நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப்

0

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு நீதிபதி குரியன் ஜோசெப், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காக கொலிஜியம் வழங்கிய பரிந்துரை மீது இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மெளனம் காத்து வருவதை சுட்டிக்காட்டி இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை என்றும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கொலிஜியம் அளித்த பரிந்துரை மீது மத்திய அரசு காட்டும் பாராமுகம் உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து வழக்காக எடுத்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் 7 பேர் கொண்ட அமர்வு ஒன்றை உருவாக்கி இந்த தாமதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொலிஜியம் கொடுத்த பரிந்துரை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மூன்று மாத காலம் தாமதப்படுத்துவது வரலாற்றில் இதுவே முதன் முறை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிபதி ஜோசெப் குரியன் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், பின்னர் அவர் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். முன்னதாக நீதிபதி லோயா கொலை வழக்கு விசாரணை விவகாரம் தொடர்பாக நாட்டின் நீதித்துறை ஆபத்தில் உள்ளது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நீதிபதிகளில் நீதிபதி குரியனும் ஒருவர்.

இவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு விஷயமாவது, தற்போதைய நீதிபதி நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துவது அடுத்து வரும் நீதிபதிகளுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கும் என்றும் அது, குறிப்பிட்ட நபர்களின் அதிருப்தியை பெறக்கூடாது என்றும் இல்லையென்றால் அவர்கள் துன்புற நேரிடும் என்பதுமாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், “இது நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மீதான அச்சுருத்தல் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் பார்க்க:

மத்திய அரசு நீதித்துறையை அழிக்க நினைக்கிறது: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் இல்லாமல் காலியாக இருக்கும் நீதிமன்றங்கள்: தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர்

Comments are closed.