி நியூட்ரினோ திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கின்றன. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக இந்த திட்டத்தை தொடங்குவதன் அவசியம் என்ன என்பதே பலரது கேள்வியாகும்.

மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைச் ‘சிறப்புத் திட்டமாக’ (பிரிவு-பி திட்டம்) அறிவித்து எல்லாத் தடைகளையும் தான்தோன்றித்தனமாக நீக்கி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சட்டங்களை மீறி முடிவு எடுத்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து கொண்டு வரும் திட்டத்தால் தேசம் வளர்ச்சி பெறாது; வீழ்ச்சியே பெறும்.

– வி.களத்தூர் எம்.பாரூக்

Comments are closed.