நீதிபதி மரணத்தில் அமித் ஷாவிற்கு தொடர்பு?

0

தனது மரணத்தின் போது நாட்டின் மிகப் பெரும்புள்ளிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த சொராபுதீன் ஷேக் என்கெளவுண்டர் வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்தார் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷான் லோயா. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி அப்போதைய குஜராத்தின் மாநில உள்துறை அமைச்சர் மற்றும் தற்போதைய பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் குஜராத் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் பலர். அப்போது இவரது மரணத்தை ஊடகங்கள் மாரடைப்பு என்று கூறியது. ஆனால் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷான் லோயாவின் மரணம் பல முடிச்சுகளால் சூழப்பட்டது என்று அவரது மரணத்தை சுற்றியுள்ள மர்மம் குறித்து அவர் குடும்பத்தினர் தற்போது மனம் திறந்துள்ளனர்.

நீதிபதி லோயாவின் மரணத்தின் போது அவர் விசாரித்து வந்த ஓரே வழக்கு சொராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு மட்டுமே. இந்த வழக்கின் போக்கு நாடு முழுவதிலும் உள்ள மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது. 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்த விசாரணையை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கு தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு மாற்றமாக 2014 ஆம் ஆண்டு நடுவில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி J.T.உத்பட் இந்த வழக்கில் இருந்து மாற்றப்பட்டு நீதிபதி லோயா இந்த வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டார். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 அமித்ஷா வழக்கும் நீதிபதிகள் மாற்றமும்:
முன்னதாக 2014 ஜூன் மாதம் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு நீதிபதி உத்பட் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்த விசாரணை தேதியான ஜூன் 20 ஆம் தேதியும் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவே இந்த விசாரணையை ஜூன் மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி உத்பட். ஆனால் ஜூன் 25ஆம் தேதி நீதிபதி உத்பட் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி லோயா நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோயா, 2014 அக்டோபர் 31ஆம் தேதி, குறிப்பிட்ட தேதியில் அமித்ஷா மும்பையில் இருந்தும் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பினார். இத்துடன் அவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தான் டிசம்பர் 1 இல் நீதிபதி லோயாவின் மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.

மரணத்திற்கு முன்பு:
லோயாவின் குடும்பத்தினரும் அவரது மரணம் குறித்து முன்னர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால் 2016 நவம்பர் மாதம் லோயாவின் மருமகள் நுபுர் பால பிரசாத் பியானி, நீதிபதி லோயாவின் மரணத்தை குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் தக்லேவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதி லோயாவின் குடும்பத்தினரிடம் அவர் மேற்கொண்ட பல சந்திப்புகளில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதில் லோயாவின் மரணம் தொடர்பாக வெளியான முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், அவரது மரணத்தை தொடர்ந்து நடைபெற்றவை, லோயாவின் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட போது நீதிபதி உடலின் நிலை, ஆகியவை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் லோயாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது குடும்பம் பல முறை கேட்டுக்கொண்ட போதும் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இரவு 11 மணியளவில் நீதிபதி லோயா அவரது மனைவிக்கு அவரது மொபைலில் இருந்து அழைப்பு விடுத்துள்ளார். நாற்பது நிமிடங்களுக்கும் மேலாக தனது அன்றைய தினம் குறித்து விவரித்துள்ளார் லோயா. அன்றைய தினம் தனது சக நீதிபதி சப்ன ஜோஷியின் மகளின் திருமண விசேஷத்திற்காக நாக்பூர் சென்றுள்ளார் லோயா. முதலில் அந்த திருமணத்திற்கு செல்ல அவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர் கட்டாயம் அந்த திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று மற்ற நீதிபதிகள் நிர்பந்தித்த காரணத்தால் அவர் அங்கு செல்ல சம்மதித்தார் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. அன்று தன் மனைவியிடம் அவர் தொலைபேசியில் பேசிய போது தான் திருமண விழாவில் பங்கு கொண்டதாகவும் திருமண வரவேற்ப்பில் பங்ககெடுத்ததாகவும் நீதிபதி லோயா கூறியுள்ளார். மேலும் தான் தன்னுடன் வந்த பிற நீதிபதிகளுடன் ராஜ் பவனில் தங்கியிருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.

மர்ம மரணம்:
லோயா தனது மரணத்திற்கு முன்னால் செய்த கடைசி தொலைபேசி அழைப்பு அதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு மறுநாள் அதிகாலை நீதிபதி லோயாவின் மரணம் குறித்த செய்தி அவரது குடும்பத்தை எட்டியுள்ளது. இது குறித்து நீதிபதி லோயாவின் தந்தை ஹர்கிஷான் லோயா தெரிவிக்கையில், மும்பையில் உள்ள லோயாவின் மனைவிக்கும், லத்தூர் நகரத்தில் இருந்த தனக்கும் துலே, ஜலகோன் மற்றும் ஔரங்காபாத்தில் உள்ள தனது மகள்களுக்கும் நீதிபதி லோயாவின் மரணம் குறித்து தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களிடம் நீதிபதி லோயா இரவு மரணித்துவிட்டதாகவும் அவரது உடலின் பிரதேச பரிசோதனை முடிவடைந்து அவரின் உடல் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கடேகோன் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும்கே கூறப்பட்டுள்ளது இந்த செய்தியை கேள்வியுற்றதும் ஒரு பூகம்பம் தனது வாழ்க்கையை சிதைத்துவிட்டது போன்று தான் உணர்ந்ததாக நீதிபதியின் தந்தை தெரிவித்துள்ளார்.

லோயாவின் குடும்பத்திடம் நீதிபதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. “எங்களிடம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையான தண்டே மருத்துவமனைக்கு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டது. என்று கூறப்பட்டது.” என்று ஹர்கிஷான் தெரிவித்துள்ளார்.

லோயா முதல் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் தண்டே மருத்துவமனை ஒரு சந்தேகத்திற்குரிய இடம் என்றும் அந்த மருத்துவமனையில் உள்ள ECG பழுதடைந்துள்ளது என்று பின்னர் தனக்கு தெரிய வந்ததாகவும் லோயாவின் சகோதரி பியானி தெரிவித்துள்ளார். தண்டே மருத்துவமனையில் இருந்து லோயா மெடிட்ரினா என்ற மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி லோயாவின் மரண செய்தி ஒரு சில செய்திகளிலே தான் வெளியானது. நாட்டின் அதிக எதிர்ப்பார்ப்பு உடைய வழக்கை விசாரிக்கும் ஒரு நீதிபதியின் மரணம், அதுவும் அவருக்கு முந்தைய நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கூட எந்த ஒரு கேள்வியும் ஊடகங்களில் அப்போது எழுப்பப்படவில்லை. இத மரணத்தை தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி திரினாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் லோயாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். இது சில ஊடக கவனத்தை பெற்றது. இதன் மறுநாள் சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் சிபிஐக்கு லோயாவின் மரணத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் திரினாமுல் எம்.பி.க்களின் போராட்டத்தினாலோ ருபாபுதீனின் கடிதத்தினாலோ எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களும் அதற்கு பிந்தைய நிகழ்வுகள் எது குறித்தும் செய்திகள் எதையும் வெளியிடவில்லை.

டைரிக் குறிப்பு:
நீதிபதி லோயாவின் மரணம் குறித்து ஊடகங்கள் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் கூட அவரது மரணம் குறித்து அவரின் குடும்பத்தினருக்கு பல சந்தேகங்கள் இருந்துவந்துள்ளது. அத்துடன் நீதிபதி லோயாவின் குடும்பத்தினரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது. நீதிபதி லோயாவின் சகோதரி பியானி அவரது டைரியின் தினக்குறிப்புகளில் அவர் மனதை பாதித்த லோயாவின் மரணத்தின் முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளை குறிப்பிட்டு வைத்துள்ளார்.

லோயா மரணித்த அன்று பியானிக்கு தன்னை நீதிபதி பார்தே என்று கூறிக்கொண்ட நபர் தொலைபேசி அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர் பியாணியை லட்டூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடேகோனுக்கு செல்லுமாறும் அங்கு தான் லோயாவின் உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர், பியானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதிபதி லோயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது என்றும் அவரது மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்றும் கூறியுள்ளார்.

மேலும் பியானியின் தந்தையிடம் ஈஸ்வர் பஹேதி என்ற ஆர்எஸ்எஸ் தொண்டர், லோயாவின் உடல் கடேகோணிற்கு அனுப்ப தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக கூறியுள்ளார். நீதிபதி லோலயாவின் மரணம் குறித்து ஆர்எஸ்எஸ் தொண்டரான ஈஸ்வருக்கு எப்படி மற்றும் ஏன் தெரியவந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

லோயவின் மற்றொரு சகோதரியான சரிதா மண்தானே இந்த சமயத்தில் லட்டுரில் இருந்துள்ளார். அவருக்கும் நீதிபதி பார்தே என்பவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் போது நீதிபதி லோயா நாக்பூரில் வைத்து மரணமடைந்துவிட்டதாகவும் அதனால் அவர் உடனடியாக நாக்பூருக்கு செல்லுமாறும் அழைப்பு விடுத்தவர் கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மருமகனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகையில் ஈஸ்வர் பஹேதி அங்கு வந்துள்ளார். அங்கு சரிதாவை சந்தித்த ஈஸ்வர் சரிதா நாக்பூர் செல்ல வேண்டாம் என்றும் நீதிபதியின் உடல் கடேகோனுக்கு அனுப்பப்பட்டாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சரிதா மற்றும் அவரது மருமகனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த நபருக்கு தான் இருக்குமிடம் மற்றும் நீதிபதி உடல் எங்கிருக்கிறது என்பது குறித்து எப்படி தெரியும் என்று தங்களுக்கு புரியவே இல்லை என்று சரிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பஹேதிக்கு அனுப்பப்பட்ட பத்திரிகையாளரின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

அன்றிரவு 11:30 மணியளவில் லோயாவின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஆனால் அவருடன் திருமணத்திற்கு சென்றாக கூறப்பட்ட நீதிபதிகளோ அல்லது வேறு எவருமோ லோயாவின் உடலுடன் வந்திருக்கவில்லை. இது லோயாவின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோயா அந்த திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என்று அவரது நண்பர்களான இரு நீதிபதிகள் மிகவும் வற்புறுத்தினார்கள் என்றும் ஆனால் அவர்கள் கூட லோயாவின் உடலுடன் வந்திருக்கவில்லை என்றும் லோயாவின் மரணம் மற்றும் பிரேத பரிசோதனை குறித்து தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த நீதிபதி பார்தே கூட அங்கு வந்திருக்கவில்லை என்றும் லோயாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். லோயா ஒரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி. அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருடன் யாரும் இல்லாதது தங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியதாக லோயாவின் சகோதரி அவரது டைரிக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். லோயாவின் மனைவி ஷர்மிளா அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் மும்பையில் இருந்து கடேகோன் சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சில நீதிபதிகள் சென்றுள்ளனர். அதில் ஒருவர் மீண்டும் மீண்டும், “இது குறித்து யாரிடமும் பேச வேண்டாம் என்று கூறியிள்ளார்.” லோயாவின் மகன் அனுஜ் இதனால் வெகுவாக அச்சமுற்றுள்ளார். ஆனால் அவர் சூழ்நிலை உணர்ந்து அவரது தாய்க்கு ஆறுதல் கூறியதாக பியானி குறிப்பிட்டுள்ளார்.

சட்டையில் இரத்தக்கறை:
மேலும் லோயா மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறினார்கள். ஆனால் லோயா பூர்ண நலத்துடன் இருந்தார். அவருக்கு ரத்த அழுத்தமோ அல்லது கொலஸ்ட்ராலோ இருக்கவில்லை. அவர் தினமும் முறையாக உடற்பயிற்ச்சி செய்பவர். இன்னும் லோயாவின் உடலை கண்டதும் அவருக்கும் மேலும் பல சந்தேகங்கள் வலுத்துள்ளது. லோயாவின் சட்டையின் கழுத்துப் பகுதியில் ரத்தக் கரைகள் காணப்பட்டதாக பியானி தெரிவித்துள்ளார். மேலும் அவரது கண்ணாடி அவரின் கழுத்துக்கு கீழ் இருந்ததாகவும் அவை லோயாவின் உடலில் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் பியானி தெரிவித்துள்ளார்.

பியானி தனது குறிப்பில், “(லோயாவின்) சட்டையின் பின் பகுதியில் உள்ள கழுத்துப்பகுதியில் இரத்தக்கறை காணப்பட்டது. அவரது பெல்ட் மறுபுறமாக முருக்கப்பட்டிருந்தது. அவரது பேண்டின் கிளிப்புகள் உடைந்திருந்தன. எனது மாமனார் கூட இதனை கண்டு சந்தேகங்கொண்டார். லோயாவின் தந்தை ஹர்கிஷான், லோயாவின் உடைகளில் இரத்தக்கறை இருந்ததாகவும் அவரது தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் அவரது சட்டையில் இரத்தக்கறைகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். “(லோயாவின்) சட்டையில் இடது தோள்பட்டையில் இருந்து இடுப்பு வரையில் ரத்தம் இருந்தது” என்று ஹர்கிஷான் கூறியுள்ளார்.

பிரத பரிசோதனை அறிக்கையில், உடைகளின் நிலை குறித்து (அவற்றில் இரத்தக்கறை இருந்ததா, ஈரமாக இருந்ததா, போன்றவை) குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் “காய்ந்திருந்தது” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மருத்துவராக பியானிக்கு பிரேத பரிசோதனையின் போது இரத்தம் வெளியேறாது என்று தெரிந்திருந்தது. அதனால் மீண்டும் ஒரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தான் கூறியதாகவும் ஆனால் லோயாவின் நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்க வேண்டாம் என்று கூறி அதனை அத்துடன் விட்டு விடுமாறு நிர்பந்தித்ததாக பியானி தெரிவித்துள்ளார்.

சட்டக் குழப்பங்கள்:
தங்கள் குடும்பம் கோபத்திலும் அதே நேரம் அச்சத்திலும் இருந்தது. மேலும் தாங்கள் லோயாவின் இறுதி சடங்குகளை செய்ய வர்புருத்தப்பட்டோம் என்று லோயாவின் தந்தை கூறியுள்ளார். லோயாவின் மரணம் குறித்து சட்ட நிபுணர்களும் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். லோயாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றால் அதற்கு முன் பன்ச்னாமா தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் மருத்துவ-சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்ட நடைமுறைப்படி, காவல்துறை அதிகாரிகள், இறந்தவரின் உடமைகளை சேகரித்து அதனை சீல் செய்ய வேண்டும். மேலும் அது அனைத்தையும் பன்ச்னாமாவில் குறிப்பிட்டு அதனை இறந்தவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் லோயாவின் மரணத்தில் இது எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்று பியானி தெரிவித்துள்ளார். தங்களுக்கு பண்ச்னாமாவின் நகல் எதுவும் தரப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் லோயாவின் மொபைல் போன் கூட பஹேதியால் தான் லோயாவின் குடும்பத்தாரிடம் தரப்பட்டதே அல்லாது காவல்துறையால் அல்ல என்று பியானி தெரிவித்துள்ளார். லோயாவின் மொபைல் அவர் இறந்த மூன்று அல்லது நான்காம் நாள் தான் தங்களுக்கு தரப்பட்டதாகவும், அதில் “இந்த நபர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற ஒரு குறுஞ்செய்தி தவிர மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது என்று பியானி தெரிவித்துள்ளார்.

லோயாவின் மரணத்தில் எழும் கேள்விகள்:
லோயாவின் மரணத்தில் பியானிக்கு பல சந்தேகங்களும் கேள்விகளும் உள்ளது. அவற்றில் முதலாமானது நெஞ்சு வழியால் பாதிக்கப்பட்ட லோயா ஏன் மருத்துவமனைக்கு ஆட்டோ ரிக்சாவில் கொண்டு செல்லப்பட்டார். “ராஜ்பவணிற்கு அருகில் எந்த ஒரு ஆட்டோ நிறுத்தமும் கிடையாது. காலை பொழுதிலும் கூட அப்பகுதியில் ஆட்டோ கிடைப்பது கடினம். அப்படியிருக்க லோயாவுடன் சென்றவர்களுக்கு எப்படி ஆட்டோ கிடைத்தது?” என்று பியானி கேள்வி எழுப்புகிறார். இன்னும் லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராஜ் பவனில் அப்போது ஒரு வாகனம் கூட இல்லையா? மகாராஷ்டிராவின் குளிர்கால கூட்டத்தொடர் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் பல முக்கியஸ்தர்கள் ராஜ்பவனிக்கு முன்கூட்டியே வருவது வழக்கம். இன்னும் நவம்பர் 30, டிசெம்பர் 1ஆம் தேதிகளில் ராஜ்பவனில் தங்கி இருந்தவர்கள் யார் யார்? இந்த கேள்விகளுக்கான விடை யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்துமா? போன்ற பல முக்கிய கேள்விகள் லோயாவின் மரணத்தில் எழுகின்றன.

அடுத்ததாக லோயாவின் குடும்பத்தினருக்கு லோயா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போதே ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் அவர் மரணித்த உடனாவது தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்போது கூட தகவல் தெரிவிக்கபப்டவில்லை. அவரது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரேத பரிசோதனையை யார் பரிந்துரை செய்தார்கள்? தண்டே மருத்துவமனையில் லோயாவிற்கு என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது. அங்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளின் அறிக்கை லோயா குடும்பத்திடம் ஏன் கொடுக்கப்படவில்லை?

லோயா குடும்பத்தினருக்கு கூறப்பட்டவற்றில் இருந்து, சுமார் இரவு 12:30 மணியளவில் லோயாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து அவர் தண்டே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு அவரே படியேறி நடந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்  மெடிட்ரினா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட அங்கு அவர் ஏற்கணவ  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தண்டே மருத்துவமனையில் நீதிபதி லோயாவிற்கு என்ன மருத்துவம் கொடுக்கப்பட்டது என்று அவரது குடும்பம் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கேட்ட போதிலும் அவர்கள் எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை என்று பியானி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் குழப்பம்:
இத்துடன் லோயவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கூட பல கேள்விகளை எழுப்புவதாக லோயாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசொதனியின் ஒவ்வொரு பக்கத்திலும் சர்தார் காவல் நிலைய ஆய்வாளர் ஒருவரின் கையெழுத்தும் “மையதாச்ச சிலத்பைவ்” (தந்தை வழி குடும்ப சகோதரன்) என்ற ஒருவராலும் கையெழுத்திடப் பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு அப்படி எந்த ஒரு உறவினரும் இல்லை என்று லோயாவின் தந்தை தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்ட நபர் யார் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், நீதிபதியின் உடல் மெடிட்ரினா மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சீதாபர்த்தி காவல்நிலையத்தில் இருந்து பங்கஜ் என்ற காவலர் (எண்:6238) ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இன்னும் லோயாவின் உடல் காலை 10:50 மணியளவில் எடுத்து வரப்பட்டதாகவும் 10:55 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கி 11:55 க்கு முடிவடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிபதி லோயாவிற்கு அதிகாலை 4 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு 1/12/2014 அன்று அதிகாலை 6:15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் முதலில் தண்டே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் மெடிட்ரினா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் லோயா 6:15 மணியளவில் மரணித்ததாக கூறப்பட லோயாவின் குடும்பத்தினருக்கு காலை ஐந்து மணி முதலே அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது எவ்வாறு என்று லோயா குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய ஒருவர் லோயாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது போன்று வெட்டி மறுபடியும் தைத்துவிடுமாறு கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்தை ஒட்டி இத்தனை குழப்பங்களும் சதேகங்களும் சூழ்ந்திருக்க, முன்னதாக சொராபுததீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு ஆதரவாக தீர்ப்பு தர நீதிபதி லோயாவிற்கு நூறு கோடி ரூபாய் விலை பேசப்பட்டது என்ற ஒரு தகவலையும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயா அவரது மரணத்திற்கு சில வாரங்கள் முன்னதாக தன்னிடம் இந்த லஞ்சத்தை குறித்து கூறியதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த லஞ்சத்தை அப்போதைய பாம்பே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹித் ஷா கொடுக்க முன்வந்ததாக லோயாவின் சகோதரி தெரிவித்துள்ளார். இதனை மறைந்த நீதிபதி லோயாவின் தந்தையும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக நீதிபதி மொஹித் ஷாவிடம் கருத்து கேட்க காரவன் செய்தித்தளம் அவரை அணுகிய போது அவர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று அது தெரிவித்துள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்தை அடுத்து அவரது இடத்திற்கு பணியமர்த்தப்பட்ட நீதிபதி அமித்ஷாவை அந்த வழக்கில் இருந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே விடுவித்தார். நீதிபதி லோயாவிற்கு பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி M.B.கொசாவி, டிசம்பர் 15ஆம் தேதி தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமித்ஷா அளித்த விண்ணப்பத்தை ஏற்று அதன் விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதி நடத்தி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார். அவரை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ எந்த மேல் முறையீடும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐ விசாரித்த ஒரு வழக்கில் அது மேல் முறையீடு செய்யாதது வழக்கத்திற்கு மாறானது.

நீதிபதி லோயா மரணத்தை தொடர்ந்த இந்த சந்தேகங்களுக்கு பதில்களாக பல கூறப்பட்டாலும் அந்த பதில்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புவதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

-நன்றி காரவன்

Comments are closed.