நீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு

0

நீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கேளவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை நீதிமன்றம் தனது மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சஞ்செய் R.பலேராவ் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் சாத்புட்டே , “ உச்ச நீதிமன்றத்தில் இது போன்ற பெஞ்சகள் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தங்களது மனு ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இந்திய உயர் நீதிமன்றத்தில் இது முதன் முறையாக இருக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களது மனுவை முதல் தகவல் அறிக்கையாக எடுத்துக்கொண்டு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பதவியில் இல்லாத மாநிலத்தின் மூன்று IPS அதிகாரிகளை கொண்டு தங்களது நேரடி கண்காணிப்பில் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நீதிபதி லோயா மர்மான முறையில் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த ஒரே மாதத்தில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்களை கருத்தில் கொள்ளாமல் ரகசிய விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு வேறு எந்த பணிகளும் வழங்கப்படக் கூடாது என்றும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகத்திடம் பலேராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நீதிபதி லோயா விவகாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்காது இருக்க இவர்கள் பணிநிமித்தமாக எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் செல்ல அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்துடன் நீதிபதி லோயாவிற்கு 100 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததற்கு மும்பை மற்றும் நாக்பூர் காவல்துறை அதிகாரிகள் மீது மகாராஷ்டிரா உள்துறை அமைச்ககம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வேண்டுகோள் வைத்துள்ளார். இன்னும் 2017 நவம்பர் 21 ஆம் தேதி காரவன் இதழில் வெளியான நீதிபதி லோயா மரணம் குறித்த செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்ட விஷயங்கள் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments are closed.