நிலங்களை அபகரிக்கும் பா.ஜ.க. அரசு

0

– ப.திருமலை

“நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது, இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே, செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம். இந்த நிலத்துக்குத்தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்ற பெயரில் வில்லங்கம் வந்திருக்கிறது.

துவக்க காலத்தில் தரிசு நிலங்களை வாங்கி தனியார் அதை மனை போட்டு விற்றார்கள். பின்னர் விவசாய நிலங்கள்கூட அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இப்படி தனியார் செய்து வந்ததை நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் அரசு செய்ய முடிவு செய்திருக்கிறது.

தேசியப் பாதுகாப்பு தொடர்பானவை, இராணுவம் தொடர்பானவை, மின்சாரத் திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள், தொழில் பூங்காக்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் ஆகிய இந்த ஐந்து பிரிவுகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது உரிமையாளரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பது சட்டத்தின் சுருக்கம்.

இதில் முதல் இரு பிரிவுகளுக்கும் நிலம் தேவைப்படாது. அவர்களே போதிய நிலம் வைத்திருப்பார்கள். மீதமுள்ள மூன்று பிரிவுகளிலும் தனியார் நிறுவனங்கள் நுழைந்து கொழிக்கப்போகிறார்கள். ஏழைகளும் விவசாயிகளும் பாதிக்கப்படப் போகிறார்கள்.

நிலம் கையகப்படுத்தல்

1894 ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இந்திய எல்லைக்குள் யாருடைய நிலத்தையும் அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பகரமாக உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் போதும். இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினர்தான். இதனால், இலட்சக்கணக்கான பழங்குடியினர் இடம் பெயர நேரிட்டது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. கிட்டத்தட்ட நூற்றிபத்து ஆண்டுகளுக்கு பிறகு இச்சட்டத்தை மாற்றியமைத்து இதில் சில விஷயங்களை நீக்கி சில விஷயங்களை சேர்த்து 2013 ஆகஸ்ட் 29ம் தேதி ‘நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்’ என்கிற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது முந்தைய மன்மோகன் அரசு.

இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்தது மோடியின் அரசு. கடந்த டிசம்பர் 31ம் தேதி ஜனாதிபதியும், அவசரச் சட்டமாக இதை வெளியிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்திர சிங், திருத்தச் சட்டத்துக்கான வரைவைக் கொண்டு வந்தபோது மக்களவையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கட்சிகூட திருத்தச் சட்டத்துக்கு எதிராக நின்றது. நாடு முழுவதுமான விவசாயிகள் கொந்தளித்தார்கள்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு திரண்டு சென்று பிப்ரவரி 23,24 தேதிகளில் போராட்டம் நடத்தினர். மக்கள் இயக்கங்களின் தேசிய மேடை ஒருங்கிணைப்பாளர் மேதா பட்கர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். தில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடந்தே வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏன் இந்த அவசரச் சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு என நீங்கள் யோசிக்கலாம். ரொம்ப சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தில் விவசாயிகள் நிலை குறித்து கொஞ்சம் யோசிக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு பகீர் மாற்றங்களுடன் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது. சரி, கடந்த மன்மோகன் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கும் இப்போதைய சட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?

அரசு மற்றும் தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என பழைய சட்டத்திலிருந்த நிபந்தனை இந்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பழைய சட்டத்தில் நிலத்தை வழங்குவோர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டிருந்தது. நிலம் கையகப்படுத்துவதால் சமூக மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் மதிப்பீட்டு அறிக்கை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு பிறப்பித்துள்ள நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டமானது, ஏற்öகனவே இருந்த சட்டதில் கூறப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கும் அம்சங்களை நீக்கிவிட்டது.

மேலும், 2013ம் ஆண்டு சட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் நிலம் கையகப்படுத்தும் வரையறுப்பில் இடம்பெறவில்லை. ஆனால், மோடி அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். இந்த கையகப்படுத்துதலால் என்னஎ மாதிரி பாதிப்புகள் வரும் என்பதை ஆராய்ந்து கொடுக்கிற சர்டிபிகேட் இனி தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல், அரசு ஒரு விவசாய நிலத்தை கையகப்படுத்தி ஐந்தாண்டுகள் வரை அதை பயன்படுத்தாமல் இருந்தால் பழைய உரிமையாளருக்கே நிலத்தை கொடுத்துவிடலாம் என்று முந்தைய மன்மோகன் அரசின் சட்டத்தில் இருந்த திருத்தத்தை இப்போது தூக்கிவிட்டார்கள். கையகப்படுத்தியது கையகப்படுத்தியதுதான்.

சுருக்கமான சொன்னால், 1894  சட்டத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி மன்மோகன் அரசு வேண்டாமென்று விலக்கி வைத்திருந்த 13

சட்டங்களை மீண்டும் அவசர சட்டத்தில் இந்த அரசு சேர்த்திருக்கிறது என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள். இதனால், அரசு விவசாய நிலத்தை கையகப்படுத்துவது என முடிவெடுத்துவிட்டால் எதிர்ப்பின்றி கைப்பற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் நிலை.

இந்திய மக்களில் மூன்றில் இரு பங்கினருக்கு விவசாயம்தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது தொழில்வளத்தை பெருக்கப் போகிறோம் என்று கூறி வேளாண்மையை நசுக்கினால் ஒரு கட்டத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் இந்தியா கையேந்தி நிற்கும் அவலம் நிச்சயம். இதையெல்லாம் உணர்ந்து நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை மட்டுமல்ல, வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தையே மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாக உள்ளது.

2022ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீடு என்பதை மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற மெகா திட்டங்களுக்கு நிலம் அதிகளவில் தேவைப்படும். அப்போது தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது ஒரு சாரார் கருத்து. ஆனால், விளை நிலத்தை விற்றுவிட்டு காற்றினை குடித்தா உயிர்வாழ முடியும்?

ஏன் இந்த அவசரச் சட்டம்?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசுக்கு ‘பொறுப்பு’ கூடியது. அதனால், நிலம் கையகப்படுத்தல் வெகுஜோராக நடந்தது. எதிர்ப்புகளுக்கிடையே இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, மெட்ரோ ரயில், தொழில் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மின் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது பல்வேறு பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேற்கு வங்கம் சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க விவசõய நிலங்களைக் கையகப்படுத்தும்போது பெரும் பிரச்சனை வெடித்தது. இதுமாதிரி எதிர்ப் பெல்லாம் இனி வரும் காலங்களில் வராமல் இருக்க என்ன செய்யலாம் என தீவிரமாக சிந்தித்ததன் விளைவே இந்தச் சட்டம். பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன் இந்த அவசரச் சட்டத்தில் தேவையெனில் திருத்தம் கொண்டு வரத் தயார் என மோடி அறிவித்திருக்கிறார் என்றாலும் விளை நிலங்கள் முற்றிலுமாகத் தப்பிக்கும் என்று தோன்றவில்லை.

எதிர்ப்பு

“ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டத்தை விட மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கொடுமையானது. விவசாய நிலங்களையும், தனியார் நிலங்களையும் பறித்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் ஒப்படைக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது” என்கிறது ம.தி.மு.க.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில்

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தை அபகரித்து கொள்ளையடிப்பதுதான் மக்களுக்கான ஒரு அரசின் லட்சணமா? ஏன் மோடியின் குஜராத் மாநிலத்தின் பாவ் நகரில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக 120 கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்தி ஒரு லட்சம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலர் பலியானதை மோடி அரசு மறந்துவிட்டதா?

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விவசாயிகளிடம் நிலத்தைப் பறித்து நோக்கியா போன்ற பெரு நிறுவனங்கள் லாபமடைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்தீர்களே, அங்கே நிலத்தைக் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? அதானி போன்ற பெரு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மட்டுமே பயனடைவார்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல் சொந்த நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரம் என்ன, எதிர்காலம் என்ன, என்பதை முதலில் மோடி அரசு சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

“மோடிக்கு இதெல்லாம் வாடிக்கை” என்கிறார் த.மா.க. மதுரை தலைவர்களில் ஒருவரான ஆர். சொக்கலிங்கம். அவர் நம்மிடம்,

“நிலத்தை கையகப்படுத்த ஒரு தனி நபர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவருக்கிருக்கின்ற உரிமையை அங்கீகரிப்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இந்த நில அபகரிப்புக்கு எதிரõக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த நெடிய போராட்டத்தில் சிங்கூரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வெற்றிகள் முக்கியமானவை என்ற போதும், அவற்றை தற்காலிகமான வெற்றியாகவே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது.

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த குஜராத் மகுவாபதி நிலக்காரர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது. அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி எடுத்து சோப்புத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்காக உத்தரவிட்டார் மோடி.

பூர்வீகமாக வாழ்ந்த முப்பதாயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் பா.ஜ.க.வினர் கூட உள்ளூர் மக்களோடு சேர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ. 1400 கோடியில் 214 ஹெக்டேர் நிலப்பரப்பில் தனி முதலாளி உருவாக்க இருந்த தொழிற்சாலைக்காக அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது (20002008) அதானிக்கு ஒரு சதுரமீட்டர் ஒரு ரூபாய் என்று விலை நிர்ணயித்து பதினைந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அளித்தார் என்பது செய்தி. சவுராட்டிரா வாங்னர் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் நிலம் சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்றனர். கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பா.ஜ.க.வின் தலைவராக இருந்தவரை பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் விற்றார் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டி அளித்தார். (ஃப்ரண்ட்லைன் 20.05.2011)

மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் தொடங்க இருந்த நானோ கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கிட நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து வெளியேறிய டாட்டாவிற்கு குஜராத்தில் 1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து எந்திரங்களைக் கொண்டு வந்த போக்குவரத்து செலவான 700 கோடிகளையும் மோடி அரசே ஏற்றது.

அதானி குழுமத்திற்கு முந்திரா துறைமுகம் கட்டுவதற்காக (20052007) மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், அந்த நிலத்தில் 98.60 லட்சம் சதுர மீட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சதுர மீட்டர் 32 ரூபாய் விலையில் வாங்கிய அதானி குழுமம் மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 400 முதல் ரூ. 737 வரை மற்ற நிறுவனங்களுக்கு விற்றது. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதனை எதிர்த்து டில்லி அறிவியல் மையத்தின் தலைவர் சுனில் நாராயண் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முந்திரா துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச் சூழல் சான்றினை உடனே ரத்து செய்யுமாறு அறிக்கை ஒன்றை

அளித்ததையும் நாம் மறந்து விடக்கூடாது.

இந்தியாவில் உள்ள 100 நிறுவனங்களிடம் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பு (சர்வே) ஒன்றில் பங்கேற்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் 74 சதவீதத்தினர் மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டுமெனக் கருத்து தெரிவித்தனர். இதில் பிர்லா, டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி, தாப்பர் போன்றோர் அடங்குவர். ராகுல் உட்பட மற்றவர்களுக்கு 26 சதவீதத்தினர் ஆதரவு தந்தனர் என்ற செய்தியும் நாளிதழில் (தீக்கதிர் 29.10.2013) வந்தது.

ஆக, ஏழை விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி அதனை தனியாருக்கு வழங்குவது மோடியின் வாடிக்கை. முன்பு மாநில அளவில் இருந்த மோடியின் ஆசை இப்போது தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நிலங்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது” என்றார் ஆர். சொக்கலிங்கம்.

மண்ணை பாதுகாக்கிறோம். பாரம்பரியத்தை பாதுகாக்கிறோம் என்கிறது மோடி அரசு. யாருக்காக இந்த மண்ணை பாதுகாக்கிறது?

(ஏப்ரல் 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)

Comments are closed.