நீதிபதிகள் நியமனத்தில் தொடரும் அநீதி!

0

நீதிபதிகள் நியமனத்தில் தொடரும் அநீதி களையக் கோருகிறது பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஒன்பது நீதிபதிகளின் பெயரை நீதிபதிகள் நியமன பரிந்துரை குழு பரிந்துரை  செய்தது. இதில் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எந்த நீதிபதியின் பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.

இப்போக்கை வன்மையாக கண்டித்த பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அசோசியேஸன் இந்த ஒன்பது நபர்களின் பெயரையும் உச்சநீதிமன்றம் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களை சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அசோசியேசனின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துளள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமூகத்தினர் புறக்கணிக்கப்படும் போக்கை வன்மையாக கண்டித்துள்ளது. இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலகம் விடுத்துள்ள விரிவான அறிக்கை. சென்னையில் மாநில பொதுச் செயலாளர் முகம்மது ஷேக் அன்சாரியும் மதுரையில் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதரும் இந்த பத்திரிகை அறிக்கையை வெளியிட்டிடனர்.

1 2

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகள் மற்றும் 2015ம் ஆண்டில் புதிதாக நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளின் நியமன முதல் பட்டியலில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின்  பிரதிநிதித்துவம் அறவே இல்லாத நிலை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலகக் குழு கூட்டம் (state secretariat meeting) கவலை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (09.02.2015) அன்று சென்னையில் மாநிலத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலகக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

நீதித்துறை என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு தூண் ஆகும். சட்டமியற்றும் சபைகளான சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றின் முடிவுகளையும், நிர்வாகத்துறையான அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளையும் தேவைக்கேற்ப அவ்வப்போது பரிசோதித்து அவற்றை சரியான வழியில் கொண்டு செல்வது நீதித்துறையாகும்; அதிலும், குறிப்பாக மாநிலத்தின் உயர்ந்த நீதி அமைப்பு உயர்நீதிமன்றமாகும்.

இப்படிப்பட்ட நீதித்துறையில் அனைத்து வகுப்பனரும், அதாவது அனைத்து சமூகத்தினரும், மதத்தினரும் சரியான விகிதாச்சார அடிப்படையில்  பிரதிநிதித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைக் குழுவினரும் (Collegium) கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும், 2015ம் ஆண்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஒன்பது பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 2012ம் ஆண்டு மூன்று முஸ்லிம் நீதிபதிகள் இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, மாண்புமிகு நீதிபதி ஜி.எம். அக்பர் அலி அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தற்போது 2015ம் ஆண்டில் ஒரு முஸ்லிம் நீதிபதி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு நியமனத்திற்காக பரிந்துøரக்கப்பட்ட நீதிபதிகள் பெயர்ப் பட்டியலில் சில குறிப்பட்ட சமூகத்தினருக்கு எந்த பிரதிநிதித்துவம் இல்லை என்றும், மேலும் ஒரு சில குறிப்பட்ட சமூகத்தினருக்கு மித மிஞ்சிய அளவில் பிரதிநிதித்துவம் இருக்கின்றது என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கொந்தளித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய போது, மூத்த வழக்கறிஞர் திரு. ஆர். காந்தி அவர்கள் இதே உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த ரிட் மனுவை (W.P.No. 375/2014) விசாரித்த உயர்நீதிமன்றம் மேற்கண்ட பரிந்துரைப் பட்டியலுக்கு தடை விதித்தது. இதற்கு எதிராக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “அனைத்து சமூகத்தினருக்கும் போதுமான பரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 5.03.2014 அன்று உத்தரவிட்டிருந்தது”.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எதிர் ஆர். காந்தி மற்றும் பலர் (SLP (C) NO. 892  893/2014) என்ற மேற்கண்ட வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் ப.எஸ்.சவுஹான், செல்லமேஷ்வர் மற்றும் எம்.ஓய்.இக்பால் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நியமனங்கள் என்பது பிரத்தியேகமாக எந்தவொரு தனிப்பட்ட குழுவினராலோ அல்லது ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் குறுகிய சிந்தனை கொண்ட குழுக்களாலோ செய்யப்படக்கூடாது. நீதித்துறை நியமனத்தில் பன்முகத்தன்மை வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர், இன்று மிகவும் கவலையளிக்கக்கூடிய வகையில் ஒன்பது பெயர்கள் அடங்கிய நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலில் ஒரு முஸ்லிம் நீதிபதியின் பெயர் கூட இடம் பெறவில்லை என்ற ஒரு வித்தியாசமான சூழல் நிலவி வருகின்றது.

இப்போது ஒரு விஷயத்தை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும். அதாவது, 2014ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 14 பெயர்கள் அடங்கிய நீதிபதிகள் பெயர்ப் பட்டியலில் மூன்று முஸ்லிம் நீதிபதிகள் மற்றும் ஒரு கிறிஸ்தவ நீதிபதியின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேற்கண்ட மூன்று பேரில் ஒருவர் மூத்த மாவட்ட நீதிபதிகள் ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் நீதிபதியாவார்.

ஆனால், அந்த 2014ம் ஆண்டு பட்டியலில் இருந்த மூன்று நீதிபதிகளின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 2015ம் ஆண்டின் முதல் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை; ஒரு கிறிஸ்தவர் பெயர் கூட இல்லை.

தமிழக மக்கள் தொகையில் 6 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள், இன்று உயர் நீதித்துறையில் எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில் உள்ளனர். இதில் முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், 2011ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இருந்த மதுரையில் பணியாற்றும் பிரபல மூத்த வழக்கறிஞரான திரு. எம்.அஜ்மல் கான் அவர்களின் பெயர் எந்தவொரு காரணமுமின்றி அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், வருங்காலத்தில் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரக்கூடும் என சில குறுகிய மனப்பான்மை கொண்ட சக்திகள் நினைத்ததால் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் நியமன உச்சநீதிமன்ற பரிந்துரை குழுவினர் மற்றும் உயர்நீதிமன்ற பரிந்துரைக் குழு ஆகியோர் இது விஷயத்தில் பரிசீலனை செய்து, உரிய கவனம் செலுத்தி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழும ஒதுக்கீட்டில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு முஸ்லிம் பெயர்களை தற்போதைய 2015ம் ஆண்டின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லையென்றால், உயர் நீதி அமைப்புகளில் தங்கள் பரதிநிதித்துவத்தை உறுதி செய்திட வீதியில் இறங்கி போராடுவதை தவிர முஸ்லிம்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் வேறு வழி இல்லை. இந்தியாவில் நீதித்துறை காவி மயமாகி வருகின்றது என மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடிய இக்கட்டான சூழலுக்கு முஸ்லிம் சமூகத்தை தள்ளிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Comments are closed.