நிவாரண கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல்

0

ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் விதித்திருக்கும் தடையை தகர்க்கும் விதமாக காஸா துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த நிவாரண கப்பல் ஒன்றை இஸ்ரேல் பிடித்துள்ளது. இந்த கப்பலை இஸ்ரேலிய படையினர் இஸ்ரேல் நகரான அஷ்தோத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மரியேன் என்று அழைக்கப்படும் இந்த கப்பலை நள்ளிரவு இரண்டு மணிக்கு இஸ்ரேல் படையினர் கைப்பற்றினர். கப்பலில் பயணம் செய்த இஸ்ரேல் நாடாளுமன்ற ஃபலஸ்தீன உறுப்பினர் பாசில் கத்தாஸ், கப்பலை இஸ்ரேலிய படையினர் பலவந்தமாக பிடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இவரும் கப்பலில் பயணம் செய்த முன்னாள் துனீசியா பிரதமர் மோன்செஃப் மர்சூகி ஆகிய இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் சில நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்தோத் துறைமுகத்தை ஊடகங்கள் அடைய முடியா வண்ணம் இஸ்ரேல் அதனை மூடியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஸ்பெயின் உறுப்பினர் அனா மிராண்டா உள்ளிட்ட 17 நபர்கள் இந்த கப்பலில் பயணம் செய்தனர். 2007 முதல் முற்றுகையில் உள்ள காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை இந்த கப்பல் கொண்டு சென்றது.
2010ல் இதே போன்று நிவாரண பொருட்களை கொண்டு வந்த மவி மர்மரா கப்பல் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் துருக்கியை சேர்ந்த பத்து நபர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.