நீதிபதி லோயா கொலை வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

0

பாம்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையை சேர்ந்த நீதிபதிகள் ஷூக்ரே, மொடாக் மற்றும் ஸ்வப்னா ஜோஷி ஆகியோர் நீதிபதி லோயா கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சதீஷ் உக்கே அளித்த மனுவை விசாரிப்பதை விட்டு தங்களை விடுவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நீதிபதிகள் ஷூக்ரே, மொடாக் அமர்வில், நீதிபதி லோயா விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் உக்கே மனு அளித்திருந்தார். இந்த வழக்கு தங்கள் அமர்வில் நடைபெறாது என்று நீதிபதிகள் அறிவித்த நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி நீதிபதிகள் ஸ்வப்னா ஜோஷி மற்றும் தேஷ்முக் அடங்கிய அமர்வின் முன் வழக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, நீதிபதி ஸ்வப்னா ஜோஷி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அமித் ஷா, அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் குமார் சின்ஹாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளன. நீதிபதி லோயா கதிரியக்க விஷத்தினால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்தன் குமார் சின்ஹா உடனான அமித் ஷாவின் சந்திப்பு இதனை வெளிப்படுத்துகிறது என்று உக்கே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் நீதிபதி லோயா வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியதாகவும் அப்போது சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கு தொடர்பாக தன்னை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அச்சுறுத்துகிறார் என்று கூறியதாகவும் உக்கே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை இந்த நீதிபதிகள் மறுத்ததற்கு காரணம் என்ன என்று பதிவு செய்யப்படவில்லை. நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகங்கள் ஏதும் இல்லை, மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்று தோல்வியடைந்தனர் என்றும் நீதிபதி ஷூக்ரே முன்னர் தெரிவித்திருந்தார். நீதிபதி மொடக், நீதிபதி லோயா தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் அன்றைய இரவு தங்கியிருந்தவர். நீதிபதி ஸ்வப்னா ஜோஷியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் இவர்கள் அனைவரும் அன்று சென்றுள்ளனர். லோயா மரணித்த தினத்தில் அவருடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் அவர் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்திருக்கலாம்.

Comments are closed.