நீதிபதி லோயா கதிரியக்க விஷத்தால் கொலை செய்யப்பட்டாரா? விசாரிக்கும் பாம்பே உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச்

0

நீதிபதி லோயா கதிரியக்க விஷத்தால் கொலை செய்யப்பட்டாரா? வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பாம்பே உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச்

பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக இருந்த சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து பல சந்தேகங்கள் அவரது குடும்பத்தாலும் மற்றும் பலராலும் எழுப்பப்பட்டது . இந்நிலையில் அவர் கதிரியக்க விஷத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு குற்றச்சாட்டு வழக்கறிஞர் சதீஷ் உக்கே என்பவரால் எழுப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாம்பை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சிடம் முன்னதாக மனு அளிக்கப்பட்ட நிலையில் இருமுறை அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வழக்கை பாம்பே உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுனில் மனோஹர் மற்றும் சுமந்த் தியோபூஜாரி ஆகியோர் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இம்மனு முன்னதாக நீதிபதி லோயா இயற்க்கை மரணம் எய்தினார் என்று கூறி உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்றும் கூறினர்.

தற்போது நீதிபதி பிரதீப் தேஷ்முக் மற்றும் நீதிபதி ரோஹித் தியோ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன் மீதான மேற்படி விசாரணை இன்னும் இரண்டு வாரத்திற்குள் நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது தான் என்று 2018 ஏப்ரல் 19 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி A.M. கான்வில்கர் மற்றும் நீதிபதி D.Y.சந்திரசூத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி லோயா மரணம் குறித்த தீர்ப்பில் தலையிட எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறி நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நீதிபதிகள் ஷூக்ரே, மொடாக் அமர்வில், நீதிபதி லோயா விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் உக்கே தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர். இந்த வழக்கு தங்கள் அமர்வில் நடைபெறாது என்று நீதிபதிகள் அறிவித்த நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி நீதிபதிகள் ஸ்வப்னா ஜோஷி மற்றும் தேஷ்முக் அடங்கிய அமர்வின் முன் வழக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி ஸ்வப்னா ஜோஷி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

Comments are closed.